எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சாமியார் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்தது முதல் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு படாதபாடு படுகிறது. காவல்துறையினர் யாரை வேண்டுமானாலும் போலி என்கவுண்டர் செய்யலாம் என்ற ஒரு மறைமுக சூழல்நிலவுகிறது.

இதுவரை 420-க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எத்தனைப் பேர்களை சுடுவார்களோ அதற்கு ஏற்ப சம்பந்தப் பட்டவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை என்கவுண்டர் செய்த 42-க்கும் மேற்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள ஆப்பிள் நிறுவன உயரதிகாரி ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் அவருடன் பயணித்த சனா என்ற பெண் கொடுத்த வாக்குமூலத்தில் அது போலி என்கவுண்டர் என்பது உறுதியானது. இதனை அடுத்து அந்த அதிகாரியைச் சுட்ட காவல்துறைஅதிகாரி பதவி நீக்கம்செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில்மீண்டும் ஒருபோலி என்கவுண்டர் விவகாரம் வெளியாகியுள்ளது.

நொய்டாவை சேர்ந்த ஜிதேந்தர் யாதவ் முன்னாள் உடல்கட்டு வீரர் ஆவார். அவருடைய சகோதரியின் திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்தவழியே மாருதி காரில் நான்கு காவல்துறையினர் வந்துள்ளனர்.

அந்த காவல்துறையினர் யாதவ் மற்றும் நண்பர்களிடம் அவர்கள் எதற்கு இங்கே நிற்கின்றனர் என அதட்டி உள்ளனர்.   ஜிதேந்தர் யாதவ் நடந்ததைக் கூறி உள்ளார்.   அப்போது அந்த காவலர்களில் ஒருவர், "யோகி ஆதித்ய நாத்தின் புதிய சட்டத்தின் படி நான்கு பேர் ஒன்றாக நடு இரவில் நின்று பேசக்கூடாது.  நீங்கள் சட்டத்தை மீறுகிறீர்கள்" என்று கூறி உள்ளார். அந்தக் காவலர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும்  ஜிதேந்தர் யாதவ் மற்றும் அவருடைய நண்பர்களை பின் இருக்கையில் அமர வைத்து அவர்கள் காரை செலுத்திக் கொண்டு சென்றுள்ளனர். ஜிதேந்தர் யாதவ் அதுபோல ஒரு சட்டம் புதியதாக இயற்றப்பட்டதாக தமக்குத் தெரியாது எனக் கூறி உள்ளார். மேலும் தங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு அந்த காவலர் "நான் உன்னை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அதற்கு முன்பு என் பதவி உயர்வுக்காக உங்களில் ஒருவர் அல்லது இருவரை என்கவுண்டர் செய்கிறேன்" எனச் சொல்லி பின்னால் திரும்பிப் பார்க்காமலே துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த குண்டு யாதவின் கழுத்தில் பாய்ந்து முதுகுத் தண்டு வழியே வெளி வந்துள்ளது.

பிறகு வேண்டுமென்றே வாகனத்தை மெதுவாக செலுத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.   அதற்குள் ஜிதேந்தர்  யாதவ் இறந்து விடுவார் என நம்பியவர்களுக்கு அதிர்ச்சியாக அவர் பிழைத்துள்ளார். ஆனால் கழுத்துக்கு கீழே இயக்கத்தை இழந்ததால் தற்போது படுத்த படுக்கையாக இருக்கிறார். போலி என்கவுண்டருக்கு ஆளான ஜித்தேந்திர் யாதவ் நீண்ட காலமாக படுத்த படுக்கையாக உள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் என்கவுண்டர் செய்த விஜய்தர்ஷன் சர்மா என்ற உதவி காவல் ஆய்வாளரை பணி இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் இந்த என்கவுண்டர் தொடர்பாக 3 காவலர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் பணிபுரியும் இதே விஜய் தர்ஷன் சர்மா கடந்த 2017-ஆம் ஆண்டு 22 என் கவுண்டர்களைச் செய்துள்ளார். இவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பலர் மீது காவல் நிலையத்தில் எந்த ஒரு குற்றவழக்கும் கிடையாது, அனைவரும் ஏழைகள் மற்றும் அப்பாவிகள் ஆவார்கள். மேலும் உத்தரப்பிரதேச காவல்துறையினரால் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்கள் மட்டுமே காவல் துறையினரால் என்கவுண்டர் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொதுநல அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் பின்னணி குறித்த உண்மையை அரசு வெளியிடவேண்டும் என்றும் கூறியுள்ளனர். தற்போது உத்தரப்பிரதேசத்தில் போலி என் கவுண்டர்கள் அதிகமாகியுள்ளதால் மனித உரிமை ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எக்கவுண்டர் செய்த சிலர் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர் என்று கூற முற்படுவது போலி சமாதானம் - அவர்கள் என்கவுண்டர் செய்வதற்கான காரணத்தைப் பார்க்கும் பொழுது திடுக்கிடச் செய்கிறது. என்கவுண்டர் செய்தவர்களுக்குப் பதவி உயர்வும் கிடைத்துள்ளது என்பதால் அதனை உற்சாகத்துடன் செய்வது எத்தகைய பயங்கரம் - பாசிசம்! பா.ஜ.க.வே, உன் செல்ல செல்வப் பெயர்தான் பாசிசமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner