எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் என்று மோடி அரசு வலியுறுத்தியதாக பிரான்ஸ் புலனாய்வு பத்திரிகையான 'மீடியா பார்ட்' தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் போர் விமானங்களின் தேவை குறித்து ஆய்வு செய்து அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து வாங்குவது வழக்கம். இந்திய விமானப் படையில் கடைசியாய் சேர்க்கப்பட்ட போர் விமானம் 1996இல் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட சுகோய் விமானம் ஆகும். அதற்கு பிறகு நீண்ட நாட்களாக வெளிநாட்டில் இருந்து எந்த ஒரு போர் விமானத்தையும் இந்தியா வாங்கவில்லை.

இந்த நிலையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்ட பின்பு 126 போர் விமானங்களை வாங்க, அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதற்காக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. பிறகு 2012ஆம் வருடம் பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

126 போர் விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டன. ஆனாலும் அதில் 18 விமானங்களை மட்டுமே பிரான்ஸ் நாடு பறக்கும் நிலையில் தயாரித்து இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும். மீதம் இருக்கும் 108 விமானங்களையும் இந்தியாவில் தயாரிப்பதற்காக தொழில்நுட்ப விவரங்களை இந்தியாவிற்கு அளிக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மன்மோகன் சிங் அரசின் (UPI) உத்தரவுக்கு ஏற்ப,108 விமானங்களை தயாரிப்பதற்கு ஏற்ப இடங்கள் மற்றும் இதர தொழில் நுட்ப வசதிகள் அனைத்தையும் முன்னேற்பாடாக செய்து வைத்திருந்தது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்; இதனால் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். தவிர, பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் புதிய சாதனையை எட்ட முடியும் என்று அப்போது பலரும் பாராட்டினார்கள்.

இந்த நிலையில்  2014ஆம் வருடம் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசு கட்சி தோல்வியடைய பாஜக ஆட்சிக்கு வந்தது. மோடி பிரதமராக பதவியேற்றார்.

பிறகு 2015ஆம் வருடம்   பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றார். அப்போது காங்கிரசு கட்சியின் ஆட்சியில் போடப்பட்ட 126 ரபேல் போர் விமானங் களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தார்.  புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

அதாவது  "18 விமானங்களுக்குப் பதிலாக பறக்கும் நிலையிலேயே சுமார் 36 விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கும்; பறக்கும் நிலையில் விமானங்கள் வாங்கப்பட்டாலும் அதனுள் பல்வேறு தொழில் நுட்பக் கருவிகளை பொருத்தும் பணியையும், அதற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியையும் இந்தியா மேற் கொள்ளும்" என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.

ஆனால் இந்தப்பணியை அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்காமல், முன் அனுபவம் இல்லாத  பாஜக அரசுக்கு நெருக்கமான  ரிலையன்ஸ் நிறுவனத்துக்குத் திடீரென ஒதுக்கப்பட்டது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்புப் படையில் உள்ள பல்வேறு விமானங்களைத் தயாரித்து வரும் ஒரு அரசு நிறுவனம். கடந்த 60 வருடங்கள் அனுபவம் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தை நிராகரித்துவிட்டு, இந்தத் துறையில் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? என்ற சர்ச்சை எழுந்தது. இது குறித்து காங்கிரசு கட்சி கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்தார். இதன் பிறகு இந்த விவகாரம் சூடுபிடித்தது. இதனால், அனில் அம்பானிக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இக்குற்றச்சாட்டை பாஜக தலைமையிலான மத்திய அரசு மறுத்தது; ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய பங்குதாரராக சேர்க்கப்பட்டதற்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான 'மீடியா பார்ட்' ('Media Part')   பத்திரிக்கை இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

"ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும்" என்று மோடி தலைமையிலான பாஜக அரசு நிர்ப்பந்தித்தது  என்று அப்பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது.

ரபேல் விமான ஒப்பந்தத்தில் இந்தத் தகவல் உள்ளதாக 'மீடியா பார்ட்' கூறியுள்ளது.

ஏற்கெனவே, ரபேல் விவகாரம்   சர்ச்சையை ஏற்படுத்தி யிருக்கும் நிலையில், தற்போது பிரான்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல் புதிய சர்ச்சைக்கு அச்சாரம் போட்டிருக்கிறது.

சுத்தம் சுத்தம் - ஊழலற்ற மோடியின் அரசு என்று போட்ட சத்தம் சுத்தமாகவே இப்பொழுது பொய்யென்று ஆகி விட்டது - எல்லா வகையிலும் மோடி தலைமையிலான அரசு அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. இதற்குச் சமீபத்திய ஆதாரம்தான் ரபேல் ஒப்பந்தம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner