எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களால் எழுதித் தொகுக்கப்பட்ட நூல் நேற்று (17.1.2019) வியாழனன்று பிற்பகல் சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், இசைப் பேரருவி கவிஞர் ஈரோடு தமிழன்பன், எழுத்தாளர் இமையம் ஆகியோர் பாராட்டி நூலைப்பற்றி விமர்சன உரையைச் சிறப்பாக நிகழ்த்தினர். நூலாசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஏற்புரை வழங்கினார். நூல் வெளியீட்டு விழாவின் மேடையிலேயே ஏராளமான நூல்கள் விற்றுத் தீர்ந்தன.

தந்தை பெரியார்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுள் ஒன்று - 'பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி' என்று கூறியவர்தானே என்பது.

இதுகுறித்து தந்தை பெரியார் அவர்களே தன் நிலைப்பாட்டைக் கூறியதுண்டு. தந்தை பெரியார் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அன்று சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்றது.  அவ்விழாவில் கவிஞர் சுரதா தலைமையில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்க இறுதியில் தந்தை பெரியார் கூறிய கருத்து மிகவும் முக்கியமானது.

"நான் நமது தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று 31 வருடமாகக் கூறி வருகிறேன். நான் மொழியைக் குறை கூறவில்லை. அது உண்டான காலத்தைத்தான் கூறி வருகிறேன். அது உண்டாக்கப்பட்ட காலம் காட்டுமிராண்டி காலம்" என்று குறிப்பிட்டுள்ளார் ('விடுதலை' 16.9.1973).

காட்டுமிராண்டிக் காலத்தில் தோன்றிய மொழியில் பழைமை யான கருத்துகள் மொய்த்திருக்கின்றன என்பது சொல்லாமலே விளங்கும். "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?" என்ற நூலின் 11ஆம் பக்கத்திலே தந்தை பெரியார் அவர்களின் கருத்து இடம் பெற்றுள்ளது.

"பரமசிவனுக்கு உகந்த பாஷை தமிழ் என்றால், வைணவனும், துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திரப் பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா என்று யோசித்துப் பாருங்கள்."

('குடிஅரசு' 26.1.1936)

முதலையுண்ட பாலகனை மீட்ட தெய்வ தமிழ் என்று எல்லாம் சொல்லுகிறார்கள் அல்லவா அது குறித்துத் தந்தை பெரியார் கூறும் கருத்து முக்கியமானது.

"ஆயிரம் முதலைகளை வைத்துக் கொண்டு பாடிப் பாருங் களேன் - அவைகளில் எதுவாவது தான் தின்ற ஒரு மீனையாவது கக்குகிறதா என்று. தாழப்பாளிட்ட சிற்றறையின் முன்னின்றுதான் இலக்கணப்படியே மனம் உருகிப் பாடுங்களேன் - சிறிதாவது தாழ்ப்பாள் அசைகிறதா என்று? அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அன்று, தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை" என்று தந்தை பெரியார் கூறுவதில் என்ன தவறு?

"உரைப்பாருரையிகந் துள்கவல்வார் தங்களுச்சியா

யரைக்காடரவா வாதியு மந்தமுமானாய்

புரைக்காடு சோலைப் புக்கொளியூ ரவிநாசியே

கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே"

-சுந்தரமூர்த்தி தேவாரம்

திருப்புக்கொளியூர் என்று பழங்காலத்தில் வழங்கப்பட்ட அவிநாசி.  காசிக்குச் சென்றால் தான் முக்தி; அவிநாசியை நினைத்தாலே முக்தி என்ற சொல்வழக்கு உண்டு.

சுந்தரர் அங்கு சென்றபோது, எதிரெதிர் வீடுகளில் ஒரு வீட்டில் மங்கல ஒலியும் மறுவீட்டில் அமங்கல ஒலியும் கேட்டன. அதுகுறித்து சுந்தரர் விசாரித்தபோது, இரு வீடுகளிலும் இருந்த அய்ந்து வயதுச் சிறுவர்கள் இருவர் அருகிலுள்ள தாமரைப் பொய்கையில் நீராடச் சென்றபோது ஒருவனை முதலை விழுங்கியது தெரியவந்தது.  அதில் தப்பிய பாலகனுக்கு உபநயனம் செய்விக்கப்படுவதும், தமது குழந்தை இத்தருணத்தில் இல்லையே என்ற ஆற்றாமையால் எதிர்வீட்டுப் பெற்றோர் அழுவதும் உணர்ந்த சுந்தரர், பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று திருப்புக்கொளியூர்ப் பதிகம் பாடினார். முதலை பாலகனை உண்ட குளக்கரையில் எற்றான் மறக்கேன் என்று துவங்கும் பதிகம் பாடினார் சுந்தரர். பதிகத்தின் 4ஆவது பாடலில் முதலையை பிள்ளை தரச் சொல்லு என்று ஈசனுக்கே கட்டளையிட்டார் சுந்தரர். அதையேற்று, வற்றிய குளம் நிறைந்து முதலை அங்கு தோன்றியது; தான் அய்ந்தாண்டுகளுக்கு முன் விழுங்கிய பாலகனை 10 வயது சிறுவனாக உயிருடன் உமிழ்ந்து மறைந்ததாம் முதலை." இதனைத்தான் தந்தை பெரியார் வெறும் கற்பிதம், மந்திர ஜாலம் என்று சாடுகிறார்.

தமிழ் என்னவாக இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்புகிறார் என்பதை தந்தை பெரியார் கூற்றிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

"எனக்குத் தமிழ்மீது வெறுப்பு இல்லை. நான் வீட்டிலும், வெளியிலும் பேசுவது தமிழ், படிப்பது தமிழ், எழுதுவதும் தமிழ், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று, சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகிறது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகை யால் தமிழில் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாக அரசு கூற வேண்டியதாகிறது - இது வரவேற்கத்தக்கதே!" ('விடுதலை' 1.12.1970) என்று தந்தை பெரியார் கூறுவதிலிருந்து என்ன விளங்குகிறது?

தமிழ் விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும்  வளர வேண்டும் என்பதே தந்தை பெரியார் அவர்களின் எண்ணமாக விருப்பமாக - வேட்கையாக இருக்கிறது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

ஆங்கிலத்தையும், தமிழையும் ஒப்பிட்டு தந்தை பெரியார் கூறியுள்ள கருத்துகளும் முக்கியமானவை.

"தமிழ்மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்ன தற்கான காரணம், முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பது தானே தவிர, தமிழ்மீது எனக்குத்தனி வெறுப்பில்லை." ('விடுதலை' 1.12.1970) என்று தந்தை பெரியார் கூறியுள்ள கருத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால் தந்தை பெரியார் தமிழைப் பற்றித் தற்பெருமை பேசாமல், ஆக்க ரீதியாக அது உண்மையில் பெருமை பெற்ற விஞ்ஞான மொழியாக - பகுத்தறிவு மொழியாக வளர வேண்டும், வளர்க்கப்பட வேண்டும் என்ற தீராத ஆசை கொண்டவர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும்.

தமிழைப்பற்றி தந்தை பெரியார் கருத்தைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள திராவிடர் கழகம் (இயக்க) வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்களால் எழுதப்பட்ட "தமிழுக்கு என்ன செய்தார் தந்தை பெரியார்?" என்னும் நூலை வாங்கிப் படிப்பார்களாக! நன்கொடை ரூ.180 மட்டுமே.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner