எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிறக்கும் குழந்தைகளின் பாலின விகிதத்தில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதாக அரசு வெளியிட்டுள்ள ஆய்வுத்தகவல் கூறுகிறது.இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதே!

2007ஆம் ஆண்டு முதல் 2016ஆவது ஆண்டு வரையிலான குழந்தைகள் பிறப்பு பதிவுகளின்படி, பிறக்கும் குழந்தைகளின் பாலின விகிதம் குறித்து ஆராயப்பட்டு, ஆய்வறிக்கை மத்திய அரசின் பதிவுத் துறையின் சார்பில் வெளியாகியுள்ளது.

அதன்படி பல மாநிலங்களிலும் பிறக்கும் குழந்தை களின் பாலின விகிதம் முறையாக இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக அரியானா, பஞ்சாப் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் சுகாதார முறைகள் நன்றாகவே பராமரிக்கப்பட்டு வந்தநிலையில், தற்பொழுது நிலைமை தலைகீழாக மாறிக் கொண்டிருக்கின்றது. பிறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகள் விகிதம் பெருமளவில் குறைந்து வருகிறது. கருநாடக மாநிலத்தில் 2007ஆம் ஆண்டில் 1004ஆக இருந்து 2016 ஆம் ஆண்டில் 896 ஆக குறைந்துவிட்டது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 976இலிருந்தது 806ஆக குறைந்துள்ளது. நாட்டிலேயே ஆந்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாலின விகிதத்தில் மிக அதிக அளவில் பெண்குழந்தைகள் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.

பிற மாநிலங்களைப்போலவே தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பாலின விகிதம் மோசமாக உள்ள பெரிய மாநிலங்களில் ஆறாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 2007ஆம் ஆண்டில் 935 ஆக இருந்த பெண்குழந்தைகள் விகிதம் 2016ஆம் ஆண்டில் 840ஆக சரிவடைந்துவிட்டது.

நாடுமுழுவதும் பாலின விகிதம் 903இலிருந்து 877ஆகக் குறைந்துவிட்டது. பாலின விகிதத்தில் ஆண்குழந்தைகளின் எண்ணிக்கையை விட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும்,  தென்னிந்திய மாநிலங்களில் மோசமடைந்து வருவதும் ஆய்வறிக்கையின்மூலம் தெரிய வந்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் பிறக்கின்ற குழந்தைகள் பதிவு நூறு விழுக்காடாக உள்ளது. ஆகவே, பதிவாக வில்லை எனக் கூறமுடியாது. 2016ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவல்களின்படி, இயல்புக்கு மாறாக நிலைமை மோசமடைந்து வருகிறது. குறிப்பாக அந்த ஆண்டில் பிறந்த குழந்தைகள் பதிவில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டிலிருந்து பிறந்த குழந்தைகள் குறித்து முறையாக பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிறப்புப் பதிவுகளைக் கொண்டே அரசு திட்ட மிடுதலுக்கான கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். அதனாலேயே தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் கவனமாகப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருவிலிருக்கும் குழந்தைகள் மற்றும் பிறக்கும் குழந்தைகள் குறித்த சோதனைகளுக்கான தொழில்நுட்பச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம், கருவிலேயே பெண் சிசுக் கருக்கலைப்புகளுக்கான வாய்ப்புகள் ஒழிக்கப்பட்டுவிடும் என்பதில் எவ்வித அய்யத்துக்கும் இடம் கிடையாது. ஆனால், அது மட்டுமே போதாது என்கிற நிலை உள்ளது.

அச்சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், முறையாக வழக்கு தொடரப்படுவது கிடையாது. பெண் குழந்தைகளுக்கு எதிராக இந்தப் பாரபட்சங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது இருக்கின்ற நிலை தொடர்ந்தால், எதிர்வரும் காலத்தில் விரைவில் மிக மோசமான சமுக, பொருளாதார பிரச்சினைகளுக்கே வழிகோலும்.

கருநாடக மாநிலத்தில் 98 விழுக்காடாக பிறப்புப் பதிவுகள் இருந்து வருகின்றன. 2011ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பாலின விகிதத்தில் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. அரசு மற்றும் பல நிலைகளிலும் இந்நிலையை மாற்றுவதற்கான தேவை உருவாகியுள்ளது.

நாடுமுழுவதும் பிறப்புப் பதிவுகளின் மூலம் கிடைத்து வருகின்ற தகவலின்படி, மிக மோசமான பாலின விகிதத்தைக் கொண்டுள்ள அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் விழித்துக்கொண்டுள்ளன. அது எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்திட வேண்டும்.

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிப்பது விஞ்ஞான கண்ணோட்டத்தில் - பெண் தான் என்றாலும், ஆண் குழந்தையையே தான் தாயான ஒரு பெண்ணும் விரும்பும் மனப்பான்மை இருக்கவே செய்கிறது. "ஜான் பிள்ளையாக இருந்தாலும் ஆண் பிள்ளை" என்பது போன்ற பிற்போக்குப் பழமொழிகள் உலா வருகின்றன.

இந்த மனப்பான்மை முதலில் ஒழிக்கப்பட வேண்டும். கருவிலேயே பெண் குழந்தையைச் சிதைக்கும் கொடு மைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

ஆண் - பெண் சமத்துவம் எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்தப்படுவதே இறுதித் தீர்வாகும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner