எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள எந்த மத சம்பந்தமான வழிபாட்டுத் தலங்கள்பற்றியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி திரு. எஸ்.எம். சுப்பிரமணியம் ஒரு சிறப்பான தீர்ப்பினை வழங்கினார்.

"பொதுச்சாலை, நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து ஏராளமான கோயில்கள் கட்டப்பட் டுள்ளன. சில பேராசைக்காரர்கள், மாபியா கும்பல்கள் அரசு நிலங்களை அபகரிக்கவும், பணம் சம்பாதிக்கவும் பொது இடங்களில் கோயில்கள் கட்டுகின்றனர். அதனால், வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் சிலர் சாலையோரம் கோயில்களைக் கட்டுகின்றனர்.

இதுபோன்ற செயலை இந்து சமய அறநிலையத் துறை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. அது மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துவதாகி விடும்.

பொதுஇடங்களை ஆக்கிரமிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ கூடாது. தெய்வமாக இருந்தாலும், பொது இடங்களை ஆக்கிர மிக்க அனுமதிக்க முடியாது. அவ்வாறு ஆக்கிரமித்தால், அந்த தெய்வத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சட்டத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது.

எனவே, பொதுசாலை, புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் உள்ள சட்டவிரோத கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன்.

இந்த அதிகாரிகள், தமிழகம் முழுவதும் பொது இடங்களையும், நீர்நிலைகளையும், பொது சாலை களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த புள்ளி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்."

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது பாராட்டத்தக்க ஆணை என்றாலும் - இதற்கு முன்பாகவே உச்சநீதிமன்றமே (14.9.2010) அறுதியிட்டுச் சொல்லும் தீர்ப்பு வழங்கி விட்டது.

அனுமதி பெறாத கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவாராக்கள் மற்றும் பிற வழிபாட்டு இடங்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களிலிருந்தும், நடைபாதைகளில் இருந்தும் அகற்றுமாறும், அவை போக்குவரத்துக்கும் இடைஞ்சல் என்றும், கூட்ட நெருக்கடிக்கும் காரணமாகவும் இருக்கின்றன என்றும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்ததோடு, மாநில அரசுகளுக்கு அதனை நிறைவேற்ற இரண்டு வார கால அவகாசத்தையும் அளித்தது; பல முறை இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது, பல மாநிலங்கள் இதைப்பற்றிய பிரமாணப் பத்திரமோ, நடவடிக்கை எடுக்கப் பட்டது குறித்தோ எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற அமர்வு தன் அதிருப்தியைத் தெரி வித்ததுண்டு.

தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக 77,450 கோயில்களும், ராஜஸ்தானில் 58,253 கோயில்களும், குஜராத்தில் 15,000 கோயில்களும் அனுமதி பெறாமல் பொது இடத்தில் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ளன. அருணாசலப் பிரதேசம் ஓர் எடுத்துக் காட்டான மாநிலமாகத் திகழ்கிறது. ஒரு கோயில்கூட அனுமதி யின்றி அங்குக் கட்டப்படவில்லை. இது குறித்து உச்சநீதிமன்ற அமர்வு நாகரிகமான  மாநிலம் என்று பாராட்டைப் பதிவு செய்தது.

2009ஆம் ஆண்டிலேயே ஆக்கிரமிப்புக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கட்டளை பிறப்பித்தும் அதனை செயல்படுத்தவில்லை என்று சினத்துடன் கூறிய உச்சநீதிமன்றம், அத்தகையக் கோயில்களை அகற்றிடாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும் என்றும் கட்டளையையும் பிறப்பித்தது.

அதற்குப் பிறகும்கூட உச்சநீதிமன்ற உத்தரவை வெறும் காகிதம் என்று  நினைத்து மாநில அரசுகள் - குறிப்பாக தமிழ்நாடு அரசு நடந்து கொண்டு வருவது வெட்கக் கேடு!

இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றமும், உத்தரவிட்டு விட்டது. சட்டமும், தீர்ப்புகளும் மதங்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தாதா?

எந்த அளவுக்குத் தமிழ்நாடு அரசு மோசமாக போய் விட்டது என்றால் பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் எந்தவித வழிபாட்டு சின்னங்களும் இருக்கக் கூடாது என்ற தெளிவான ஆணையிருந்தும், குமரி மாவட்டம் செண்பக ராமன் புதூரில், கோயில் எழுப்பப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்குக் கழகத் தலைவர் புகார் செய்தும், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கண்டு கொள்ளாதது ஏன்?

உச்சநீதிமன்றத்திற்கும் இவற்றில் பொறுப்பு இருக்கிறது. பல முறை எச்சரித்தும், ஆணை பிறப்பித்தும் செயல்படுத்தாத மாநில அரசுகளின்  தலைமைச் செயலாளர்களைக் குறைந்த பட்சம் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டாமா? இவர்கள் மயிலே மயிலே என்றால் இறகு போடுவார்களா?

உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தட்டும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner