எழுத்துரு அளவு Larger Font Smaller Font

94 வயதில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்தார். இறுதியாக அவருக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதைகள் சிறப்பாகவே நடைபெற்றுள்ளன.

அவர் உடலை அண்ணா சதுக்கம் அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்திற்கு இடையே முட்டுக் கட்டைப் போடப்பட்டாலும், இறுதியில் சிரிப்பவர்யார்? என்ற முறையில் இறுதி வெற்றி கலைஞர் பக்கம், தன் தலையைச் சாய்த்துக் கொண்டது.

அந்தத் தகவல் கிடைத்ததுதான் தாமதம். அப்பப்பா  தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடத்தில் ஏற்பட்ட தாக்கம், பீறிட்டுக் கிளம்பிய உணர்வு - பார்த்தவர்களைப் பெரிதும் உணர்ச்சி பெற வைத்து விட்டது என்பது மட்டும் உண்மை.

அருகில் இருந்த கட்சிப் பொறுப்பாளர்கள் மத்தியில் துக்கக் கண்ணீர் தொலைந்து ஆனந்தக் கண்ணீர் அரவணைத்து கொண்டதைத் தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களும் கண்ணீர் உகுத்தனர். துன்பவியல் சூழலிலும் ஒரு குதூகலத்தை உண்டாக்கிய நிகழ்ச்சி அது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாதவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தது மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் விடயத்தில் மட்டுமே நடந்திருக்கிறது.

எதிர்பாராத வகையிலே வடக்கே இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது; ஆனால் எல்லா வகையிலும் பாத்தியதை உடைய தமிழ்நாட்டு அரசு வேறு வகையில் சிந்தித்ததுதான் விபரீதம்!

சென்னை கடற்கரையில் அண்ணா சதுக்கத்தின் பின் பகுதியில் கலைஞரின் நினைவை நிலை நிறுத்தும் சின்னதோர் இடம்தான் தேவை. அந்தக் கோரிக்கையை ஏற்கக்கூட அண்ணாவைக் கட்சியின் பெயரில் வைத்துள்ள அரசுக்கு மனம் வரவில்லை.

நல்ல பெயர் வாங்கும் ஓர் அரிய வாய்ப்பு, கதவைத் தட்டினாலும், அதனைப் புறந்தள்ளுவது புத்திசாலித்தனமா?

ஆனால் என்ன நடந்தது? அந்தப் புத்திசாலித்தனமற்ற முடிவைத்தான் அதிமுக அரசு வரித்துக் கொண்டு விட்டது.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நல்ல வகையில் மொத்துதலைக் கொடுத்திருக்கிறது.

கலைஞர் மறைந்திருக்கலாம்; ஆனால் உணர்வால் நம்மிடையே வாழ்ந்து கொண்டுள்ளார். வாழ்ந்தபோதிலும் சரி, மறைந்த நிலையிலும் சரி - எதிர் நீச்சல் என்பது அவருக்கு உடன்பிறந்த கலையாகி விட்டது.

இதன் மூலம் தனக்குக் கிடைக்கவிருந்த நல்ல பெயர் வாங்கும் நல் வாய்ப்பினை அஇஅதிமுக அரசு பறி கொடுத்து விட்டது. வழக்கில் வெற்றி பெற்றதன் மூலம் திமுகவுக்கு அரசியல் ரீதியாகவும் கூட பெரும் பயன் கிடைத்து விட்டது; அதுவும் ஒரு வகையில் வரவேற்கத் தக்கதே!

ஒன்றை இந்த நேரத்தில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கலைஞரிடம் பல விடயங்களில் மாறுபாடு கொண்டவர்கள் கூட, கலைஞர் அவர்களின் ஆளுமையை மதிக்கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட அவர்தம் மேன்மைத் தன்மையை நாட்டுக்கான அப்பழுக்கற்ற உழைப்பினை கண்டிப்பாக மதிக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டது.

அந்த மதிப்பும், சிறப்பும் சாதாரணமாக வந்துவிடவில்லை; அதற்காக கடும் விலையைக் கொடுத்திருக்கிறார் - அந்தத் தன்மானத் தலைவர் என்பது கடைக்கோடித் தமிழனுக்கும் இப்பொழுது தெரிந்து விட்டது.

கலைஞர் பெருமகனார் இந்த அளவுக்கான உயரத்தை ஈட்டுவதற்கான அடி உரம் தந்தை பெரியாரும், அவர்தம் ஈரோட்டுக் குருகுலமும்தான். 'எனக்குக் கிடைத்த எல்லாப் பெருமைகளும் தந்தை பெரியாரையேச் சாரும்!" என்று கலைஞர் அவர்கள் கூறி வந்ததெல்லாம் இந்த அடிப்படையில்தான்.

மாணவப் பருவத்திலேயே, தான் வரித்துக் கொண்ட கொள்கை, ஒப்படைத்துக் கொண்ட குருகுலம், ஏற்றுக் கொண்ட தலைமை ஆகியவற்றோடு -  தன்னையே ஒப்படைத்துக் கொண்ட 'சரணாகதித் தத்துவம் இவைதான்; தமிழ்நாட்டைத் தாண்டி கலைஞர் பெருமகனாரைத் தோளில் வைத்துப்போற்றுவதற்கான காரணங்களும் இவையே!

அவருடைய அரசியல் பொது வாழ்வு  என்பது தந்தை பெரியாரின் சமுதாயப் புரட்சிக் கொள்கையில் வேர்ப் பிடித்ததாகும்.

எந்த மரணமும் அவரைச் சாய்த்து விடாது. எந்த எதிர்ப்பும் அவரிடம் செல்லுபடியாகாது. 13 முறை சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி மாலை சூடியவர், அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக வீற்றிருந்து பாமர மக்களின் உள்ளத்திலும் குடி கொண்டவர் நமது மானமிகு கலைஞர் ஆவார்.

பல்திறன் கொள்கலன் என்று சொல்வார்களே, அது   நூற்றுக்கு நூறும் கலைஞருக்கே பொருந்தக் கூடிய ஒன்றாகும்.

எழுத்து, பேச்சு, இரசனை, ஆளுந்திறன் எல்லாவற்றிலும் ஓய்வறியா சாதனையாளராக வாழ்ந்து காட்டியுள்ளார் நமது கலைஞர் அவர்கள். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது சுத்தப் புரட்டு! சக மனிதனுக்கு அளிக்கும் உதவி  - உபசரிப்பு தான் ஒரு மனிதனை உயர்ந்தோனாக்கும். அதனை நமக்கெல்லாம் தமது அப்பழுக்கற்ற பொது வாழ்வின்மூலம் பாடம் நடத்திச் சென்றிருக்கிறார் - நமது மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

திராவிட இயக்கத் தோழர்கள் இந்தத் தலைவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளை சுவாசித்து வெற்றி பெறு வார்களாக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner