எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டிசம்பர் - 2, தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பிறந்த நாள்! சிறுவன் வீரமணியாக தவழ்ந்து, கடலூர் வீரமணியாக வளர்ந்து, இன்று உலகம் போற்றும் தமிழர் தலைவராகப் பரிணாமம் பெற்று - தந்தை பெரியார் இயக்கத்தின் சின்னமாக உலகமெங்கும் போற்றப்படுகிறார்.

தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அவர்தம் இலட்சிய  மூலங்களை கருத்துக் கருவூலங்களாக உலகளந்து, உலகத் தலைவர் தந்தை பெரியார் என்பதை நிறுவியுள்ளார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தை உருவாக்கி, தந்தை பெரியார் தம் தத்துவச் சீலங்களை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் மணம் பரப்பச் செய்து வருகிறார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், துபாய் முதலிய நாடுகளிலும் அமைப்பு ரீதியாக தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளைக் கொண்டு செலுத்தும் வகையில் ஆக்க ரீதியானவற்றிற்கு அடிக்கல் நாட்டி மேல் கட்டுமானங்களையும் எழுப்பி வருகிறார். 2017இல் ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழக வளாகத்தில் தந்தை பெரியார் பன்னாட்டு மாநாட்டை நடத்திட வழிவகை கண்டார். 2019 செப்டம்பரில் அமெரிக்க தலைநகரான வாசிங்டனில் அடுத்த மாநாட்டுக்கான அறிவிப்பும் வெளி வருவதற்குக் காரணமாக இருந்துள்ளார்.

வெளியீட்டுத் துறையில் புதிய புதிய மைல் கற்களை உருவாக்கிக் கொண்டே போகிறார். திராவிடர்களின் உரிமைப் போர்வாளான 'விடுதலை'யை விரும்பிப் படிக்கச் செய்யும் அளவிற்கு வடிவத்தில் வசீகரத்தையும், உள்ளடக்கத்தில் உயர் எண்ணங்கள் வீசும் மலர்ச் சோலையாகவும், விஞ்ஞான தொழில் நுட்பத்துடன் உயர் தரத்தில் நாளும் வெளி வரச் செய்கிறார்.

நான்கு பக்க விடுதலையை எட்டுப் பக்கமாக்கி, சென்னைப் பதிப்போடு, கூடுதலாக திருச்சிப் பதிப்பையும் உருவாக்கி - தந்தை பெரியார்தம் நம்பிக்கைக்குச் சிறப்புக் கூட்டும் நாணயமான நல்லதோர் நாயகனாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

மாதத்திற்கு 20 நாள்களுக்கு மேல் பயணம் செய்யும் தலைவர் தமிழ்நாட்டில் இவர்தானே. அனேகமாக நாள்தோறும் 'விடுதலை'யில் அறிக்கைகள் வாயிலாக மக்களின் சிந்தனைக்கும், உணர்வுக்கும் கருத்து விருந்து படைத்துக் கொண்டிருக்கிறார்.

இடையில் நின்று போன 'தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' இதழை உயிர்ப்பித்து, புதுப் பொலிவு என்னும் புத்தாடை உடுத்தி, ஆங்கிலம் தெரிந்த மக்கள் மத்தியிலே அமைதியாக வலம் வரச் செய்துள்ளார். அதற்கான வாசகர் வட்டத்தைத் தமிழகம் தழுவிய அளவில் உருவாக்கி வருகிறார்.

'உண்மை' இதழின் சிறப்பையும், 'பெரியார் பிஞ்சின்' பெற்றியையும் பேசவும் வேண்டுமோ!

2017ஆம் ஆண்டில் கூடுதலாகக் குறிப்பிட்டு மகிழும் தகவல் ஒன்றுண்டு. அதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் போராட்டக் களத்திற்கான அச்சார வெற்றி - மதுரையிலே பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த தோழர் கோயில் அர்ச்சகராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தைபெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அது; அய்யாவின் அந்த எண்ணம் ஈடேறுவதற்கு முன்னர் கண் மூடினார் என்றாலும் இவ்வாறு அய்யா காண விரும்பிய அந்தச் சமூகநீதி கிடைத்தது - ஆம் கிடைத்தே விட்டது; தமிழ்நாட்டை ஒட்டிய கேரள மாநிலத்தில் கம்பீரமாக பெரும் அளவில் வெளி வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் இதில் நூற்றுக்கு நூறு வெற்றி காணும் முனைப்பில் வேங்கைப் பாய்ச்சலில் இருக்கிறார் இந்தத் தலைவர்.

அவரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் ஆண்டில் இந்தப் பிரச்சினையில் பெரு வெற்றி ஏற்பட்டு, பெரும் விழா கொண்டாடப்படுவதற்கான வாய்ப்புப் பிரகாசமாக ஒளி வீசுகிறது.

சமூகநீதித் தளத்தில் இவர் சாதித்தது சரித்திரத்தின் புதுப்புது அத்தியாயங்கள். தமிழ்நாட்டில் இன்றைக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு நிலைத்திருக்கிறது - இந்தியத் துணைக் கண்டத் திலேயே சட்ட ரீதியாக - ஒன்பதாவது அட்டவணை பாது காப்புடன் கம்பீரமாக நிற்கிறது என்றால் - இந்த நியாயத் தராசு ஏந்தி நிற்கும் - கரத்துக்குச் சொந்தக்காரர் இந்தக் கறுப்புச் சட்டை இயக்கத்தின் தலைவரான மானமிகு வீரமணி அவர்களே!

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு -குடியரசாக அறிவிக்கப்பட்டு - அதற்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்டிருந்தும், சமூகநீதியில் மக்கள் தொகையில் சரிபாதிக்கு மேற்பட்டவர்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக் கீட்டுக்கு வகை செய்யப்படவில்லை.

இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பி.பி. மண்டல் அவர்களின் தலைமையிலே அமைக்கப்பட்ட நிலையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், 27 விழுக்காடுக்குச் சட்ட ரீதியாக வலு சேர்க்கப்படும் என்பதற்காக இந்திய அளவில் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றி கண்ட வெற்றிமணி  நமது ஆசிரியர் வீரமணி ஆவார். இதன் பலனை தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களும்  அடைகின்றனர் என்றால் அதற்கான காரணகர்த்தா இந்தக் கழகத் தலைவர் அல்லவா?

வீரமணியைப் பார்க்கும்பொழுது சமூகநீதி உணர்வைப் பெறுகிறேன் என்று  சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் கூறியது இந்தப் பொருளில்தான்!

திராவிட இயக்கம் காலத்தின் கட்டாய தேவையில் பிரசவிக்கப்பட்ட ஒன்றாகும். இன்றளவிலும் சரி, இனி வருங்காலத்திலும் சரி திராவிட இயக்கம் நின்று  நிலைப் பெற்று அதன் உன்னதமான கொள்கை உலகமயமாக ஒளி வீசுவதற்குரிய அடிக்கட்டுமானங்கள், மேல் கட்டுமானங்கள் இந்த மாமனிதரால் உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளன.

இளைஞர்களின் ஈர்ப்பு மய்யமாகவும், மாணவர்களின்மனம் ஒப்பும் பாசறையாகவும், மகளிர் உரிமைக் காப்புக் கோட்டமாகவும் திராவிடர் கழகம் - மிகப் பெரும் பலத்துடன் வீறு கொண்டு நிற்கும் வெற்றிக்குப் பெரும் காரணமாக இருப்பவர் இந்தப் பெரியாரின் தனித்தன்மை வாய்ந்த மானமிகு மாணாக்கர்தான்!

பெரியார் காண விரும்பிய உலகினைப் படைத்திட இந்த எஃகு தலைமை இன்னும் நமக்குத் தேவைப்படுகிறது. அந்தத் தேவை தேவைப்படும் காலம் வரை இந்தத் தலைவர்  வாழிய, நீடு வாழியவே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner