எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை பெரியார் திடலில் நவம்பர் திங்களில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 102ஆம் ஆண்டு விழா (நவம்பர் 20) ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு (நவம்பர் 26) மனுதர்மத்தின் சாரமே திருக்குறள் என்று நாகசாமி என்ற பார்ப்பனர் எழுதிய ஆங்கில நூலுக்கு மறுப்புக் கூட்டம் (7.11.2018) - டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற தமிழர் தலைவரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்ற பெயரில் நடைபெற்ற 'விடுதலை' சந்தா வழங்கும் விழா - பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை கோரி மதிமுக, தி.க. சார்பில் நடைபெற்ற (3.12.2018) - ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் திராவிட இயக்கத் தலைவர்களும், பொதுவுடைமைக் கட்சியின் முன்னணியினரும் ஆற்றிய உரைச் செறிவு மிகவும் உன்னதம் வாய்ந்தவை - முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இந்தக் கால கட்டத்தில் அதிகார சக்தியோடு ஆரியம் - இந்துத்துவா பெயரில் நடத்தும் அட்டகாசங்கள், அத்துமீறல்கள், வன்முறைகள், அதிகார ஆக்ரமிப்புகள், ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் அகங்கார செயல்பாடுகள், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் மனித குல விரோத செயல்கள், பசுவதை என்ற பெயரால் தாழ்த்தப்பட்டோரைப் படுகொலை செய்யும் பாதகங்கள், பெண்களை இரண்டாம் தரக் குடி மக்களாக்க தொடரும் இழி செயல்கள், சிறுபான்மையினர் மீதான கொலை வெறித் தாக்குதல்கள் தலைவிரித்து நிர்வாணக் கூத்தாடுகின்றன.

இன்னொரு பக்கத்தில் சமூக நீதிக்கு எதிரான தந்திரங்கள் சூழ்ச்சிகள் (எடுத்துக்காட்டு 'நீட்' போன்றவை) இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள், வருணாசிரமக் கல்வி முறைகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் ஒரு சார்புப் போக்குகள் மாநில உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கில் காய்களை நகர்த்துதல், இவை எல்லாம் இந்தக் கால கட்டத்தில் வெகு மக்களுக்கு முற்றிலும் எதிரானவை. ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் மீண்டும் மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டி ஆரிய வர்க்கத்தை நிலை நாட்டும் நட வடிக்கைகள்.

இந்திய அளவில் இவை நடைபெற்றாலும் தமிழ் நாட்டளவில் இவற்றை எதிர்த்து முறியடிக்கும் மாபெரும் பேராயுதம் தந்தைபெரியாரியலே என்ற உண்மைக் கருத்து ஓங்கி ஒரு மனப்பட்டு நிற்பதற்கான அடிப்படை எண்ணங் களுக்கு நவம்பர் திங்களில், டிசம்பர் திங்களில் நடைபெற்ற மேற்சொல்லப்பட்ட நிகழ்வுகள் கட்டியங் கூறி நிற்கின்றன என்பது மகிழ்ச்சி ததும்பும் திருப்புமுனை செய்தியாகும்.

இந்துத்துவ ஆணவக் கொள்கையின் தாக்கத்தாலும், ஜாதிய அமைப்புகளாலும் தமிழ்நாட்டிலும் ஜாதியின் பெயரால் ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கும் நிரந்தரப் பரிகாரம் என்பது பெரியாரியலே! தமிழர்கள் கட்சிகளை மறந்து ஓரணியில் நிற்பதற்கான சாத்தியக் கூறுகளை நவம்பர் டிசம்பர் மாதநிகழ்வுகள் நம்பிக்கை அளித்துள்ளன என்பதில் அய்யமில்லை.

திராவிட இயக்கங்களோடு, கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இந்தக் களத்தில் கைகோத்து நிற்க முன் வந்துள்ளது கூடுதல் பலமாகும்.

குறிப்பாக தமிழ்நாட்டில் தூண்டி விடப்படும் ஜாதி ஆணவக் கொலைகளுக்கு நிரந்தரப் பரிகாரம் தேடியே ஆக வேண்டும். ஜாதி, மத மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்கு அச்சுறுத்தல்கள் தோன்றியுள்ளன. படு கொலைகளும் நடக்கின்றன.

இவற்றைத் தடுக்க வேண்டிய மாநில அரசோ, பிஜேபியின் கைப் பிள்ளையாகத் தவழ்ந்து கொண்டுள்ளது. திராவிட இயக்கப் போர்வாள் மானமிகு வைகோ சொல்லுவதுபோல முதுகெலும்பை இழந்து நிற்கிறது.

இந்தநிலையில் ஜாதி - மத மறுப்புத் திருமண இணையர்களுக்குப் பாதுகாப்பு அளித்திட அரண் அளித்திட திராவிட இயக்கங்களும், கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு அமைப்பைஉருவாக்க வேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவரின் கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

அதே போல இந்தியாவை அச்சுறுத்தும் அதிகார பலத்தோடு ஆவேசமாகப் பாயும் இந்துத்துவாவை வேரறுப்ப தற்கும் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து தடுத்து வீழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான சித்தாந்தமும், மூலக் கருத்தும் தந்தை பெரியார் தந்த கருத்து மூலங்களே! இது இப்பொழுது தமிழ்நாட்டையும் தாண்டி இந்தியத் துணைக்கண்டம் அளவுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டியனவாக உள்ளன.

அதேபோல தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சில போலிகள் புறப்பட்டுள்ளன;  உண்மையான தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கியது திராவிடர் இயக்கமே! இந்தப் போலித் தேசியங்கள் ஜாதியை அடையாளப்படுத்தியும், ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிட இயக்கத்தைச் சிறுமைப்படுத்தியும் பிரச்சாரம் செய்வது- விபிஷணத் தன்மை இராமாயணக் காலத்தோடு முடிந்து விடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

இந்துத்துவா சக்திகளோடு - இவற்றையும் இணைத்து ஒரே அடியில் வீழ்த்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் இப்பொழுது ஒருங்கிணைக்கப்பட்ட சக்திகள்  அமைப்புகள் களம் கண்டு வெற்றி வாகை சூடும் என்பதில் அய்யமில்லை.

தந்தை பெரியார் மறைந்தாலும் அவர்கள் தந்து சென்ற தத்துவங்களான மனித குல சமத்துவம், மனிதநேயம், சமூகநீதி, பாலியல் சமத்துவம், மூடநம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவு விஞ்ஞான முறை வாழ்வியல் சீலங்கள் வழிகாட்டக் கூடிய பேரரண்கள் என்பதை நிறுவுவோம்! பெரியாரே ஒளி! சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner