எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடக்கு மாநிலங்களிலுள்ள ஊடகங்கள் கடந்த ஆண்டு மோடி சென்னைக்கு வருகை தந்த  போது நடந்த மிகப் பெரிய கருப்புக் கொடி போராட்டத்தை எள்ளளவும் வெளிக் கொண்டு வரவில்லை. ஆனால், சமூக வலைதளங்கள் வாயிலாக தமிழகத் தில் எழுந்த, மோடிக்கு எதிராக நடந்த கருப்புக்கொடிப் போராட்டம் அங்கு போய் சேர்ந்தது.  அதற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றும் சில தனி நபர்கள் - சிறு குழுக்கள் மட்டுமே வடக்கில் மோடிக்குக் கருப்புக்கொடி காட்டி வந்தனர்.

ஆனால் பாதுகாப்புத் - தளவாட கண்காட்சியை திறந்துவைக்க மோடி சென்னை வந்த போது திராவிடர் இயக்கத்தின் உணர்வாளர்கள் காட்டிய கருப்புக்கொடி பிரபல ஊடகங்களால் மறைத்து வைத்தும் கூட மணல் மூட்டை அடுக்கிய தடுப்பை உடைத்துக் கொண்டு காட்டாற்றுவெள்ளம் பாய்வதைப்போல் வட இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தின் பல பகுதிகளுக்கும் தமிழகத்தில் நடந்த மோடி எதிர்ப்பு செய்திகள் போய்ச் சேர்ந்தன.

எங்கு சென்றாலும் மோடி மோடி என்ற உச்சரிப்புடன் உள்ள காணொலிகளை மட்டுமே இந்திய செய்தி நிறுவனங்களிலிருந்து பெற்று ஒளிபரப்பி வந்த ஊடகங்கள் - முதல் முதலாக சமூகவலைதளத்தில் வெளியான சென்னை கருப்புக்கொடி போராட்டத்தை வெளியிட்டன. இது திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி! அதன் பிறகு தான் இதுவரை மோடிக்கு நாடு முழுவதும், உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு செய்திகள் அனைத்துமே இட்டுக்கட்டியவை என்று அனை வருக்கும் தெரியவந்தது. தமிழகத்திற்கு ஞாயிறன்று வருகை புரிந்த மோடிக்கு வடக்கில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக நம் தமிழகத்தில் ஒரு கலாச்சாரம் உண்டு; அது என்னவென்றால் ஒரு அரசியல் கட்சி தலைவர் வருகிறார் என்றால் விமான நிலையத்தில் இருந்து அந்த பிரமுகர் பயணம் செய்யும் அனைத்துப் பகுதிகளிலும் தொடர் வரவேற்புப் பதாகைகள் வைத்திருப்பார்கள், ஆனால் முதல் முதலாக மோடிக்கு இப்படித் தொடர்ந்து எதிர்ப்புப் பதாகைகளை வைத்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

முக்கியமாக ஆந்திராவின் பெரும்பாலான நகரங்களில் 'மோடி நோ என்ட்ரி' என்ற பதாகைகள் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் இருந்தன. பிரமாண்ட கருப்புப் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ஆந்திராவில் கடந்த சில வாரங்களாகவே மார்வாடி மொத்த வணிகர்கள் கருப்புப் பலூன்கள் விற்பதை தவிர்த்துவிட்டனர். இது தெரிந்தே ஆந்திரக்காரர்கள் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இருந்து கருப்புப் பலூன்களை வரவழைத்து குவித்து விட்டனர். பாஜகவினருக்கு 'சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடும்' என்ற அதீத நம்பிக்கை போலும்! ஆந்திரா மட்டுமல்ல; முழுப்பலத்துடன் பாஜக ஆட்சி அமைத்துள்ள அசாம் மாநிலத்திலும் இதே நிலைதான், தமிழகம், கேரளா, மேற்குவங்கம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை; ஆகையால் அங்கே கருப்புக்கொடி காண்பிக்கப்படுவதை ஏதாவது காரணம் சொல்லி எதிர்க்கட்சியினரின் காழ்ப்புணர்ச்சி என்று கதைக்கலாம்.

ஆனால் அசாம் மாநிலத்தில் நடந்த கருப்புக்கொடி போராட்டத்திற்கு என்ன பதில் கூறுவார் இந்த மோடி? அங்கே மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் மோடிக்கு எதிராக கருப்புகொடி போராட்டம் நடத்திவருகின்றனர்.  தேர்தல் காலத்தில் மட்டுமே திட்டங்களை அறிவித்து காங்கிரஸ் காலத்தில் துவங்கிய நலப்பணிகள் முடிவடைந்த நிலையில் அவற்றை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார். ஆனால் மோடியின் இந்த பசப்புப் பரப்புரைக்கு மயங்கிட அசாம் மக்கள் தயாராக இல்லை, ஆகையால் தான் மோடிக்குச் சென்ற இடம் எங்கும் எதிர்ப்புகள். அசாம் மாநிலத்தில் சனிக்கிழமை மாலை தலைநகர் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை செல்லும் போது வழியில் அசாம் இளைஞர் அமைப் பினர் அவருக்குக் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆளுநர் மாளிகையில் இருந்து திரும்பும் போது கவுகாத்தி பல்கலைக் கழக மாணவர்கள் கருப்புக் கொடி காட்டினார்கள். இந்த இரண்டு போராட்டங்களிலும் மாணவர்களோடு மக்களும் பெருமளவில் கலந்துகொண்டு கருப்புக்கொடி காட்டினார்கள். அதன் பிறகு  உசான் கடைவீதியில் உள்ள  காந்தியார் சாலை வழியே பிரதமர் மோடி தலைமைச் செயலகம் சென்றார். அங்கும் மாணவர்கள், பேராசிரியர்கள், மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கருப்புக் கொடி காட்டி குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். மேலும் 'மோடியே அசாமை விட்டு வெளியேறு!' என்று கூறி தங்கள் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தனர்.  கருப்புக்கொடி காட்டுவோம்  என்று கூறிய அமைப்பினரை வெள்ளிக்கிழமை அன்றே கைதுசெய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களே போராட்டத்தில் இறங்கியதால் மோடி கருப்புக்கொடியை எதிர்கொள்ள நேரிட்டுவிட்டது.

இந்த நிலையில் அசாம் மாநில தலைமைச் செயலகம் அருகே பேராசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று  திடீரென தங்கள் ஆடைகளைக் களைந்து, "நாங்கள் மனிதர்கள், நாங்கள் மத அடையாளங்களோடு பிறக்கவில்லை, இது எங்கள் மண்!  இங்கிருந்து வெளியேறுமாறுகூற மோடியே நீ யார்?" என்று  நிர்வாணமாக நின்றபடி முழக்கமிட்டனர். இது அசாம் மாநிலத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கி விட்டது. மாநிலத்தின் பல பகுதி களிலும் மோடியின் உருவப் பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. அத்துடன் கருப்புக் கொடிகளும், கருப்புப் பலூன்களும் அவர் செல்லும் இடம் எல்லாம் பறக்க விடப்படுகின்றன.

இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் விமர்சகர்கள் கூறும் போது "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாஜக காங்கிரசிடம் இருந்து மாநில ஆட்சியை பெரும்பான்மைப் பலத்துடன் கைப்பற்றியது. ஆனால் இந்த மூன்று ஆண்டில் மோடி மற்றும் இந்துத்துவ அமைப்பினரின் மோசமான நடவடிக்கைகள் காரணமாக செல்வாக்கை இழந்துள்ளது. இனி வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வடகிழக்குப் பகுதியில் இருந்து மோடியின் பாஜகவிற்கு ஒரு இடம்கூட கிடைக்காது" என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.  தமிழகத்தில் துவங்கிய நெருப்புப்பொறி வடகிழக்கிலும் பரவியது! வீழ்ச்சிப் படலம் தொடங்கி விட்டது. இதற்கிடையில் பல்வேறு 'ஜெகதலப் பிரதாபங்களை' எல்லாம் செய்து காட்டுவார்கள், வாக்காளர்கள் ஏமாந்துவிடக் கூடாது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner