எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மூன்றாம் பாலினத்தவர்கள், கல்வி கற்பதற்கு ஏதுவாக, கேரள அரசு 'சமன்வாயா' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அவர்களுக்கு இலவச தங்கும் வசதியுடன் உணவு வழங்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்கள், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக அவர்கள் தங்குவதற்குக் கூட பிரச்சினை எழுந்துள்ளது. அவர்களுக்கு வாடகை வீடு மற்றும் விடுதிகள் கிடைப்பதில் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் அவர்கள் முறையான வாழ்க்கைப் பாதை அமைத்துக் கொள்ளப் போராடி வருகின்றனர். மூன்றாம் பாலினத்தவர்களுக்காக, மத்திய பல்கலைக் கழகமான இந்திரா காந்தி தொலைதூர மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகம் இலவச கல்வி அளித்து வருகிறது. மூன்றாம் பாலினத்தவர்கள் சுயமாக தொழில்புரிய அரசும் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறது. ஆனாலும், முறையான கல்வி அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்காக 'சமன்வாயா' என்ற புதிய திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் சேர்ந்து படிக்கும் திருநங்கைகளுக்கு, இலவச உணவுடன், தங்கும் விடுதி வசதியும் அமைத்துத் தரப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து கேரள மாநில எழுத்தறிவு திட்ட இயக்குநர் பி.எஸ். சிறீகாலா கூறுகையில், "சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை உருவாகிறது. அதனால், மூன்றாம் பாலினத்தவர்களை சமூகத்தில் உயர்த்த 'சமன்வாயா' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தில் சேர்ந்து படிக்கும் மூன்றாம் பாலினத்தவருக்கு இலவசஉணவு மற்றும் தங்கும் விடுதி அமைத்துத் தரப்படும்.

4 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு மாதம் ரூ.1000, 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மூன்றாம் பாலினமாணவர்களுக்கு மாதம் ரூ.1250 உதவித் தொகை வழங்கப்படும். அவர்களுக்காக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப் புழா உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்" என்றார்.

மூன்றாம் பாலின மாணவர்களுக்குக் கல்வியை உறுதிசெய்த கேரள அரசு  முக்கிய அறிவிப்பு  ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் மாநிலத்தில் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் திருநங்கை களுக்கு கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கிட வேண்டும் என்றும், மூன்றாம் பாலின மாணவர்களுக்குத் தடை ஏற்படாமல் கல்வி கிடைக்க, அனைத்துக் கல்லூரிகளும் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றும் அறிவித்துள்ளது. கேரள அரசு கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவு, அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டு, அரசுப் பணிகள், தொழில் முனைவோர் என மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை முறை இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் மாறி வருகிறது.  அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் கேரளாவின் இந்த அறிவிப்பு இந்தியா அளவில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சி.பி.(எம்) பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி முற்போக்குச் சிந்தனையுடன் சட்டங்களையும், திட்டங் களையும் வகுத்துச் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கதும் - வரவேற்கத்தக்கதுமாகும்.

குறிப்பாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையையும் அது செயல்படுத்தி விட்டது.

திருநங்கை என்று மூன்றாம் பாலினத்தவருக்கு மரியாதை கலந்த பெயரைச் சூட்டிய மேனாள் முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் அவர்களின் செயலையும், இந்த இடத்தில் நினைவு கூர்வோம். கேரள மாநில அரசைப் பின்பற்றி இது போன்ற முற்போக்குத் திட்டங்களை, சட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசும் செயல்படட்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner