எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத்திற்கு இது மாநாடுகள் பருவமோ என்று திகைக்கும் வண்ணம் மாநாடுகள்! மாநாடுகள்!! ஆமாம் - திராவிடர் கழகத்தின் மாநாடுகள்தான் நாட்டின் எதிர் காலத்தினைக் கணிக்கும் காரணிகளாக இருந்து வந்துள்ளன.

இயக்கம் வெளியிட்ட "நமது குறிக்கோள்" - இரு தொகுதிகள் எனும் நூலை திராவிடர் கழகத் தோழர்கள் மட்டுமல்ல; தமிழ் நாட்டில் உள்ள கட்சித் தலைவர்கள், ஊடகத்தார்கள், இளைஞர்கள், மாணவர்கள் கண்டிப்பாக ஒருமுறை படிக்க வேண்டும்.

அடேயப்பா - இத்தனை மாநாடுகளா? இவ்வளவுத் தீர்மானங்களா? எவ்வளவுத் தொலை நோக்கோடு தீர்மா னங்கள் வடித்துக் கொடுக்கப்பட்டுள்ளன;  உலகில் இப்படி ஓர் இயக்கம் மக்களைத் திரட்டி, கருத்துறவாடி அவற்றிற்குத் தீர்மான வடிவம் கொடுத்து - ஆவணமாக அவற்றைப் பதிய வைத்த பாங்கு என்பது தந்தை பெரியாருக்கும், திராவிட இயக்கத்துக்கும், குறிப்பாக திராவிடர் கழகத்துக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மையான ஒளிக் கோவையாகும். மக்கள் மத்தியில் அவை புதிய சிந்தனைக்கான விதைகள் மட்டுமல்ல - ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பாதையும், பாதை விளக்குகளும் அவை!

ஆம், பல தீர்மானங்கள் மாநில, மத்திய ஆட்சிகளின் சட்டங்களாக  பிற்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன -அவற்றை எழுதினால் விரியும்.

இந்தக் கால கட்டத்தை எடுத்துக் கொண்டால் கடந்த வாரம் (6.5.2018) கணியூரில் திராவிட மகளிர் எழுச்சி மாநாடு, நேற்று முன்தினம் (12.5.2018) பொன்னேரியில் சென்னை மண்டல கழக இளைஞரணி எழுச்சி மாநாடு, வரும் 29ஆம் தேதி பட்டுக்கோட்டையில் தஞ்சை மண்டல இளைஞரணி எழுச்சி மாநாடு, வரும் ஜூலை 8இல் திராவிட மாணவர் கழகம் பிறந்த குடந்தையில் மாநில மாணவர் கழக மாநாடு.

பிறக்க இருக்கும் 2019இல் தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு - இப்படி எந்த இயக்கத்தாலும், அமைப்பாலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அலை அலையாக, அணி அணியாக மாநாடுகள்!

இந்த அண்மைக்கால மாநாடுகளின் மய்ய நீரோட்டம் என்பது - சமூக நீதி, மதச் சார்பின்மை, காவிரி உள்ளிட்ட வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டின் உரிமை மீட்பு - மகளிர்ப் பாதுகாப்பு - இவைகளுக்கெல்லாம் அச்சுறுத்தல்கள் அபாய கட்டமாக உள்ள இந்தக் கால கட்டத்தில் கழகத்தின் இம்மாநாடுகள் மக்கள் மத்தியிலே எழுச்சித் தீபத்தை ஏந்த வைக்கக் கூடியவையாகும்.

எந்த ஒரு தீர்மானமும் அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. தீர்மானத்தை அறியும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் கண்டுள்ள பாதிப்பை, நேரடியாக ஏற்படுத்தும் பிரச்சினைகளைக் கண்ணாடியாகக் காட்டுவதாக  இருக் கிறதே என்பதை உணர முடியும்.

இந்தியாவில் கல்வி மீதான எழுச்சி தமிழ்நாட்டில் மிகுந்து காணப்படுவதற்கே காரணம் - திராவிட இயக்கமும், அதன் தன்னிகரற்ற சகாப்தத் தலைவரான தந்தை பெரியாருமேயாகும்.

ஓர் ஆட்சியை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும்கூட தந்தை பெரியாரின் அளவுகோல் இதைப் பொருத்ததாகவே முக்கியமாக இருந்து வந்திருக்கிறது.

1916இல் திராவிட இயக்கமான நீதிக் கட்சி இதற்கான ஓர் கட்டமைப்பைத் தொடங்கி வைத்தது. அதன் ஆட்சியில்தான் சமூக நீதியின் அணிகலனான இட ஒதுக்கீட்டிற்கு சட்ட வடிவம் கொடுத்து செயல்பாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது (1928).

1950இல் அதற்கு  ஆபத்து வந்தபோது மக்களைத் திரட்டிப் போராடி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வரச் செய்தவர் தந்தை பெரியார்.

ஒவ்வொரு கட்டத்திலும் சமூகநீதியின்மீது ஆதிக்கவாதி களான ஆரியப் பார்ப்பனர்களால் முட்டுக்கட்டை போடப் பட்டுதான் வருகிறது. அவற்றையெல்லாம் எதிர்த்துத் தவிடு பொடியாக்கி; இறுதி வெற்றி மாலையைச் சூடிக் கொண்டு தான் வருகிறோம். 69 விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளிட்ட - மண்டல் குழுப் பரிந்துரை (27 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கு அகில இந்திய அளவில்) வரை!

இப்பொழுது 'நீட்' என்ற ஆல கால நஞ்சை மத்திய பாரதீய பார்ப்பனீய ஆட்சி திணித்து ஒடுக்கப்பட்ட மக்களை வீழ்த்தும் சுனாமியாக வீசிக் கொண்டு இருக்கிறது.

இந்த சமூக அநீதிகளை எதிர் கொண்டு வீழ்த்தி, வெற்றி பெற்ற வரலாற்றுக்குச் சொந்தமான திராவிடர் கழகம் - வெகு மக்களை ஒன்று திரட்டி இந்தக் களத்திலும் வெற்றி பெற்றே தீரும் என்பதில் அய்யமில்லை. பொன்னேரி இளைஞரணி மண்டல மாநாட்டில் இதற்கான தீர்மானம் வடிக்கப்பட்டுள்ளது, இத்திசையில்  முக்கிய மைல்கல்   என்பதில் அய்யமில்லை.

திராவிடர் கழகம் முன்னெடுத்திருக்கும் இந்தப் பிரச்சினையில் இருபால் மாணவர்களும், பெற்றோர்களும் வீதிக்கு வந்து கை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களின் கோரிக்கை. சிறைக்குக்கூட வர வேண்டாம் - அதற்காகத்தான் கருஞ்சட்டைப் பட்டாளம் இருக்கிறதே - குறைந்தபட்சம் நாங்கள் அழைக்கும்போது வீதிக்கு வந்து குரல் கொடுங்கள் என்றுதான் கோரிக்கை வைக்கிறோம்.

எங்களுக்காக அல்ல - உங்களுக்காக - உங்கள் பிள்ளைகளுக்காக - பயணிப்போம் - பயன் பெறுவோம் - வாருங்கள்.

கூடுங்கள் - குரல் கொடுங்கள் -  வெற்றி நமதே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner