எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பொன்னேரியில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி சென்னை மண்டல மாநாடு எல்லா வகைகளிலும் சிறப்புப் பெற்றதாகும். இதற்காக சென்னை மண்டலத்தில் உள்ள இயக்கத் தோழர்கள், இளைஞர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும், திட்டமும் போற்றத்தக்கன.

இப்பொழுது எங்கு நோக்கினும் இயக்கத்தை நோக்கி இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவதைப் பார்க்க முடிகிறது.

மத்தியில் காவி ஆட்சி ஏற்பட்டதும்  அந்த ஆட்சியின் சட்டங்களும், போக்குகளும், பிஜேபி ஆளும் மாநிலங் களில் நடக்கும் கலவரங்களும், தாழ்த்தப்பட்டவர்களும், சிறுபான்மை மக்களும், பெண்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், மீண்டும் மனுதர்மம் தலை தூக்குகிறது - மீண்டும் ஆரிய ஆக்டோபஸ் ஆர்ப்பரித்து எழுதுகிறது என்பதை உணர்ந்த மாத்திரத்தில் இவற்றை வீழ்த்துவதற்கானது ஈரோட்டு அறிவியல்  - பகுத்தறிவு மூலிகைதான் என்ற எண்ணம் இயற்கையாகவே இளைஞர்கள் மத்தியில் எழுந்து விட்டது.

இந்த அலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் பல பாகங்களிலும் தலைதூக்கி நிற்பதைப் பார்க்க முடிகிறது.

குறிப்பாக 'நீட்' தேர்வை எதிர்த்து டில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் இடம் பெற்றிருந்த பதாகைகளில் ஒரு பக்கம் பாபா சாகேப் அம்பேத்கர் படம் - இன்னொரு பக்கம் தந்தை பெரியார் படம். இது எதைக் காட்டுகிறது? ஆந்திராவில் உஸ் மானியா பல்கலைக் கழகத்தில் நரகாசுரன் விழா எடுக்கிறார்களே இதற்கான உந்துதல் எங்கே இருந்து கிடைத்தது?

இன்றைக்குக் கல்வியின்மீது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. முதல் தலைமுறையாக தொழிற்கல்லூரிகளிலும் நுழைந்து கம்பீரமாக வெளிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறங்களைச் சேர்ந்த முதல் தலைமுறையினர் கூட வெளிநாடுகளிலும் பெரும் சம்பளத்தில் பணியாற்றும் நேர்த்தியைக் காண முடிகிறது.

கிராமப்புறக் குடும்பங்களிலிருந்து டாக்டர்கள் வெளி வந்துள்ளனர். இதனால் அந்தக் குடும்பங்கள் மட்டுமல்ல; அந்தச் சமூகத்தவரின் மத்தியிலே ஒரு தன்னம்பிக்கையும், கம்பீரமும் களை கட்டி நிற்கின்றன.

தமிழ்நாட்டுப் பாடத் திட்டத்தில் படித்து +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவர்களாக வந்தவர்கள் எல்லாம் எந்த வகைகளிலும் சோடைப் போனவர்கள் அல்லர். இடஒதுக்கீட்டினால் இடம் கிடைத்து மருத்துவர்கள் ஆனவர்கள் வெளிநாடுகளில் புகழ் பெற்ற மருத்துவர்களாக ஒளி வீசுகிறார்களே!

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படித்து, அங்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தானே மருத்துவப் பட்டம் பெற முடியும்?

இன்னும் சொல்லப் போனால் கல்லூரிகளில் நுழைவதற்கான தகுதி மதிப்பெண்களுக்கும், மருத்துவப் பட்டதாரிகளாக வெளி வரும் போது அவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதுதான் எதார்த்தமாகும்.

படிப்பை முடிக்கும் போது ஒருவரின் தகுதியைப் பார் - கல்லூரியில் நுழையும்போதே கழுத்தைத் திருகாதே என்பதைத்தான் இந்த யதார்த்தங்கள் காதைத் திருகிச் சொல்லுகிற அனுபவப் பாடமாகும்.

இன்றைக்கு நுழைவுத் தேர்வைத் திணித்து இருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். நூற்றுக்கு நூறு மருத்துவப் படிப்பைத் தங்கள் சுருக்குப்பையில் வைத்துக் கொண்டிருந்த பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து அதனை வெளியேற்றி, தலைமுறை தலைமுறைகளாகக் கல்வி மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் பகுதியி லிருந்து டாக்டர்கள் வீறு நடை போட வைத்த  தத்துவம் தான் சமூகநீதியாகும். இந்தச் சமூகநீதியின் கழுத்தை யறுக்கும் சூழ்ச்சிக் கொடுவாள் தான் 'நீட்'

சி.பி.எஸ்.இ. என்ற உயர்தட்டு மக்களின் கல்வி முறையில் தயாரிக்கப்படும் 'நீட்' யார் பக்கம் சகாயக் காற்றை வீசும் என்பதை அறை போட்டா ஆலோசனை நடத்த வேண்டும்?

+2 தேர்வில் 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வாங்கிய அரியலூர் அனிதா என்ற மூட்டைத் தூக்கும் ஒரு தொழிலாளியின் மகளால் 'நீட்' தேர்வில் வெறும் 86 மட்டுமே பெற முடிந்தது என்பதிலிருந்தே 'நீட்' தேர்வு யாருக்காக என்பது எளிதில் விளங்கிடுமே!

பொன்னேரி மாநாட்டுத் தீர்மானங்களின் அடிக்கோடும், மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகளின் கூர்மையும் சமூகநீதிக்கு எதிரான சூழ்ச்சிகளின் முகத்திரையைக் கிழிப்பதாகும்.

தோழர்களே, தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு நம் கடமை முடிந்து விடுவதல்ல. அவற்றை அடி மட்டம் வரை கொண்டு சேர்ப்பதுதான் அதைவிட முக்கிய மானதாகும், செயல்படுவீர்களாக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner