எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு வெறும் ஆணையாக இல்லாமல் சட்டமாக இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்!

மண்டல் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக  தாக்கல் செய்யப்பட்ட இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது அதில் இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று கூறப்பட்டது (16.11.1992).

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருப்பதால் (மிகவும் போராடிப் போராடிப் பெற்ற உரிமை)  அதற்கு ஆபத்து வந்து விடுமோ என்ற நிலையில் அந்த 69 விழுக்காட்டைக் காப்பாற்றிட திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்த சட்டரீதியான கருத்து - வரலாற்றில் என்றென்றும் போற்றப்படக் கூடிய - சமூக நீதி வரலாற்றில் நின்று பேசக் கூடிய ஒன்றாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 31 (சி) பிரிவின்படி தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே சட்டத்தை நிறைவேற்றி அதற்கு நாடாளுமன்ற ஒப்புதலையும் பெறக் கூடிய வழிமுறையையும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

அதற்கான சட்டமுன் வடிவையும் தயாரித்துக் கொடுத்தார்.

அன்றைய முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அந்தக் கருத்தினை ஏற்றுக் கொண்டதோடு, தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் ஒரு மனதாக அதற்கான சட்டம் நிறை வேற்றவும்பட்டது. (31.12.1993)

பின்னர் இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 31-பி யின் கீழ் பாதுகாப்புப் பெறும் பொருட்டு 1994ஆம் ஆண்டு 76ஆவது சட்டத்திருத்தமாக ஒன்பதாம் அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது.

தமிழக அரசின் சட்டம் (45/1944) செல்லும் தன்மையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் (454/1994 மற்றும் 194/2006) மீது, உச்சநீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.

50 சதவீதத்திற்கும் அதிகமான இடஒதுக்கீடு, உச்சநீதிமன்ற தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்ட கிரீமிலேயர் தொடர்பாக தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையினைப் பெற்று 12.7.2011 தேதிக்குள் ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது (13.7.2010 மற்றும் 3.1.2011).

அதன்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது அறிக்கையினை 8.7.2011 அன்று முதல் அமைச்சரிடம் அளித்தது - தமிழ்நாடு அரசின் சட்டம் (45/1994) எவ்விதக் குறைபாடுமின்றி துல்லியமாக உள்ளது என்று பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் தெளிவுபடுத்தியது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த அறிக்கை தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் தமிழ்நாடு அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையினை (8.7.2011) ஏற்றுக் கொள்வது என்றும் தமிழ்நாடு சட்டம் 45/1994இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓர் அரசாணையும் தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்டது (11.7.2011).

அதன்படி தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 விழுக்காடு, பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு - ஆக மொத்தம் 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு விட்டது.

இவ்வளவு தெளிவாக திட்டவட்டமாக தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கல்தூண் போல் கெட்டியாக இருக்க, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள ஓர் உயர்ஜாதி அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கினைத் தாக்கல் செய்து கொண்டேஇருக்கிறது.

2011, 2014, 2016 போன்ற ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் 'நீட்'டில் தேர்ச்சி  பெற்ற சிலர் தங்களுக்குத் தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என்றும், ஆகையால் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; 50 விழுக்காடு மட்டுமே தமிழ்நாட்டிலும் கடைப்பிடிக்கப்பட  உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதுதான் அந்த வழக்கு.

உச்சநீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடரும் என்று கூறிவிட்டது.

கருநாடக மாநிலத்தில் 50 விழுக்காட்டுக்கு அதிகமாக இடஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு சட்டத்தை எடுத்துக்காட்டி விவாதித்தபோது தமிழ்நாடு சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றுள்ளது - அதோடு இதனை ஒப்பிட முடியாது என்று கூறியதையும் இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இனி மேலாவது தமிழ்நாட்டில் நிலை பெற்ற சமூக நீதிப் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருப்பது உயர் ஜாதி வட்டாரத்துக்கு நல்லதாகும்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner