எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கால்நடை வளர்ப்புத் தொழிலிலுள்ள விவசாயிகள் மாடுகளை விற்கவோ, வாங்கவோ முடியாத சூழல்கள் மாட்டிறைச்சிக்குத் தடை, பசுவதைத் தடைச் சட்டம் உள்ளிட்டவற்றின் பெயரால் ஏற்பட்டுள்ளன. மேலும், மத்தியில் மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு, பசு மாட்டின் பெயரால் பசுப்பாதுகாவலர்கள் என்று இந்துத்துவா கும்பல்களால் வட மாநிலங்களில் கும்பல் தாக்குதல்கள், கொலைகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கால்நடை வளர்ப்புத் தொழில் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

மேலும், பசுவதைத்தடை மற்றும் மாட்டிறைச்சித் தடை ஆகியவற்றால் பெருமளவில் இறைச்சிக் கூடங்கள், இறைச்சி வணிகர்கள், இறைச்சி உணவு உண்ணும் மக்கள் என பலரும் பெரும் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர்.

எளிய மக்களுக்கு சத்தான உணவாக மாட்டிறைச்சி உள்ளது. ஆனால், மாட்டிறைச்சி ஏற்றுமதி வணிகத்தில் முன்னணியில்  இந்த நாடு உள்ள நிலையில், மாட்டிறைச்சிக்கு மதத்தின் பெயரால் தடை போடப்படுகிறது.

பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல்வேறு உணவுப் பழக் கங்கள் உள்ள ஒரு நாட்டில் தனி மனித உரிமையான உண்ணும் உரிமை மதத்தின் பெயரால் பறிக்கப்பட்டு வருகிறது. பசு மாட்டை 'பசுத்தாய்' என்றும், பசு மாட்டில் 'கடவுள்கள்' வசிப்பதாகவும், பசு மாடு 'புனிதம்' என்றும் கூறிக்கொண்டு, பசு மாட்டை உணவுக்காக கொல்லக்கூடாது என்றும் இந்துத்துவா வன்முறையாளர்கள் மதச்சிறுபான்மை மக்களையும், தாழ்த்தப் பட்ட மக்களையும் தாக்குவது, துன்புறுத்துவது, கொல்வது என்று ஆட்சி அதிகாரங்களின் துணையுடன் வெறியாட்டம் போட்டு வருகிறார்கள்.

பசு மாட்டைக் காப்பதாகக் கூறிக் கொண்டு மனிதர்களை வதைப்பவர்களுக்கு பாஜக அரசுகள் துணைபோகின்றன. மாட்டி றைச்சியின் பெயரால் வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள் சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன. மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு பதிவு செய்யப்பட்ட வகையில், 34  பேருக்கும்மேல் அப்பாவி மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கோசாலைகள் அமைக்கப்பட்டு பராமரிப்பதாக கூறிவருகின்ற நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16,17,18 ஆகிய மூன்று நாள்களில் பாஜகவினருக்கு சொந்தமான கோசாலையில் 200 பசுக்கள் உயிரிழந்தன. தற்பொழுது காற்றோட்டமில்லாத அறையில் அடைக்கப்பட்ட கால்நடைகளில் கடந்த சில நாள்களில் 18 பசு மாடுகள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலுள்ள பலோடாபசார் மாவட்டம், ரோகசி கிராமத்தில் உள்ள ஒரு மாட்டுப்பட்டியில் காற்றோட்டமில்லாத காரணத்தால் இறந்த பசு மாடுகள் புதைக்கப்படுவதாக ஒரு தகவல் மாவட்ட ஆட்சியருக்கு எட்டியது. இதுகுறித்து பலோடாபசார் மாவட்ட ஆட்சியர் ஜனக் பிரசாத் பதக் கூறியதாவது: "ஊராட்சி நிர்வாகத்தின்கீழ் இயங்கிவரும் மாட்டுப்பட்டியில் காற்றோட்ட வசதியில்லாமல் கடந்த சில நாள்களில் குறைந்தபட்சம் 18 பசு மாடுகள் மூச்சடைத்து உயிரிழந்தன. விவசாய நிலங்களில் பராமரிப்போரின்றி திரியும் மாடுகள்பயிர்களை சேதப்படுத்திவருகின்றன என்று ஏற்கெனவே விவசாயிகள் புகார் கூறியிருந்தார்கள். கிராமத்தினருக்குள் மாடுகள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு, பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளைப்பிடித்து கஞ்சி அவுஸ் எனப்படும் பட்டியில் அடைத்துள்ளனர். சில மாடுகளை திறந்தவெளியில் கட்டிவைத்துள்ளனர்.

மாட்டுப்பட்டியில் அடைக்கப்பட்ட கால்நடைகளை உரிமைக் கோரி எவரும் முன்வரவில்லை. மாட்டுப்பட்டியில் அடைக்கப் பட்ட கால்நடைகளுக்கு தண்ணீர், தீவனம் அளிப்பதில் கிராமத் தினர் மிகவும் சிரமப்பட்டார்கள். பட்டியிலிருந்து கால்நடைகளை கிராமத்தினர் அவிழ்த்து விட்டுள்ளனர்.

இருப்பினும் மாட்டுப்பட்டியில் உள்ள அறையில் இருந்த கால்நடைகளை அவர்கள் கவனிக்கவில்லை . 3.8.2018 அன்று மாட்டுப்பட்டியின் அறையிலிருந்து துர்நாற்றம் வந்ததையடுத்து, மாட்டுப்பட்டியில் உள்ள அறையில் மாடுகள் செத்துக்கிடப்பதைக் கண்டனர். செத்தமாடுகளின் உடல்களை டிராக்டர் மூலமாக கிராமத்தினர் அப்புறப்படுத்தும்போது, உள்ளூர் அலுவலர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் அலுவலர்கள் மூலமாக பசு மாடுகள் இறந்ததுகுறித்த தகவல் கிடைக்கப்பெற்றது. ரோகசி கிராமத்தில் செத்த மாடுகள் புதைக்கப்படுவது குறித்து தகவலறிந்து, 3.8.2018 அன்று அரசு அலுவலர்களால் செத்த மாடுகளின் உடல் பறிமுதல் செய்யப் பட்டது. செத்த மாடுகளின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, செத்த மாடுகளின் உடல்கள் ஆழமாக குழிதோண்டிப் புதைக்கப் பட்டன.

காற்றோட்டமில்லாத அறைக்குள் பசு மாடுகள் அடைக்கப் பட்டு, சில நாள்களில் இறந்துள்ளது குறித்து ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்கள் குழு நிகழ்விடத்துக்குச் சென்று மற்ற கால்நடைகளின் நிலை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரமன்சிங் அரசில் அரசு உதவி பெறுகின்ற கோசாலைகளில் ஏராளமான பசு மாடுகள் உயிரிழந்தது குறித்து காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன.

மாநில அரசு அலுவலர்கள் அளித்துள்ள தகவலின்படி, துர்க் மாவட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான "ஷாகுன் கோசாலா' எனும் கோசாலை மற்றும் அவருடைய உறவினருக்கு சொந்தமாக பீமெதாரா பகுதியில் உள்ள மற்ற இரு கோசாலைகள் இயங்கிவரும் நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 மற்றும் 18 ஆகிய நாள்களில் பராமரிப்பு இல்லாமல், பட்டினியால் 200க்கும் மேற்பட்ட பசு மாடுகள் இறந்தன. அப்போது கோசாலைகளில் செத்த மாடுகள் குறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'கோமாதா எங்கள் குல மாதா' என்று கூறும் குணக் கேடர்கள் பசுவைப் பாதுகாக்கும் இலட்சணம் இதுதான் - வெட்கக் கேடு! கோமாதா என்று சொல்லி அடுத்த மதத்தவர்களை, தாழ்த்தப்பட்டவர்களைக் கொல்லுவதுதான் இதற்குள்ளிருக்கும் சூட்சுமம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner