எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான அலை எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. முக்கியமாக கருநாடகத்தில்   காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள் இணைந்து - பாஜகவின் 48 மணிநேர ஆட்சியை கவிழ்த்து ஆட்சி அமைத்திருப்பது கவனிக்கத்தக்கது, கருத்தூன்றத் தக்கதும்கூட. கருநாடகாவில் ஏற்பட்ட தேர்தல் மாற்றங்கள், அதன் முடிவுகள் காரணமாக இதுநாள் வரை எதிரும், புதிருமாக இருந்துவந்த கட்சிகள் ஒரே நேர்கோட்டில் வந்துவிட்டன.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த இடைத்தேர்தலில் சாமியார் முதல்வர் தொடர்ந்து 5முறை வென்ற கோரக்பூர் மக்களவைத் தொகுதியும், மற்றும் துணை முதல்வர் மவுரியாவின் பூல்பூர் மக்களவைத் தொகுதியும் எதிரணியின் வசம் சென்றுவிட்ட நிலையில் கருநாடக தேர்தல் பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றி ணைத்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை உரு வாக்கிக் கொடுத்துள்ளது. அதே போல் மே மாதம் 28ஆம் தேதி நடந்து முடிந்த 4 மக்களவை மற்றும் 11 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியத்தை மக்கள் வழங்கி விட்டனர். முக்கியமாக கைரானா தொகுதி வெற்றிக்காக இந்து - முஸ்லீம் வெறுப்புணர்வை பாஜக மிகவும் அதிகமாக விதைத்தது. ஏற்கெனவே கைரானா பகுதியை சிறிய பாகிஸ்தானாக பாஜகவின் முக்கிய தலைவர்கள் அறிவித்துப் பதற்றத்தை உருவாக்கினார்கள். அங்கு இசுலாமியர்களின் வாக்குகளைப் பிரிக்கவைக்கும் முயற்சியில் அப்பகுதியில் பிரபலமாக உள்ள இசுலாமிய தலைவர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் போட்டியிடவும் வைத்ததும், மேலும் அலிகார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜின்னா படத்தை குறித்து பிரச்சினையைக் கிளப்பியதும் எத்தகைய கேவலம்! இந்த நிலையில் கடைசி நேரத்தில் இசுலாமியப் பிரமுகர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதன் விளைவு என்ன தெரியுமா? பாஜக கைரானாவில்  தோல்வியடைந்தது.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் "பாஜக அல்லாத இந்தியா" என்ற முழக்கம் எழத் துவங்கி யுள்ளது, இதனால் பாஜக தலைமை அச்சத்தில் உறைந்து விட்டது. இதனை அடுத்து தனது கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமித்ஷா உடனடியாக இறங்கிவிட்டார். இருப்பினும் அவரது முயற்சி கைகொடுக்க வில்லை. சிவசேனா "கூட்டணியை முறித்தது முறித்ததுதான், வேண்டுமானால் விருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள்" என்று கறாராகக் கூறிவிட்டது,

பிகாரிலும் லோக் சமதாகட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர சிங் குஷ்வாகா அமித்ஷாவை சந்திக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், பாஜக இல்லாத இந்தியா என்ற எண்ணம் மேலோங்கி விட்டது.

இதனை அடுத்து பாஜக தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கோவாவில் செய்தி யாளர்களை சந்தித்தார். இவரைப் போன்றவர்களை முன்னி றுத்தி சிறுபான்மை மக்களைத் தங்கள் மாய வலைக்குள் கொண்டு வரும் யுக்தியில் இறங்கியுள்ளனர்.

பேட்டியில் அவர் கூறியதாவது: "வரப்போகும் 2019 பொதுத் தேர்தலில் மோடி தனிப்பெரும்பான்மை பெறுவார்.   அவருடைய ஒரே குறிக்கோள் நாட்டின் முன்னேற்றம் மட்டுமே ஆகும்.   ஆனால் அவருக்கு எதிரான அணியில்  உட்கட்சி மோதலும், ஊழலும் மட்டுமே நிறைந்துள்ளன.    இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது என்னும் பொய் பிரச்சாரத்தை அந்த அணி மேற்கொண்டுள்ளது.

உண்மையில் இந்த அரசு சிறுபான்மையினருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறது.   வறுமையில் வாடும் சிறுபான்மையினருக்கு நலத் திட்டங்கள் அவர்கள் இல்லத்தின் வாயிற்படியில் கொண்டு போய் சேர்க்கப் படுகின்றன.    சிறுபான்மையினரின் அமைதியைக் கெடுக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.   நாட்டில் எங்கேயோ நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளை பெரிதாக்கி இந்த அரசு இந்துத்வாவை முன்னிறுத்துவதாக கூறி வருகின்றன.

வரப்போகும் 2019 தேர்தலில் பாஜக இந்துத்துவாவையோ அல்லது ஆலயம் அமைப்பது பற்றிய விவகாரங்களையோ நிச்சயம் முன்னிறுத்தாது.    பாஜகவின் ஒரே பிரச்சாரம் முன் னேற்றம், முன்னேற்றம், முன்னேற்றம் மட்டுமே.  எனவே சிறுபான்மையினரை தேவையின்றி எதிர்க்கட்சிகள் பயமுறுத்த வேண்டாம்!

உலகில் உள்ள நாடுகளில் இந்தியாவில் மட்டுமே சிறுபான்மையினர் பத்திரமாக உள்ளனர்.     அவர்களை வாக்கு வங்கிகளாக நினைக்கும் எதிர்க்கட்சிகள் அவர்களிடையே அச்சத்தை உண்டாக்குகின்றன.   இனி அவ்வாறு செய்வோர் மீது சட்டம் பாயும்.   அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்" எனக் கூறி உள்ளார்.

இதுபோன்ற 'சித்து' வேலைகளில் ஈடுபடுவது என்பது பா.ஜ.க.வுக்கு - பார்ப்பனீயத்துக்குக் கைவந்த கலை. வீபிட ணர்களை அடையாளம் கண்டு கிரீடங்களை சூட்டுவார்கள்.

"இந்தியாவில் உள்ள அனைவரும், அவர்கள் இந்து மதத்தைச் சேராதவர்களாக இருந்தாலும், முசுலிம், கிறித்தவர், மதச்சார்பற்றவர்களாகயிருந்தாலும் அனைவரும் இந்துக் கள்தான்" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறாரே; இதனை மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஏற்றுக் கொள்கிறாரா? பதவி  ரொட்டித் துண்டு என்னென்னவெல்லாம் செய்கிறது பார்த்தீர்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner