எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி மீது வைத்துள்ள குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது.

பிரதமராக இருக்கக்கூடிய மோடி எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற பாணியில் எவரையும்  உதாசினம் செய்து பேசுவது, தரக்குறைவாக விமர்சிப்பது, துணிந்து உண்மைக்கு மாறானவற்றைக் கட்டவிழ்த்து விடுவது, நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்று தெரிந்திருந்தும் தவறான வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டுவது என்ப தெல்லாம் பெருமைக்குரியவையல்ல, தார்மிகம், தார்மிகம் என்று தம்பட்டம் அடிக்கிறதே பிஜேபி அவைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைப் பொருத்தவரை அதிகம் பேசாதவர். அதைக்கூட ஒரு குறையாகக் கூறியவர்கள் - மோடியின் தடாலடிப் பேச்சுகளை எப்படி ஏற்க முடியும்!

பிரதமர் மோடியின் துடுக்குத் தனமும், அளவிறந்த சொல்லாடல்களும் தரம் தாழ்ந்த நிலையில் இருப்பதை -  மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் இந்தியக் குடியரசுத்  தலைவருக்கே  கடிதம் மூலம் தெரிவித்து பிரதமரை எச்சரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். "பிரதமர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு பிற கட்சித் தலைவர்களைப் பற்றி தேவையற்ற, மிரட்டும் வகையிலான, மோசமான வார்த்தைகளை மோடி பயன்படுத்துகிறார்; அது அவர் வகித்து வரும் பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றது; இதுகுறித்து, அரசியல் சாசனத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள குடியரசுத் தலைவர், பிரதமரை எச்சரிக்கை செய்யவேண்டும். நாட்டில் இதற்கு முன் பிரதமர் பதவி வகித்த அனைத்து உயர்ந்த மனிதர்களும், கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் நிலைநாட்டி மக்களுக்கான கடமையை முறைப்படி ஆற்றி விட்டுச் சென்று இருக்கின்றனர்; அவ்வாறிருக்க, போற்றத்தகுந்த நம்முடைய ஜனநாயக நாட்டில், அரசின் தலைமைப் பதவியில் இருக்கும் பிரதமர் மிரட்டும் தொனியிலும், எதிர்க்கட்சித் தலைவர்களை எச்சரிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் பேசுவார் என கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை" என்று கூறியுள்ள மேனாள் பிரதமர் மன்மோகன் சிங், "காங்கிரசு தலைவர்கள் மட்டுமின்றி வேறு எந்த கட்சித் தலைவர்களையும், பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசக்கூடாது" என்றும், "காங்கிரசு கட்சியோ, அதன் தலைவர்களோ, இந்த மிரட்டல்களுக்குப் பயப்படும் கோழைகள் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் மக்களவை எதிர்க்கட்சிக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், திக் விஜய் சிங், அகமது படேல், கபில் சிபல் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒரு பிரதமரைப் பற்றி முக்கிய தலைவர்கள் கையொப்பமிட்டு குடியரசுத் தலைவருக்கு எழுதியது என்பது இதற்கு முன் எப்பொழுதும் நடந்திராத ஒன்றாகும்.

இந்த நிலை ஏதோ பிஜேபிக்கு மட்டும் தலைக்குனிவு  என்று நின்று விடக்கூடாது - இந்தியாவுக்கே மாபெரும் தலைக்குனிவாகும் - வெளிநாடுகளில் கூட இந்தியா பற்றி ஒரு தரக்குறைவான மதிப்பீடு ஏற்பட வாய்ப்பளிக்கக் கூடியதாகும்.

அதே நேரத்தில் நரேந்திர மோடி அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள், பேச்சுகள் இவற்றை வைத்து பார்க்கும்பொழுது, அவர் இப்படியெல்லாம் பேசுவது - நடந்து கொள்வதெல்லாம்  வியப்பிற்குரிய ஒன்றாகக் கருத முடியாது.

தனது மார்பளவு 56 அங்குலம் என்று பேசுவதெல்லாம் எந்த வகையில் சேர்ந்தது; பிரதமர் பதவியா, அடியாளுக்கான தேர்வா?

அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்தது பிஜேபி ஆட்சிக் காலத்தில் என்றெல்லாம் ஒரு பிரதமர் சொல்லுவது எந்தத் தரத்தைச் சேர்ந்தது?

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று போற்றப்படக்கூடிய ஓர் அறிஞர் தொடர்பான ஒரு தகவலை ஒரு பிரதமர் சொல்லும் போது ஒரு பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டாமா?

தொடக்கத்தில் தவறான தகவலைக்கூடச் சொல்லியி ருக்கலாம். அது தவறு என்று தெரிந்தும் அதையே திரும்பவும் திருப்பிச் சொல்லுவது என்றால் - இது மிகமிக மோசமான நிலையே!

இது அவர்மீது குற்றம் இல்லை - அவர் சார்ந்த கட்சி - அதன் தத்துவமான இந்துத்துவா என்பதே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒன்றுதானே!

கடவுளான பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணன் பிறந்தான்,  தோளிலிருந்து சத்திரியன் பிறந்தான், இடுப்பி லிருந்து வைசியன் பிறந்தான், பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்று எழுதி வைத்தவர்கள்தானே, அந்த வருணாசிரமத்தைக் காப்பாற்றும் இராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்பவர்கள் தானே! அப்படி பட்டவர்களிடம் வாய்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஒரே வழி  - அவர்களை அதிகார பீடத்திலிருந்து அகற்றுவதே! குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி என்ன பயன் -  அவரே அந்த அமைப்பைச் சார்ந்தவர்தானே! பிரதமரை - அதுவும் மோடியை அவரால்  தட்டிக் கேட்க முடியுமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner