எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"இந்தியையும் - இந்துத்துவாவையும் எக்காலத்திலும் தமிழ்நாடு ஏற்கவே ஏற்காது; நமது நாட்டில் விவசாயிகள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். காரணம், ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்புதான். அது மேல் ஜாதிக்காரர்களுக்கானது  - மேலாதிக்க உணர்வு கொண்ட ஓர் அமைப்பு" என்று மேனாள் மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் மிகச் சரியாகவே, துல்லியமாகவே பேசி இருக்கிறார்.

பொதுவாக சிதம்பரம் போன்றவர்கள், மூத்த காங்கிரஸ்காரர்கள் இது போன்ற கருத்துக்களைப் பேசுவது கிடையாது. ஆனால் அண்மைக்காலத்தில் இவர்களை யெல்லாம் இந்த வகையில் பேச வைத்தது ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களும், அவற்றின் அரசு வடிவமான பாரதீய ஜனதாவும், இவற்றின் தலைவர்களும், தொண்டர் குழாமும் பேசும் பேச்சுக்களும், நடவடிக்கைகளுமேயாகும்.

"இந்தியாவில் இருப்பவர்கள் அவர்கள் எந்த மதம் என்று தங்களைச் சொல்லிக் கொண்டாலும், அவர்களும் இந்துக்களே" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறுகிறார். மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகம் இந்துக் கலாச்சாரம் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு அகில இந்திய தலைவராக இருக்கக் கூடியவர்களே கீழிறங்கிப் பேசினால் - அதன் விளைவு எங்கே கொண்டு போய் விடும்?

இவ்வளவையும் சொல்லி விட்டு, இந்திய தேசியம், பாரத மாதா என்றெல்லாம் வாய் நீளம் காட்டுவதில் மட்டும் குறைச்சலில்லை.

இவர்களின் இத்தகு பேச்சுக்களாலும், நடவடிக்கைகளாலும் ஏற்பட்ட விளைவு என்ன? மதச் சார்பின்மைபற்றி நாடாளு மன்றத்தில் பேச வந்த மக்களவை எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பச்சையாகவே பேசினாரே! "ஆரியர்களாகிய நீங்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டி வந்தவர்கள் நாங்கள் திராவிடர்கள்" என்று பேசிடவில்லையா?

தருண்விஜய் என்ற பிஜேபி பிரமுகர் "கறுப்பர்களாக இருக்கக் கூடிய தென்னாட்டவர்களோடு சகிப்புத் தன்மையோடு நாங்கள் பழகவில்லையா?" என்று சொல்லப் போக இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய செயலாளர் - மாநிலங்களவை உறுப்பினர்  து. ராஜா அவர்கள்  "ஆரியர் - திராவிடர் போரைத் தொடங்க வேண்டுமா?" என்று வாள் வீச்சு போல பளார் என்று  சுழற்றினாரே!

"நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல-  அது ஆரியர் திராவிடர் போராட்டமே" என்று தந்தை பெரியார் சொன்னபோது அதன் ஆழத்தினை - அதனை ஒப்புக் கொள்ளத் தயங்கியவர்கள்கூட, இன்னும் சொல்லப் போனால் அந்தக் கருத்தை ஏற்காதவர்கள்கூட இன்றைய கால கட்டத்தில் மத்தியில் ஒரு மதவாத பாசிச பா.ஜ.க. ஆட்சி அமைந்து விட்ட நிலையில் - தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை, பார்வையை ஒப்புக் கொள்கிறார்கள் தொலைநோக்குப் பார்வையைக் கண்டு வியக்கிறார்கள்.

'இந்துத்துவா' என்பதற்கு என்னதான் வெண்டைக்காய் விளக்கெண்ணெய் விளக்கங்களைச் சொல்ல முனைந்தாலும் - உச்சநீதிமன்ற நீதிபதியின் ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்கினாலும் (அவரே நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று கூறி விட்டார்) அதன் உட்கரு என்பது மனுதர்மம் தான் - ஒரு குலத்துக்கொரு நீதிதான்  - பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான் என்பதேயாகும்.

நரேந்திர மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவராயிற்றே, அவரைத்தானே பிரதமராக வைத்திருக்கிறது பா.ஜ.க. என்று 'கெட்டிக்காரத்தனமாக' பேச முற்படலாம்.

இந்த இடத்தில்தான் ஆரியத்தின் - பார்ப்பனீயத்தின் அணுகுமுறைகளை நோக்க வேண்டும். நேரடியாக ஒரு பார்ப்பனரை பிரதமர் பதவியில் அமர்த்தினால்,  மக்கள் மத்தியிலே பார்ப்பனீயத்தின் உண்மை உருவம் பச்சையாகப் பளிச்சிட்டுத் தெரிந்து போய்விடும். பார்ப்பனர் அல்லாத ஒருவரை - அதிலும் பிற்படுத்தப்பட்ட ஒருவரை பிரதமராக வைத்துக் கொண்டு - பின்னால் இருந்து இயக்கினால்  இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களான பார்ப்பன அல்லாத மக்களின் கண்களில் மண்ணைத் தூவி விடலாம் அல்லவா?

"நிஜப் புலியைவிட வேடம் போட்ட புலி அதிகமாக குதிக்கும்" என்று தந்தை பெரியார் சொன்ன அந்தக்  கூற்றை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்தால், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை நன்கு உணர முடியும்.

மோடியை முன் வைத்து தானே 'நீட்டை'த் திணித்து சமூகநீதியைச் சவக்குழிக்கு அனுப்புகிறார்கள். மோடி என்ற பிற்படுத்தப்பட்டவரை முன் வைத்துதானே குருகுலக் கல்வியைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள்.

ஒரு தாழ்த்தப்பட்டவரை குடியரசுத் தலைவராக ஆக்கியிருக்கிறார்கள் - அவர் ராஜஸ்தானில் ஒரு கோயிலில் அவமானப்படுத்தப்பட்டுள்ளாரே! தாழ்த்தப்பட்டவரை நாங்கள் குடியரசுத் தலைவராக ஆக்கி இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இப்படியொரு அவமானம் நிகழ்த்தப் பட்டுள்ளதே - பிரதமர் மோடி வாய்த் திறந்ததுண்டா? ஏன் குடியரசுத் தலைவரேகூட வெளிப்படையாக தன் கருத்தைக் கூற முடியவில்லையே!

இதுதான் அவர்கள் கூறும் இந்துத்துவா - புரிந்து கொள்ளுங்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner