எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையின்படி தமிழ் நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் மனுதர்ம  சாத்திர நூல் சுட்டுப் பொசுக்கப்பட்டது. (7.2.2019)

கட்டுப்பாடாக சிறு அசம்பாவிதங்களுக்கும் இடமின்றி, கழகத்திற்கே உரித்தான அந்த நேர்த்தியோடு, கட்டுப்பாட்டோடு இந்தப் போராட்டம் நடைபெற்றிருப்பது  பாராட்டுக்கும், பெருமைக்கும் உரியதாகும்.

"படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்" (மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் 17).

இத்தகைய மனுதர்மத்தை எரிக்கும் போராட்டத்தில் கணிசமான  எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்று கைதானது கைதட்டி வரவேற்கத் தகுந்ததாகும்.

"இப்பொழுதெல்லாம் மனுதர்மம் எங்கே இருக்கிறது?" என்று கேட்கும் சில 'அறிவு ஜீவிகள்'(?) இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பார்ப்பனர்களின் ஏடுகளைப் படித்துப் பார்க்கட்டும். சாவு வந்து தன்னை முத்தமிடும் நேரம்  வரை திருவாளர் சோ. ராமசாமி மனு தர்மத்தை எப்படியெல்லாம் தூக்கிப் பிடித்து எழுதினார் என்ற உண்மை தெரியுமா!

"திருக்குறள் மனுதர்மத்தின் சாரமே" என்று நாகசாமி என்ற (தொல் பொருள்துறை நிபுணராம் இந்த லட்சணத்தில்) பார்ப்பனர் ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகமெல்லாம் பரப்பிக் கொண்டுள்ளார் என்பதும் தெரியுமா?

காஞ்சிக் கோயில் பூசாரியான பரிமேலழகர் என்ற பார்ப்பனர் திருக்குறளுக்கு உரை எழுதுவதாகக் கூறி என்ன எழுதினார்?

'அறம் என்பதற்கு மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒதுக்கலும் ஆகும்!' என்று எழுதிடவில்லையா?

மனுதர்மம் கூறும் வருணம் - அதன் விளைவாகிய ஜாதி என்பது இன்று வரை தொடரவில்லையா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்துச் சட்டத்தின் மூல ஆதாரங்கள் யாவை? தர்மங்கள், ஸ்ருதி, ஸ்மிருதி இவைதானே? சூத்திரர்கள் சந்நியாசிகளாக ஆவதற்குத் தகுதியற்றவர்கள் என்று உச்சநீதிமன்றம் 1972இல் கூடத் தீர்ப்பு வழங்கிடவில்லையா?

(Air 1980 Supreme Court From of 1972 all 273) எஸ்.முந்தசாபா சல் அலி மற்றும் ஏ.பி.சென் ஜேஜே சிவில் முறையீடு எண்: 1802 நாள் 21.12.1979).

கிருஷ்ணசிங்: மேற்முறையீட்டாளர் வி.மதுரா அஹிர் மற்றும் இதரர்.

(அ) இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி 3, விதி 13 - வாதிப் பிரதி வாதிகளுக்கு இந்து தனிப்பட்ட சட்டம் பொருந்துவது பற்றி - சூத்திரர்கள் சன்னியாசிகளாக ஆவதற்குத் தகுதியற்றவர்களா என்பது பற்றி:

ஜதி அல்லது சன்னியாசி ஆவதற்கு சூத்திரர்கள் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்ட ஸ்மிருதி எழுதியவர்களால் நிர்ணயிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்த கடுமையான விதி, அரசியலமைப்பு சட்டம் பகுதி 3இன் கீழ் உறுதியளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் காரணமாக செல்லத்தக்கதல்ல என்ற கருத்து சரியானதல்ல. வாதிப் பிரதிவாதிகளின் தனிப்பட்ட சட்டங்களை அரசியலமைப்பு சட்டத்தின் 3ஆம் பகுதி தொடவே இல்லை (பக்கம் 17).

வாதிப் பிரதிவாதிகளின் தனிப்பட்ட சட்டங்களைக் கையாளும் போது, இந்து சட்டங்கள் பற்றி அங்கீகரிக்கப்பட்ட அதிகார பூர்வமான ஆதாரங்களின், அதாவது பல்வேறு உயர்நீதிமன்றங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளவாறு ஸ்மிருதிகள் மற்றும் அவற்றின் விளக்கவுரை களின் அடிப்படையில் மட்டுமே ஒரு நீதிபதி சட்டத்தை, அது எந்த ஒரு பழக்கத்தினாலோ அல்லது வழக்கத்தினாலோ அல்லது மற்றொரு சட்டத்தால் ரத்து செய்யப்பட்டதாகவோ அல்லது மாற்றப்பட்ட தாகவோ இல்லாதபோது, நடைமுறைப்படுத்த வேண்டுமேயன்றி, நவீன காலத்திய தனது சொந்தக் கருத்தினை அறிமுகப்படுத்த இயலாது (பக்கம்: 17).

எங்கே மனுதர்மம் இருக்கிறது என்று கேட்கும் அதிகப் பிரசங்கிகள் இதனைத் தெரிந்துகொண்ட பிறகாவது வாலைச் சுருட்டிக் கொண்டால் சரி!

மனுதர்மத்தை இந்திய அரசமைப்புச் சட்டமாகக் கொள்ள வேண்டும் என்பதுதானே  ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரின் கொள்கை. அத னுடைய அரசியல் வடிவமான பாரதீய ஜனதா கட்சியின் கொள்கையும் இதுதானே!

ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர்  ஞானகங்கை (ஙிஸீநீலீ ஷீயீ ஜிலீஷீரீலீ) என்னும் நூலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளாரே!

ஸ்மிருதிகள் பதினெட்டு என்றாலும் மனுஸ்மிருதிதான் முதன்மை யானது.

பதினெட்டு ஸ்மிருதிகளுக்குள் மனு ஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந்தாலும்; அது ஒப்புக் கொள்ளத்தக்கதன்று. மனுஸ்மிருதிக்கு விரோதமான ஸ்மிருதி புகழடையாது என்று மனுதர்ம சாஸ்திரத்தின் பீடிகை கூறுகிறது.

மனுநீதிக் கொடுமைக்கு வரலாற்று ரீதியாக ஓர் எடுத்துக்காட்டைக் கூறினால் போதும்.

மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்து வருங்கால் "ஸ்ஹஸ்ர சீர்ஷா புருஷ" என்ற வேத வாக்கியத்திற்குப் பொருள் தெரிவிக்கும்படி பார்ப்பனரல்லாதானொருவன் அரசனது குருவைக் கேட்கவும், இரக்கம் என்பது சிறிதுமில்லாத பார்ப்பனராகிய குருவானவர், அரசனிடம் சென்று, ஒரு முகூர்த்த காலத்திற்குச் செங்கோலை தன்னிடம் ஒப்பு விக்கும்படிக் கேட்டுப் பெற்றுக் கொண்டு தன்னிடம் வேதத்திற்குப் பொருள் கேட்டவனை வரவழைத்து, அவனது ஆசனத் துவார வழியாக ஒரு கழு ஊசியை உச்சிக்குமேல் எழும்பி இருக்கும்படி ஏற்றி, இந்தச் சூத்திரப் பயல் வேதத்திற்குப் பொருள் கேட்டான்: சூத்திரர்களுக்கு வேதத்தின் பொருள் இத்தன்மையதாகும் என்று கூறினார் (ஞான சூரியன் பக்கம் 62-63).

இதுபோல் எத்தனை எத்தனைக் குரூரங்கள்! எண்ணிப் பார்க்கும் பொழுது குருதி கொதிக்கவில்லையா?

மனுதர்மம் கூறும் வருணம் என்பது பிறப்பின்அடிப்படையிலானது என்பது தெளிவு;  இதனை நாம் விமர்சித்த நிலையில் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்பது பிறப்பின் அடிப்படையிலானது அல்ல - குணத்தின்  அடிப்படையில் வந்தது என்று 'சோ' போன்ற பார்ப்பனர்கள் எழுதுகோலைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டனர் - அப்படிக் கூறும் பார்ப்பனர்கள் இன்னும் உண்டு.

அவர்களை நோக்கி ஒரே, ஒரு கேள்வி பிர்மா தன் உடலுறுப்பு களிலிருந்து பிராமணன், சத்திரியன், வைசியர், சூத்திரன் ஆகியோரைப் படைத்தான் என்றால் இதன் பொருள் என்ன?

படைக்கும் பொழுதே இந்த  வருணத்தைப் படைத்தான் என்று ஆகிடவில்லையா?

அது ஒருபுறம் இருக்கட்டும்; பெண்களையும் பிராமணரல்லாதார் களையும் கொல்லுதல் பாவமாகாது (மனு அத்தியாயம் 11 - சுலோகம் 65) என்று கூறப்பட்டுள்ளதே - இது குணத்தின் அடிப்படையிலா பிறப்பின் அடிப்படையிலா?

ஒரு பொய்யைச் சொல்லி விட்டு  அதைத் தொடர்ந்து காப்பாற்றுவது கடினம் ஆகும். உண்மை அத்தகையது அல்ல - அதை மாற்றிச் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை அல்லவா!

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் இந்த மனுதர்மத்தை எரித்தனர் என்றால் அதன் காரண காரியம் சாதாரணமானதாக இருக்க முடியுமா?

1927,1981, 2017, 2019 என மனுதர்ம எரிப்புத் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இனியும் தொடரவே செய்யும். அது சட்டப்படி தடை செய்யப்படும் வரை நம் பணி ஓயப் போவதில்லை.

போராட்டத்தில் ஈடுபட்ட இருபால் தோழர்களுக்கும் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner