எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 2014-ஆம் ஆண்டைப்போல் எந்த ஒரு அலையும் வீசப்போவதில்லை; இதே போன்ற ஒரு சூழலைத்தான் காங்கிரசும் அன்று எதிர்கொண்டது; படுதோல்வி அடைந்தது, ஆனால் அந்த தோல்விகள் அனைத்தும் பாஜகவிற்கு சாதமாக அமைந்த காரணத்தால் மோடி அரியணை ஏறும் சூழல் ஏற்பட்டது.

நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, ரிசர்வ் வங்கி கையிருப்பை கொடுத்து பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் அளவிற்கு மோசமான சூழலுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டை தள்ளியது.

வேலையின்மைப் பிரச்சினைகளும், விவசாயிகளின் அவலங்கள் போன்றவையும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் எதிரொலிக்கின்றன. இதுவே பாஜகவின் தோல்வியை உறுதிசெய்யும் ஒன்றாக உள்ளது. இந்த நிலைமையைச் சமாளிக்க  பாஜக அரசு தன் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் நலத் திட்டங்கள் என்ற பெயரில் கடைசி நேர 'மாயாஜால' வித்தையை காட்டியது.  மேலும் முக்கியமான ஒரு செயலைச்செய்துள்ளது. அதாவது பொருளாதார வீழ்ச்சி, வேலை வாய்ப்பின்மை போன்ற செய்திகள் வருவதைத் தடுக்க  திசைதிருப்புதல் எனும் பாணியைக் கையிலெடுப்பதே அந்தத் தேர்தல் வியூகம்; எதிர்க்கட்சிகளை மடக்குதல், இந்துத்துவ பிரச்சினைகளை மீண்டும் உயிர்பெறவைத்தல், தேசப்பற்று என்ற பெயரில் வன்முறையைத் தூண்டிவிடுவது போன்றவை பாஜக மற்றும் அதன் தலைமை அமைப்பிற்குச் சாதாரணமான ஒன்றுதான்.

சாரதா சிட் ஃபண்ட் ஊழல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் சிபிஅய் அதிரடி காட்ட முற்பட்டதும், பண மோசடி புகாரில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதும் இவை அடுத்தடுத்து அரங்கேறியதும், பாஜகவின் வியூகத்தின் ஒரு பகுதியே. ஆனால், இதை பாஜக செயல்படுத்திய நேரம் முற்றிலும் சந்தேகத்திற்குரியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் கொல்கத்தா காவல்துறை ஆணையரிடம் நேரில் தங்கள் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை என்று சிபிஅய் வாதிடுவது தர்க்க ரீதியில் சரியே. ஆனால், 2014இல் பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை இப்போது வாதத்திற்கு முன்வைப் பதில் இருந்தே அதன் தேர்தல் நேர நாடகம் என்பது வெளிப்படுகிறது.

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடவடிக் கைகள் பெரிதாக எதுவுமில்லை என்பது இங்கு கவனிக்கத் தக்கது. அதேவேளையில், அந்த வழக்கில் தொடர்புடைய முகுல் ராய் திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாஜகவுக்குத் தாவிய பிறகு, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடு விக்கப்பட்டதும் நடந்தேறியது. தூசி படிந்த வழக்குக் கோப்பு களைத் திடீரென எடுத்து, வேலைகளைத் துரிதப்படுத்துவதிலி ருந்தே பாஜகவின் தாக்குதல் முறையைக் கண்டுகொள்ள முடிகிறது.

ராபர்ட் வதேரா விவகாரத்திலும் அரசியல் லாபம் காண பா.ஜ.க. முயற்சி செய்துள்ளது. 2014 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் சோனியா காந்தி குடும்பத்தையும், பிரியங்கா காந்தியின் துணைவரையும் கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மோடி. காங்கிரசை கேலி செய்யும்போது மருமகன் எனும் சொல்லை அடிக்கடி பயன்படுத்த அவர் தவறவில்லை. அந்த நேரத்தில் வதேரா மீது மக்களிடம் அனுதாபம் அவ்வளவாக இல்லை. மோடி அரசின் துவக்க ஆண்டுகளில் வதேராவிடம் விசாரணை அமைப்புகள் விசாரித்தது, அரசியல் ரீதியிலும் நோக்கத்தக்கதுதான். சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்கில் வதேரா மீது குற்றம்சாட்டப்பட்டப்போது, அரியானா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சியில் இருந்தது. எனினும், இரு மாநிலங்களுமே பல ஆண்டுகளாக வதேரா மீதான வழக்கை முடிவுக்குக் கொண்டு வரவில்லை.

அதேபோல், லண்டனில் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியுடன் தொடர்பு இருப்பதாகவும், அங்கே பினாமி பெயரில் சொத்து இருப்பதாகவும் வதேரா மீது எழுந்த சர்ச்சைகளும் புகார்களும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டவை. இது தொடர்பான செய்திகள் 2016இல் செய்தித் தொலைக்காட்சிகளில் வெளியாகின. எனவே, உறுதியான வழக்கைப் பதிவு செய்யும் வகையில் வலுவான ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில், இவ்வளவு காலமாக பாஜக அரசும், சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருந்தன என்ற கேள்வி எழத்தானே செய்யும்?

பிரியங்கா காந்தி அரசியல் பதவியில் பொறுப்பேற்கும் அதே வாரத்தில், வதேராவுக்கு எதிரான வேலைகளைச் செய்யத் தொடங்கி, பாஜக தவறான கணக்குப் போட்டுவிட்டது. இது பாஜகவின் உள்நோக்கம் மீது சந்தேகம் கொள்ள வைத்த து மட்டுமின்றி, அவர்களது பீதியையும் பறைசாற்றிவிட்டது.

உறுதியான ஆதாரங்கள் ஏதுமின்றி, எதிர்க்கட்சித் தலை வர்கள் மீது சிபிஅய் அமைப்போ அல்லது அமலாக்கத் துறையோ வழக்கைக் கட்டமைக்க முயற்சி செய்வது நடக் கிறது. இவை அனைத்துமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அரங்கேறுகின்றன. பாஜக தான் எய்த அம்புகளால் தானே தாக்கப்படும் அபாயத்தில் சிக்கியிருக்கிறது. இந்த வழக்குகள் மீதான எந்த செயல்பாடும் இல்லாமல் இத்தனை ஆண்டு காலமாக அரசு முடங்கியிருந்ததன் காரணம் தெரியாமல் வலதுசாரி ஆதரவாளர்கள் விழிப்பிதுங்கிக் கிடக்கின்றனர்.

தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - உரிய வழிமுறைகளில் - குறுக்கு ழிகளால் அல்ல!

பதவிக் காலம் முடிவுக்கு வரும் தறுவாயில் ஊழலுக்கு எதிராகப் போர் முரசு கொட்டுவது சாமர்த்தியமான அரசியல் அல்ல. இத்தகைய செயல்கள் எதிரணிக்குச் சாதகமாகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner