எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மொழியாக இருந்தாலும், கலையாக இருந்தாலும் அவை மக்களின்அறிவு வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பயனுடையதாக இருக்கவேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் அடிப்படை எண்ணமும், செயல்பாடும் ஆகும்.

கலை கலைக்காகவே என்று சிலர் கூறுவதுண்டு; அப்படி சொல்லுகிறவர்கள் யார்? அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கத்தான் செய்கிறோம்.

நம் நாட்டுக் கலைகள் இதிகாசங்கள் எந்தத் தகைமையில் நடமாடுகின்றன என்பதுபற்றி தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

"இராமாயணம், பாரதம், கந்தபுராணம், பெரிய புராணம் என்னும் ஆரியர் ஆதிக்கமான சமய நூல்கள் இன்று தமிழர் கலையாகப் பாவிக்கப்பட்டும், அத்தமிழர் கலைகளைக் காப்பாற்றும் பொது நலத்தில் ஈடுபாட்டு - அவைகளைக் காப்பாற்ற உழைக்கிறோம்" என்று சிலர் செய்து வரும்  "கலை வளர்ச்சி, பாதுகாப்பு" கொள்கைகள், நமக்கு எவ்வளவுக் கேட்டைத் தரக் கூடியதாய் இருக்கின்றன என்பதை யோசித்துப் பார்த்தால் நமக்கு இது பித்தலாட்டச் செய்கை என்றும், அல்லாதவரை மானமற்ற மூடச் செய்கை என்றும் தோன்றாமலோ, ஆத்திரம் வராமலோ இருக்க முடியுமா என்று கேட்கிறோம்.

மற்றும் தமிழிசைக்கு ஆகப்பாடுபடுகிறோம் என்று சிலர் சொல்லிக் கொண்டு ஆரியக் கடவுள்கள், புராணங்கள் ஆகியவைகளைப்பற்றின சேதிகளும், மொழிகளும் மலிந்த பஜனைப் பாட்டுகளைப் பணம் கொடுத்துப் பாட வைத்தும், பணம் பெற்றுக் கேட்கச் செய்தும், பிரச்சாரமும் செய்து பரப்பிக் கொண்டு இருக்கும் தமிழிசை வளர்ச்சி, இசைக்கலை வளர்ச்சி செய்கையானது நமக்குப் பித்தலாட்டம் என்று தோன்றா விட்டாலும், முட்டாள்தனமான - தன்மானம் அற்ற கேடு விளைவிக்கத்தக்க செய்கை என்று தோன்றாமலோ ஆத்திரம் வராமலோ இருக்க முடியுமா என்று கேட்கிறோம்." என்று 'குடிஅரசு' தலையங்கத்தில் (22.1.1944) குறிப்பிடுகிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். கலை என்பது கலைக்காகவே என்று சொல்லும் நமது இன எதிரியான பார்ப்பனர்கள், கலை வழியாக பக்திச் சமாச் சாரங்களைத்தான் விநியோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இராமனைப் பற்றியும், கிருஷ்ணனைப் பற்றியும் ஆன்மா பற்றியும் எல்லாம் உருகி உருகித்தான் பாடுவார்கள். பெரும்பாலும் சமஸ்கிருத, தெலுங்குப் பாடல்களாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டின் பெரும்பாலான தமிழ்மொழி பேசும் மக்களுக்கு இவை எந்த வகையில் மகிழ்ச்சி தரக் கூடியதாகவோ, இரசிக்கத் தக்கதாகவோ இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவற்றில் மாற்றத்தைக் கொண்டு வராமல், நம் மக்களுக்கு எந்த வகையில் பயனுள்ள பணிகளைச் செய்ய முடியும்! கலையின், வடிவத்தில் மூடத்தனத்தையும், பக்தியையும் பரப்பி, பார்ப்பனீய ஆதிக்கத்தை பெரும்பாலான நம் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தும் விதமான செயற்பாடுகள்தான் இவை. பார்ப்பனர்களின் 'ஜெகத்குருவான' சங்கராச்சாரியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

"யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும் கூடப் பழைமை வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்து போய் எல்லாம் ஒன்றாகி விட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்த பிற்பாடுதான் இப்படி மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது; சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் தெரிகிறது."

'தெய்வத்தின் குரல்' முதல் தொகுதி பக்கம் 162  இவற்றைக் குறித்துக் கேள்வி கேட்டால் ஆதிக்கவாதியாக இருக்கக் கூடியவர்கள் இனத்துவேஷம் என்றும், மொழித் துவேஷம் என்றும், குறுகிய பார்வை என்றும் விதவிதமான வார்த் தைக்களைப் பயன்படுத்தி ஒரு பாதுகாப்பு அரணை அமைத்துக் கொள்வார்கள். வழக்கமாக இன எதிரிகளுக்குக் கிடைக்கும் விபீடண பட்டாளமும் அவர்களுக்குக் கூடுதல் பலத்தை  அளிக்கும்.

ஜெகத்துக்கே குருவாக இருக்கக் கூடியவர் என்று கூறும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதியின் இந்தக் குறுகிய புத்தி அகலப் பார்வையைக் கொண்டதாம். மாற்றம் கூடாது என்பவர்கள் விரிந்த பார்வை கொண்டவர்கள்; மாற்றம் தான் மாறாதது என்று கூறுபவர்கள் குறுகிய பார்வை கொண்ட வர்களாம், துவேஷிகளாம். பார்ப்பனர் அகராதியில் எல்லாம் தலைகீழ்ப் புரட்டல்தான்.

உண்மையாக மக்கள் தொண்டு செய்யக் கூடியவர்கள் இத்தகைய அப்பட்டமான உள்நோக்கம் கொண்ட குற்றச் சாற்றுகளை மலம் துடைக்கும் காகிதமாகக் கருதி, சிந்தனையால் சீரழிந்த ஆரியத்தின் அடிமைத்தனத்துக்குத் தலை குனிந்து வணக்கம் தெரிவிக்கும் பார்ப்பனர்அல்லாத மக்களின் மூளைக் குள் ஊடுருவி தலை நிமிரச் செய்வதற்கு தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆற்றி வந் திருக்கிற ஆக்க ரீதியான பணிகளும், பிரச்சாரமும் அளப் பரியனவாகும்.

திராவிடர்த் திருவிழா பொங்கல் என்று பரவலாக ஆக்கிய பெருமையும், சாதனையும் இந்த இயக்கங்களையே சாரும்.

இந்து மதக் கலை விழா என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஒன்றை உருவாக்கிய நேரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர்களின் கலை பண்பாட்டுப் புரட்சி விழா என்று திராவிடர் கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது சென்னை தலைநகரில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கியது.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக ஆட்சிக் காலத்தில் மானமிகு கலைஞர் அவர்கள் ஆணை பிறப்பித்த நிலையில், திமுக ஆட்சியைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனத் தலைமையிலான (ஜெயலலிதா) ஆட்சி அமைந்த நிலையில் அந்தஆணை ரத்துசெய்யப்பட்டது.

அந்த நிலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று உண்மை நிலையை உறுதிப்படுத்தும் வகையில், பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் கடந்த 15 ஆண்டு காலமாக தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழா வெகு நேர்த்தியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா மேலும் தமிழ்நாடு அளவில் விரிவுபடுத்தப்பட தமிழர்கள் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் முயற்சிப்பது அவசியமாகிறது.

அனைவருக்கும் திராவிடர் திருநாள் வாழ்த்துக்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner