எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'தைப் பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழி நம் நாட்டில் உண்டு. விவசாய நாடான தமிழ்நாட்டில் தைத் திங்கள் என்பது அறுவடைப் பருவம். அறுவடை என்பதுதான் ஆண்டு முழுவதும் உழைத்த விவசாயி அதற்கான பலனைக் காணும் கால கட்டம் ஆகும். அதனால்தான் அந்தப் பழமொழி மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தது.

ஆனால் அண்மைக் காலமாக அந்தப் பழமொழியை யாரும் பயன்படுத்துவதில்லை. காரணம், விவசாயம் என்பது நோய் வாய்ப்பட்ட ஒன்றாகி விட்டது.

மேட்டூர் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வந்த மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள்.

காலா காலமாகக் கிடைத்து வந்த தண்ணீரை கருநாடகம் அடாவடித்தனமாக நிறுத்தி விட்டது. கருநாடகத்தின் அணைகள் நிரம்பி, அணைகளுக்கே ஆபத்து என்ற நிலையில் தமிழ்நாட்டை வடிகாலாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதைபோல, கருநாடக எல்லைக்குள் புதிய புதிய அணைகளையும் கட்டி விட்டனர்.  இப்பொழுது மேக தாது அணையைக் கட்டும் வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டு விட்டனர்.

உலக அளவில் நீர்ப் பிரச்சினையில் சில நியதிகள் உண்டு. கீழ்ப்பகுதியில் உள்ளவர்களின் அனுமதியைப் பெறாமல் மேல் பகுதியில் உள்ளவர்கள் அணை கட்டக் கூடாது என்ற நியதிக்கு மாறாக ஒரு மாநில அரசு முயலுவதும், இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு ஒரு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுவதும் எத்தகைய அடவாடித்தனம், போக்கிரித்தனம்.

தமிழ்நாட்டு விவசாயிகள் இந்தியாவின் தலைநகரம் வரை சென்று போராட்டம் நடத்தியும் 'விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லை'.

விவசாயம் என்பது பஞ்சம, சூத்திர மக்களின் தொழிலாக உள்ள நிலையில், அதிகாரத்தின் மேல் நிலையில் உள்ள மேல் தட்டு உயர் ஜாதி பார்ப்பனர்கள் விவசாயத்தை அலட்சியப் பார்வையில் பார்க்கிறார்கள். விவசாயத்தின் மீது பார்ப்பனர்களுக்கு என்ன சினம்? இந்து மத சித்தாந்தப்படி விவசாயம் என்பது பாவத் தொழிலாகும். அப்படித்தான் அவர்கள் மனுதர்மம் கூறுகிறது.

பார்ப்பனர்கள் உழைக்காமல் வாழ்வதற்குச் சாஸ்திர ரீதியான ஏற்பாடுகளைச் செய்து வைத்து விடுவார்கள். அப்படி அழிக்கப்பட்டதுதான் இந்த விவசாயமும். சாஸ்திரம் சொல்லி விட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கு மேல் சிந்திக்க மாட்டார்கள். இந்த நிலையைத் தான் தங்களுக்குச் சாதகமாக  பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

விவசாயத்தைப் பாதிக்கச் செய்தால் தமிழர்களின் பண் பாட்டுத் தளமும் அடிபட்டுப் போகும், பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிலை பாதிக்கப்படும்.

இது ஒரு புறமிருக்க தமிழர்களின் புத்தாண்டு தான் தை முதல் நாள் என்பதாகும். 1921ஆம் ஆண்டிலேயே தமிழ் அறிஞர்கள் முடிவு செய்த ஒன்றாகும். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் - அவர்களின் ஆட்சியில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. பார்ப்பனர்கள் மட்டும் கடுமையாகவே எதிர்த்து வந்தனர் காரணம் தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு பெயர்கூட தமிழில்  இல்லை. அறுபது ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதப் பெயர்கள்தான்.

இந்தப் பார்ப்பன நிலைப்பாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவிப்பு என்பதால் அடுத்து ஆட்சிக்கு வந்த பார்ப்பன ஜெயலலிதா அம்மையாரின் ஆட்சியைப் பயன்படுத்தி தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டதை இரத்து செய்து மீண்டும் பழைய பார்ப்பன சமஸ்கிருதமய ஆண்டை நிலை நிறுத்தி விட்டனர்.

தமிழ்த் தேசியம் என்று வாய்க் கிழியப் பேசும் பேர் வழிகள்கூடப் பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டனர்.

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கலை  - இன்னொரு வகையில் ஆரியம் தன் சித்து வேலையைக் காட்டியது.

தமிழர்கள் வாய் மணக்கக் கூவும் 'பொங்கலோ பொங்கல்' என்ற விழாவுக்குப் புராண வண்ணத்தைப் பூசி சங்கிராந்தி என்ற சமஸ்கிருதப் பெயரையும் சூட்டி விட்டனர்.

"சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம். இது தேவர்களுக்கு விடியற் காலம். மகாசங்கிராமே சக்தி எனும் சக்தி தக்ஷிணாயனம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்தபடியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கினதால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப் பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவாய் அதஞ்செய்திருந்தபடியால், அப்பசுக்களைக் கொண்டு, அப்புலியுருக் கொண்ட சக்தியை ஓட்டின நாள். இதனை மாட்டுப் பொங்கல் என்பர்.

இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மையின் பொருட்டு தை மாதம் முதலில் அறுத்த, முதற் பயிரை மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ண மூர்த்தி அவதரித்தபின், அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டடைள இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள் கன்றுகளை இழந்து தடுமாற, கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிமக்களைக் காத்தான் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கிராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை அமைந்ததாம். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கிராந்திப் பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தளை அவிழ்த்து விட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசுகங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண் பொங்கல் எனவும் கூறுவர்."

அறிவுக்குப் பொருந்தக் கூடிய ஏதாவது ஒன்று இருக்கிறதா இதில்?

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் வகையில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை நிறுவி - தைப் பொங்கல்தான் தமிழர் தம் பண்பாட்டு விழா என்று நிலை நிறுத்துவதே நமது முக்கிய கடமையாகும். இப்பொங்கல் நாளில் இதனை ஒரு சூளுரையாக ஏற்றுச் செயல்படுவோம். பொங்கலோ பொங்கல்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner