எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் மீறி விசாரணை அதிகாரி களை மாற்றியது தொடர்பாக முன்னாள் இடைக்கால சிபிஅய் இயக்குநர் நேரில் வந்து விளக்கவும், சிபிஅய் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர் நகர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை செய்துவரும் அதிகாரியை தற்காலிக சிபிஅய் இயக்குநர் நாகேஷ்வரராவ் மாற்றினார். உச்சநீதி மன்றத்தின் ஆணையை மதிக்காமல் நடந்த இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கண்டித்தது மட்டுமல்லாமல், அப்போதைய சிபிஅய் இயக்குநர் நாகேஷ்வராவ் நீதிமன்றம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் உத்தர விட்டுள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தன்னிச்சையாக செயல்படும் அனைத்துத் துறைகளையும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் பிரதமர் நரேந்திரமோடி. இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது.

மோடி மற்றும் அமித்ஷா தங்களுக்குக் கிடைத்த ஆட்சி அதிகாரத்தை வைத்து தங்களின் மீதுள்ள குற்றங்களை மறைத்து வருகின்றனர். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் வழக்குகள் மற்றும் தொழிலதிபர்களின் நலனுக்காகவே இந்த ஆட்சி அய்ந்து ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட சிபிஅய் முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, உத்தரப்பிரதேச உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மீதான சிறுமி பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கை விசாரணை செய்து, அவரை சிறையில் அடைத்து அவர்மீதான அனைத்துச் சான்றுகளையும் சேகரித்துள்ளார். குல்தீப் சிங் செங்கார் - உன்னாவ் சிறுமி பாலியல் வழக்கில் நேரடி சாட்சியாக இருந்த - சிறுமியை சட்டமன்ற உறுப்பினருக்கு அறிமுகப்படுத்தி அவரது குடும்பத்திற்கு உதவுங்கள் என்று கூறிய சிறுமியின் உறவினர் ஒருவர் அய்யத்திற் கிடமான முறையில் மரணமடைந்தார்.

அவர் இந்த வழக்கின் மிகவும் முக்கிய சாட்சி ஆவார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பே பல சான்றுகள் சிபிஅய் வசம் சென்றுவிட்டன. இந்த நிலையில் குல்தீப்சிங்கை காப்பாற்றவேண்டுமென்றால் சிபிஅய் தலைமை யினால் மட்டுமே முடியும். ஆனால் சிறுமி பாலியல் வழக்கை விசாரித்துவரும் பிரிவினர் நேரடியாக அன்றைய சிபிஅய் இயக்குநராக இருந்த அலோக் வர்மா நேரடி கண்காணிப்பில்  செயல்பட்டனர்.  இந்த நிலையில் அலோக் வர்மா அங்கே இருக்கும் வரை குற்றவாளியான குல்தீப் சிங் செங்காரை காப்பாற்ற முடியாத நிலைமை இருந்தது. உத்தரப்பிரதேசத்தில் சாமியார் தலைமையில் ஆட்சி நடக்கிறது.  உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் செங்கார் 8 மாதங்களுக்கு மேல் சிபிஅய் கண்காணிப்பில் சிறையில் இருக்கும் போது அவரது தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

அவர் மீது பாஜக  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசைப் பொறுத்தவரை குல்தீப் சிங் செங்காருக்கு தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறது,  இதே போல் நீதிபதி லோயா அய்யத்திற்கிடமான மரணம் குறித்த விசாரணையும் முடங்கியுள்ளது. சமீபத்தில் அதாவது அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்கிய பிறகு அந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆணைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கு விளக்கம் கொடுத்த சிபிஅய், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மும்பை உயநீதிமன்றம் இது அய்யத்திற்கிடமான மரணம் இல்லை என்று கூறிவிட்டது. ஆகவே அந்த ஆவணங்கள் திரும்பப் பெறப்பட்டன என்று தெரிவித்தது. நீதிபதி லோயா வழக்கில் அமித்ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மிகவும் முக்கிய வழக்காக பீகார் மாநில  முசாபர் நகரில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் நூற்றுக்கணக்கான சிறுமிகள் பாலியல், வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். சிறுமிகளை மிரட்டியும், மயக்க மருந்து கொடுத்தும் உள்ளூர் பாஜக பிரமுகர்கள் உட்பட பலரின் பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் ஆளாயினர்; சில குழந்தைகள் கர்ப்பவதிகளாக ஆனார்கள்; இவர்களில் பெரும் பாலானோர் 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள்.  சிறுமிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வந்த தன்னார்வ மருத்துவக்குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னார் காப்பக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில்  தெரிய வந்த குற்றவாளி பீகாரில் நிதிஷ்குமாருடன் கூட்டணி  ஆட்சியில் உள்ள பாஜகவின் சமூக நலத்துறை அமைச்சர் ஆஷா குமாரியின் கணவர் ஆவார்.  இந்த விவகாரத்தில் சிபிஅய்-விரைந்து நடவடிக்கை எடுத்து   முக்கிய குற்றவாளி பிரிஜேஷ்சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகுப் பதவி விலகினார்.

இந்த வழக்கில் பீகார் பாஜகவின் பல்வேறு பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை யில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதால் இந்த வழக்கை விசாரித்துவரும் அதிகாரிகள் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரித்துவரவேண்டும் என்று ஆணை யிட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக   பாஜகபிரமுகர்கள் தொடர்ந்து கைதாகிவந்த நிலையில் திடீரென்று அலோக் வர்மாவை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விலக்கி விட்டு அந்த இடத்தில் இடைக்கால இயக்குநர் என்ற பெயரில் நாகேஷ்வர ராவை நியமித்தார் பிரதமர் மோடி. அவர் இடைக்கால இயக்குநர் ஆன உடனேயே குல்தீப் சிங் செங்கார், பீகார் பாஜக பிரமுகர் பிரிஜேஷ் சிங் தாக்கூர் உள்ளிட்ட பல கொடூர குற்றவாளிகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்துமே மாயமாகி விட்டன.

மேலும் இந்த வழக்குகளை விசாரணை செய்துவரும் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.  சிபிஅய்-யின் இந்த நடவடிக்கைமீது உச்சநீதிமன்றம் கடுமையாக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல் - சிபிஅய்.யின் அப்போதைய தற்காலிக இயக்குநர் பிப்ரவரி 12-ஆம் தேதி நேரில் வந்து விளக்கம் கொடுக்கவேண்டும் என்றும் ஆணையிட்டது. கடந்த ஆண்டு பெரும்பான்மை இல்லாத நிலையிலும் கருநாடக மாநில முதல்வராக அமர்ந்த எடியூரப்பா பகுத்தறிவாளர்கள் கவுரிலங்கேஷ், கல்புர்கி, கோவிந்த பன்சாரே மற்றும் நரேந்திர தாபோல்பர் கொலைவழக்கை விசாரித்துவரும் அதிகாரிகளை மாற்றும் உத்தரவில் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எடியூரப்பாவின் ஆணை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் அவராகவே முன்வந்து பதவி விலகினார். ஆட்சி அதிகாரம் கையில் உள்ளதால் சங்பரிவார் அமைப்புகளும், மோடி - அமித்ஷாக்களும் தங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், பிஜேபி, சங்பரிவார்களைக் காப்பாற்றவும், பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் வகையில் மட்டுமே கடந்த அய்ந்து ஆண்டுகளாக செயலாற்றினார்கள்; குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டார்கள் என்பது வெளிப்படை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner