எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா வுக்கு தன் திறமையை நிருபிக்க இடஒதுக்கீடு தேவைப் படவில்லை. அக்கட்சியின் ஆண் தலைவர்களைக் காட்டிலும் அவர் சிறப்பாகப் பணியாற்றினார்" என்று கூறியுள்ளவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (பி.ஜே.பி.).

இதன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார்? பெண் என்றால் தாழ்வானவர், ஆண் என்றால் அதிகாரமிக்கவர் 'ஆண்மையாளர்' என்ற பொருளில் தானேகூறுகிறார்.

இதுதான் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பா.ஜ.க. உணர்வு என்பது. அது என்ன ஆண் தலைவர்களைக் காட்டிலும்? இங்கு ஆண் - பெண் பிரச்சினை எங்கிருந்து வந்தது?

அப்படிப் பார்க்கப் போனால் சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிறார் - நிதின்கட்கரியோ கப்பல் போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத் துறை என்று ஒருபடி கீழே தானே இருக்கிறார்.

இந்த இடத்திலும் அந்த ஆண் - பெண் வேறுபாடு பார்க்கலாமா?

இந்த மனப்பான்மை கொண்டவர்கள்தான் பிஜேபியில் அதிகம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறவில்லையா? "கணவனைவிட பெண்கள் அதிகம் படித்து அதிகம் சம்பாதிக்கிறார்கள். கணவன் மார்களுக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள்  - அத்தகை யவர்களை விவாகரத்து செய்ய வேண்டும்" என்று கூறிடவில்லையா?

இப்படி எல்லாம் இவர்கள் சிந்திப்பதற்கும், சொல்லு வதற்கும், செயல்படுவதற்கும் காரணமே அவர்கள் கைக் கொண்டுள்ள அந்த இந்துத்துவா சிந்தனைதான். பால்யத்தில் தந்தையின் கட்டுப்பாட்டிலும், வாலிபத் தில் புருஷன் கட்டுப்பாட்டிலும், வயோதிகத்தில் மகனின் கட்டுப்பாட்டிலும் ஸ்திரீயானவள் இருக்க வேண்டுமே தவிர - எந்தக் காரணத்தை முன்னிட்டும் தன்னிச்சையான சிந்தனை உள்ளவர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் மனுதர்மம்.

அந்த மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று கூறுபவர்களிடமிருந்து இதனைத்தானே எதிர் பார்க்க முடியும்.

இரண்டாவதாக   மத்திய அமைச்சர் நிதின்கட்கரி என்ன சொல்ல வருகிறார்?

பிரதமர் இந்திராகாந்திக்குத் தன் திறமையை நிருபிக்க இடஒதுக்கீடு தேவைப்படவில்லை என்று கூறுகிறார்.

அதன் உண்மைத் தன்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும்!

இதன் பொருள் என்ன? இடஒதுக்கீடு தேவையில்லை என்பது திறமையை நிருபிக்கும் ஒரு செயலாகக் கருதுகிறார் என்று தெரிகிறது.

இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் என்போர் தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் என்பது வெள்ளிடைமலை. இந்த மக்கள் இந்து மனுதர்மக் கோட்பாட்டின் காரணமாக உரிமையற்றவர்களாக - ஏதுமற்றவர்களாக - கல்வி வாய்ப்பு முற்றிலும் மறுக்கப் பட்ட மக்களாக - பிறவி அடிமைகளாக - பஞ்சமர்களாக - சூத்திரர்களாக ஆக்கப்பட்ட நிலையில், அவர்களை மேல் நிலைக்கு உயர்த்தி கொண்டு வர கல்வி என்பது உயிர்க் காற்று - உத்தியோக வாய்ப்பு என்பது சமூக தகுதியை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் சமூக நீதியின் அடையாள மான இடஒதுக்கீடு.

இதற்குக் கால்கோள் செய்தது தமிழ்நாடுதான் - திராவிட இயக்கம்தான் - தந்தை பெரியார் மண்தான்!

இந்த அடிப்படை சமூக மாற்றத்துக்கான அம்சத்தில் பிஜேபியின் மனப்பான்மை எத்தகையது என்பதைப் பிரதிபலிப்பதுதான் நிதின் கட்கரியின் கருத்தாகும்.

சமூக நீதியில் இவர்களிடத்தில் குடியிருக்கும் அந்த ஆண்டான் - அடிமை மனப்பான்மை என்பது இந்த 2019ஆம் ஆண்டிலும் அகலவில்லை என்பதை மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் உணர்ந்து இவர்களை எல்லாத்தளத்திலும் வீழ்த்த வேண்டும் என்ற வீராவேச உறுதியை உரிமை வேட்கையோடு உணர்ந்திட வேண்டும் - வீதிக்கு இறங்கி வந்து சமரிட வேண்டும்.

தங்களுடைய திறமையை நிருபிக்கத்தான் இட ஒதுக்கீட்டை அலட்சியப்படுத்துகிறார்கள் - அதன் ஆணி வேரை வெட்டுகிறார்கள் - இந்தப் பிஜேபி வகையறாக்கள் என்பதைத்தானே இந்த மத்திய அமைச்சரின் கருத்து வெளிப்படுத்துகிறது.

அப்படியே இடஒதுக்கீட்டை பிஜேபி கொண்டு வர வேண்டும் என்றாலும் அது  ஏற்கெனவே கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள்மீது தானே கருணை வெள்ளமாக, அச்சாரப் புயலாக பாய்கிறது.

இவர்களை வீழ்த்தாவிட்டால் ஒடுக்கப்பட்ட மக் களுக்கு விடியல் இல்லை - இல்லவே இல்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner