எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தது எப்படி? மாபெரும் பொய்களை மக்களிடையே பரப்பி, அதைப் பெரும் பொருட்செலவில் ஊடகங்களும் மக்களிடையே பரப்பியதன் விளைவுதான் அதற்குக் காரணம்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மோடி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பொய்களுக்கு மேல் பொய்யாக அவிழ்த்துக் கொட்டுகின்றனர். ஒரு பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு வாய்க் கூசாமல் பொய்ப் பேசுவது குறித்து அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம்  இல்லை. ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பில் இவர்களது பொய்கள் எல்லை கடந்துவிட்டன. ரபேல் போர் விமான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் போடும் முன்பு மோடியும், அனில் அம்பானியும் பிரான்ஸ் நாடு சென்றனர். அதன் பிறகு அனில் அம்பானி ஒரு விமான உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ரிலையன்ஸ் டிபன்ஸ் என்ற பெயரில் துவங்குகிறார்.

இவர் துவங்கிய சில நாட்களில் மீண்டும் பிரான்ஸ் பறந்த மோடி (உடன் அம் பானியையும் அழைத்துக் கொண்டு) ரபேல் போர் விமானத்தின் உதிரிப்பாகங்களை வாங்கி இணைத்து முழு விமானமாக மாற்றும் வேலையை அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டார்.   இதனிடையே பிரான்ஸ் நாட்டு நிறுவனம் விமான உதிரிப் பாகங்களை இணைக்கும் வேலை அனுபவமுள்ள இந்திய ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்குத் தருவோம் என்று கூறியிருந்தது, அதனை ஏற்க மறுத்து ரிலையன்ஸ் நிறுவனத் திற்கு மட்டுமே கொடுக்கவேண்டும் என்று மோடி நேரடி யாகவே தலையிட்டுப் பேசியதாக ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையொப்பமானபோது இருந்த பிரான்ஸ் பிரதமர் ஹோலாண்டே கூறியிருந்தார்.  ரபேல் போர் விமான விவகாரத்தில் ஊழல் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான வேலைகள் என அனைத் தையுமே மோடி முன்னின்று செய்துகொடுத்தார். இந்த ஊழல் விவகாரம் குறித்து அவர்களது கட்சியினரே பேச ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, ஆனால் வழக்கின் போது தவறான தகவலைக்கொடுத்தும், ஒப்பந்த காகிதங்களில் சில இடங்களில் திருத்தியும் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மோடி அரசு. இதனை அடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  தள்ளுபடி செய்த பிறகு திருத்தங்கள் உள்ள ஒப்பந்தக் காகிதங்கள் தவறுதலாக நீதிமன்றம் சென்றுவிட்டது என்று மத்திய அமைச்சர் கூறிவிட்டார். இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரபேல் விவகாரம் பெரும் விவாதப் பொருளானது. நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பயந்து மோடி டில்லியில் இருந்தும் கூட நாடாளுமன்றம் செல்லவில்லை.

பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையொப்பத்தின் போது பாதுகாப்பு அமைச்சர், செயலாளர்கள் உள்ளிட்டோர் இருக்கவேண்டும். ஆனால் ரபேல் விமான ஒப்பந்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சரோ, பாதுகாப்புத் துறை செயலாளரோ செல்லாமல் மோடியுடன் அனில் அம்பானி, ரிலை யன்ஸ் நிறுவனப் பொருளாதார ஆலோசகர் மற்றும் எல்.என்.டி. என்ற தனியார் கனரக நிறுவனத்தின் உரிமை யாளர்கள் மற்றும் அதிகாரிகள் என முழுக்க முழுக்க தனியார்த் துறையினரே மோடியுடன் ரபேல் ஒப்பந்தத்தின் போது உடனிருந்தனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளிக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மோடிக்கு பதில் அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன் போன்றோர் பதிலளித்து கொண் டிருந்தனர் என்பதுதான் வேடிக்கை! வெள்ளியன்று (4.1.2019) மக்களவையில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், நிர்மலா கூறுவது பொய் என்று  மறுத்துள்ளார். ரபேல் விவகாரத்தில் மோடிக்கு ஆதரவாகப் பேசி ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை அவர் கூறிவருவதாக தெரிவித்தார்.

"நாடாளுமன்றத்தில் எச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்கப் பட்ட ரூ.1 லட்சம் கோடிக்கான ஒப்பந்தங்கள் குறித்த ஆவ ணங்களைக் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.  இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய நிர்மலா சீதாராமன், "பாஜக ஆட்சிக்கு வந்த பின், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத் திற்குள்ளாக முதல் போர் விமானம் கொள்முதல் செய்யப்பட்டு விடும். 2022ஆம் ஆண்டிற்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிற்குக் கிடைத்து விடும்" என்று உறுதி அளித்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அது தொடர்பாக ராகுல் காந்தி கேட்ட எந்த ஒரு ஆவணத்தையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யவில்லை.

2019 மக்களவைத் தேர்தலில் 'ரபேல்' பிரச்சினை பேருரு எடுத்துத் துவம்சம் செய்யும் என்ற அச்சத்தில் - பதற்றத்தில் பேசிக் கொண்டு திரிகின்றனர். ஆனால், உண்மைக் குத்தீட்டி அதனை வலுவிழக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner