எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய ஓய்வுகாலத்தின் இறுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளைக் கூறியிருந்தார். இதில் பெண் என்பவள் கணவனுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்னும் அடிமை நிலையை வலியுறுத்தும் 497-ஆவது இந்திய தண்டனை   சட்டத்தை  நீக்கி ஆணுக்குப் பெண் அடிமையில்லை என்று தீர்ப்பு கூறியிருந்தார். அதே போல் உலகம் முழுவதில் எதிரொலித்துவரும் மூன்றாம் பாலினத்த வரை குற்றவாளிகளாக காட்டும் 377 இந்திய தண்டனை  சட்டத்தையும் நீக்கினார்.

ஆனால் இந்த இரண்டுக்கும் மேலாக சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நேரில் வழிபடலாம் என்ற தீர்ப்பு தான்! சுமார் 30 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கின்மீதான தீர்ப்பின் இறுதிகட்டத்தில் கூட பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்புதான் வரும் என்று பலரும் நினைத்திருந்த நிலையில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஆன அமர்வு சபரிமலைக் கோவிலில் நுழைய அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி தரவேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைக் கூறி விட்டார்.

இந்த தீர்ப்பிற்கு எதிராக சில இந்துத்துவ அமைப்பினரும், சில பிற்போக்குவாத பெண்கள் அமைப்பினரும் போராடி வந்தாலும், உண்மையில் பொதுவாக நாடுமுழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமத்துவத்திற்கான மற்றொரு மைல்கல்லைத் தொட்டிருக்கிறோம் என்று ஆங்கில  நாளேடுகள் தலைப்பிட்டு இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன. மேலும் தீபக் மிஸ்ராவிற்கு "பாலின சமத்துவ நீதியைப் பெற்றுத்தந்த வீரர்" என்று கட்டுரை எழுதி வாழ்த்துகின்றனர்.

இந்த நிலையில் கல்வியாளர் கருத்தரங்கம் ஒன்றில் விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது, "பாலின நீதியைப் பெற்றுத் தந்த வீரர் என்று என்னை சொல்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பெண்கள் கோவிலுக்குச் செல்லும் பழக்கத்தை ஒதுக்கி வைக்க முடியாது. வாழ்வில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. ஆணைப்போல பெண்களும் சமம். நாம் சகிப்புத் தன்மையை பின்பற்றி நடக்க வேண்டும், மற்றவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதனை செய்யாவிட்டால் நாம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவர்களைப் போல் ஆகி விடுவோம். அரசியல் சட்டம் பாலின சமத்துவத்தை வலியுறுத்துகிறது, நாம் அதைப் பின்பற்றியே ஆகவேண்டும், அனைவருக்கும் சம உரிமையை வழங்கும் அரசமைப்புச் சட்டம் நமது தலைசிறந்த வழிகாட்டி ஆகும். கடவுள் நம்பிக்கை என்பது அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவதை விட தனிமனிதர் சார்ந்த விவகாரம் ஆகும். இருப்பினும் கோவில் என்று வரும்போது அங்கு ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று திட்டவட்டமாகவே தீர்ப்பில் கூறி விட்டார்.

தீபக் மிஸ்ராவின் சில தீர்ப்புகள்மீது நம்மைப் போன்றவர்களுக்கு அதிருப்தி உண்டு என்றாலும், கடைசி நேரத்தில் அவர் வழங்கிய இத்தகைய தீர்ப்புகள் மெச்சத் தகுந்ததாகவே உள்ளன.

தஞ்சாவூரில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவின் 11ஆம் தீர்மானம் இதுகுறித்து பேசுகிறது.

பிற்போக்குச் சக்திகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேரணிகளையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பக்தர்களாக இருக்கக் கூடிய பெண்களும் இந்த எதிர்ப்பினை முறியடிக்கும் வகையில் அணி திரண்டு ஆதரவுக் குரலை எழுப்புவது அவசியமாகும்.

கேரளாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இடதுசாரி அரசாங்கம் முற்போக்குக் கட்சிகளை ஒழுங்கிணைத்து கருத்தரங்கம், மாநாடுகளை நடத்தி மக்கள் ஆதரவைத் திரட்டுவதும் அவசியமாகும். ஆளும் கட்சியாக இருப்பதால் போராட்டம் நடத்திடத் தயக்கம் இருக்கலாம்; மாறாக மாநாடுகள் நடத்துவதில் தடை ஏதும் இல்லையே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner