எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சகாரா நிதி மோசடி வழக்கில் விசாரணை செய்வது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை காவல்துறை ஆணையரை கைதுசெய்ய கொல்கத்தா சென்றது. இதை அறிந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிறு இரவில் இருந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இது வெறும் மம்தா பானர்ஜி மற்றும் சிபிஅய்-க்கு இடையே ஆன பிரச்சினை அல்ல, உண்மையில் இது இந்திய தேசியத்தின் அதிகாரப் பரவல் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும். சிபிஅய்  புலனாய்விற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். சிபிஅய் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் மக்களாட்சி நடை முறைக்குள் வராது, இது முழுக்க முழுக்க மத்திய அரசின் உள்துறை செயலாளரின் மேற் பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இதனுடைய அதிகாரம் டில்லி காவல்துறை சட்டம் 1948-இன் கீழ் வரையறை செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாநில ஆட்சியை மிரட்ட சிபிஅய்-அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். 1998-ஆம் ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் சிபிஅய் அதிகாரம் தொடர்பான வழக்கு ஒன்று வந்தது. அந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கு மாறியது. கடந்த 20 ஆண்டுகளாக அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. உச்சநீதிமன்றம் சிபிஅய் அதிகாரம் குறித்து இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இருப் பினும் கவுகாத்தி உயர்நீதிமன்றம் சிபிஅய் என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான அமைப்பு என்று கருத்து கூறியுள்ளது.

சிபிஅய் அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்  அந்த அந்த மாநிலங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் அனுமதி இன்றி விசாரணை என்ற பெயரில் எந்த நட வடிக்கையும் எடுக்க முடியாது, இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தும். சென்ற முறையும் இதே போன்று சிபிஅய் செயல்பட்டதால் தான் மேற்கு வங்கத்தில் சிபிஅய் நுழைய மம்தா பானர்ஜி தடை விதித்தார்.ஆந்திராவிலும் சிபிஅய் நுழைய தடை உள்ளது.   ஆனால் தற்போது சிபிஅய் மேற்குவங்கத்திற்குள் விசாரணை என்ற பெயரில் நுழைந்தது சட்ட விரோதமாகும். சிபிஅய் இடம் எந்த ஒரு விசாரணை தொடர்பான உத்தரவும் இல்லை (search warrant or court warrant).

சிபிஅய் அதிகாரிகள் எந்த அடிப்படையில் கொல்கத்தாவிற்குச் சென்றார்கள்? தாங்கள் வருவது குறித்தோ, அதற்கான காரணம் குறித்தோ எந்த ஒரு தகவலையும் மேற்கு வங்க அரசுக்குத் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஏற்கெனவே  சிபிஅய் சராதா சிட்பண்ட் தொடர்பான வழக்கில் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதிவரை விசாரணை செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடைவிதித்திருக்கும் போது - இது தெரியாமல் சிபிஅய் கொல்கத்தாவிற்கு விசாரணை என்ற பெயரில் எப்படி சென்றது என்று உள்துறை அமைச்சரகம் விளக்கம் தெரிவிக்கவேண்டும்.  தற்போது சிபிஅய் தலைவராக உள்ள ரிஷி குமார் சுக்லா காலத்தில் தான் வியாபம் ஊழல் பெரிதாக நடந்துள்ளது.  இதற்காகவே அவர் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு வியாபம் ஊழல் தொடர்பான சுதந்திரமான விசாரணை தேவை என்ற நோக்கோடு அவரை பதவியில் இருந்து நீக்கினார்கள். ஆனால் மோடி உடனடியாக வெறும் 20 நாட்களுக்குள் அவரை சிபிஅய் தலைவராக நியமித்துள்ளார். தற்போது வியாபம் ஊழலை மாநில அரசு மற்றும் சிபிஅய் இணைந்து உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் விசாரணை செய்துவருகிறது. என்பது குறிப்பிடத் தக்கது.

மாநில உரிமைகளைப் பறித்துப் பந்தாட நினைக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. தன்னுரிமை பெற்ற நிறுவனங்கள் எல்லாம் மோடி அரசாட்சியில் பதர்களாகிப் பறந்து கொண்டுள்ளன. சி.பி.அய். என்பது மக்களால் பரிதாபப்படும் அளவுக்கு மோடி ஆட்சி காலத்தில் மரியாதை இழக்கச் செய்யப்பட்டு விட்டது. பச்சைப் பாசிசத்தின் பச்சைக் குத்திக் கொள்ளவில்லைதான். ஆனால் பட்டவர்த்தனமாக பாசிச ஆட்சி பாய்ந்து பாய்ந்து மக்கள் உரிமைகளைத் தாக்கிக் குருதி குடித்துக் கொண்டுள்ளது.

நாட்களை எண்ணி - அதிகார பீடத்திலிருந்து பார்ப்பனீய பாசிச பா.ஜ.க. ஆட்சியைப் பந்தாட மக்கள் தயாராகட்டும்! மாநில முதல் அமைச்சர்கள் மம்தாவைப் பின்பற்றப்படட்டும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner