எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புருஷனின் அளவுக்கு மீறிய அன்பும், ஏராளமான நகையிலும், புடைவையிலும் ஆசையும், அழகில் பிரக்கியாதி பெற வேண்டுமென்ற விளம்பர ஆசையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்து விடுவார்களேயொழிய உலகச் சீர்திருத்தத்திற்கோ, விடுதலைக்கோ பயன்படுவது கஷ்டமாகும்.

('குடிஅரசு', 29-9-1940)

நடிகர்களும் பொதுத் தொண்டும்!

தூத்துக்குடி 'ஸ்டெர்லைட்' விவகாரம் இன்று உலகின் சகலப் பரப்புகளிலும் பேசப்படுகிறது.

என்னதானிருந்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து, இரகளை செய்யலாமா? வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தலாமா? உரிமைக்காகப் போராட வேண்டியதுதான் - அதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்வதா என்று மேட்டுமைத் தன்மையில் சிலர் கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

அதுவும் சினிமா நடிகர் ரஜினிகாந்த் இந்த வகையில் ஒரு கருத்தைச் சொல்ல ஆரம்பித்தவுடன் சிலருக்கு 'ஞானோதயம்' பீறிட்டுக் கிளம்பியுள்ளது. இப்படிக் கூறுகிறவர்கள் தமிழ் நாட்டில் வேறு யாருமில்லை; பிஜேபிக்காரர்கள்தான் இப்படி யெல்லாம் 'பரிசுத்த யோவான்' போல வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

வேறு யாராவது வன்முறையை எதிர்த்துப் பேசினாலும், அதற்குக் குறிப்பிட்ட அளவில் கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சும். பிஜேபியும், சங்பரிவார்க் கூட்டமுமா வன்முறை களைப் பற்றி வக்கணையாகப் பேசுவது?

முதல் நாள்வரை ரஜினியை நார் நாராகக் கிழித்தவர்கள், தூத்துக்குடிக்கு அவர் சென்று வந்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்ததற்குப் பிறகு தட்டைத் திருப்பிப் போட ஆரம்பித்து விட்டனர்.

பிஜேபி மட்டுமல்ல - ஆளும் அஇஅதிமுகவும் 'ஆகா ஊகா' என்று ஆலாபரணம் பாட ஆரம்பித்ததுதான் விசித்திரம்!

ஒன்றை அவர்கள் மறந்து விட்டார்களே - அதுவும் ஒரு பத்து நாள்களுக்குள்ளேயே மறந்து விட்டார்களா? அல்லது மறந்து விட்டதாக மறைக்கிறார்களா?

தூத்துக்குடியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்து 13 உயிர்கள் குடிக்கப்பட்டபோது அது குறித்து நடிகர் ரஜினிகாந்த் 'திருவாய்' மலர்ந்தது என்ன? "காட்டுமிராண்டித்தனம்" என்று முழங்கிடவில்லையா?

அப்படி அவர் சொன்னது தவறு தான் என்று சொல்லப் போகிறார்களா? அல்லது அவரை சொல்ல வைக்கத்தான் போகிறார்களா? அவசரப்பட்டு விட்டார் என்பது பதிவானால் எதையும் ஆழமாக சிந்திக்காமல், உண்மையான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் பொறுப்புணர்ச்சி இல்லாமல், சிறுபிள்ளைத்தனமாகப் பேசக் கூடிய பேர் வழிதான் ரஜினி என்று சொல்லப் போகிறார்களா?

நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் நடந்திருக்கின்றன - இயற்கை உற்பாதங்கள் நிகழ்ந் திருக்கின்றன. காவிரி பிரச்சினை, நீட் பிரச்சினை என்று எத்தனை எத்தனைப் பிரச்சினைகள் - போராட்டக் களங்கள் தமிழ்நாட்டில் - அப்பொழுதெல்லாம் உதட்டை அசைக்க மனமில்லாத ஒரு மனிதர்க்கு, திடீரென்று தமிழ்நாட்டு அரசியல் மீது கசிந்துருகும் காதல் ஏற்பட்டதன் மர்மம் என்ன?

இந்தக் கேள்வி எழத் தானே செய்யும்? இன்னொரு கேள்வியும் இயற்கையாக எழக் கூடியதுதான். ஊழலை ஒழிப்பேன் என்கிறார் -அவர் தொழில் நடத்தும் அந்தச் சினிமாத் துறையில் இல்லாத ஊழலா? அவர் உட்பட  வெள்ளைப் பணம்தான் வாங்குகிறார் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்வது கருப்புப் பணம்தானே - அதன் முக்கிய  விளையாட்டு மைதானம் சினிமா உலகம்தானே!

குறைந்தபட்சம் அது குறித்து ஒரே ஒரு வார்த்தை அளவுக்காவது கருத்துத் தெரிவித்ததுண்டா? ரஜினி திரைப்படம் வெளியாவது என்றால் கள்ள டிக்கெட் ஆறாகப் பெருகி ஓடுவதில்லையா? அது குறித்து ஏன் வாய்த் திறப்பதில்லை?

'சிஸ்டம்' கெட்டு விட்டது எனும் நடிகர் தன்துறையில் உள்ள சிஸ்டத்தை சரிபடுத்த வேண்டாமா? வைத்தியரே, வைத்தியரே முதலில் உங்கள் 'நோயைக்' குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதுண்டு. அதுதான் இந்த நடிகர்களைப் பற்றி சிந்திக்கும் போது நினைவிற்கு வந்து தொலைகிறது.

சினிமாவில் கிடைக்கும் ஈர்ப்பை அரசியலின் முதலீடாகக் கொள்ள ஆசைப்படுவது அசல் மோசடியல்லவா! மகேந்திர தோனி சிறந்த கிரிக்கெட்காரராக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் - 'பலே பலே' நன்கு விளையாடுகிறார் என்று பாராட்டக் கூடச் செய்யலாம்தான்.

இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பதற்காக அவரைப் பிரதமராக்க ஆசைப்படலாமா? 'பாரத ரத்னா' பட்டம் கொடுக்கப்பட்டதே டெண்டுல்கருக்கு - மாநிலங்களவை உறுப்பினராகக்கூட குடியரசுத் தலைவர் அவரை நியமனம் செய்தாரே - எத்தனை நாள் அவர் நாடாளுமன்ற  நடவடிக்கையில் கலந்து கொண்டார்? எந்த மக்கள் பிரச்சினைபற்றிப் பேசி இருக்கிறார்?

நாடாளுமன்ற உறுப்பினருக்காக ஒதுக்கப்படும் நிதியைக் கூட பயன்படுத்தி மக்களுக்குக் காதறுந்த ஊசிமுனை அளவுக்குக்கூட நல்ல காரியம் செய்யவில்லையே!

ரஜினிகாந்தும், கமலகாசனும்கூட இந்தக் குட்டையில் ஊறிய மட்டைகள்தான். பொதுத் தொண்டு என்ன அறுபது வயதுக்கு மேல் தான் பொத்துக் கொண்டு கிளம்புமா? மக்கள் அனைவரும் ஏமாளிகள் என்று நினைக்க வேண்டாம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner