எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கருநாடகா தேர்தலில் பிரதமர் மோடி பாஜகவுக்காக பல இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, "சுதந்திர போராட்ட வீரர்களான பகத்சிங், பாதுகேஸ்வர் தத் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது எந்த காங்கிரசு தலைவர்களாவது அவர்களை சென்று பார்த்தார்களா?  ஆனால் ஊழல் குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மட்டும் சென்று பார்க்கின்றனர்" எனக் கூறி உள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த உரை அரசியல் ஆர்வலர்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.    அப்போதைய காங்கிரசு தலைவரான நேரு உள்ளிட்டோர் பகத்சிங்  போன்றோரை சிறையில் சென்று பார்க்கவில்லை என  மோடி கூறுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.   இது குறித்து பலரும் சரித்திர விவரங்களை ஆராய்ந்துள்ளனர்.

அதில் மோடி கூறியது பொய்யான தகவல் என தெரிய வந்துள்ளது.   அந்த காலகட்டத்தில் நேருவுக்கு சுமார் 40 வயது இருக்கும்.   அவர் தீவிர அரசியலில் இருந்த காலம் அது. அப்போது அவர் பகத்சிங் உள்ளிட்டோரை சிறைக்குச் சென்று சந்தித்துள்ளார்.   இது குறித்து அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

"நான் பகத் சிங் மற்றும் ஜதிந்திரநாத் தாஸ் ஆகியோரை முதன் முதலில் சிறையில் சந்தித்தேன்.   பட்டினிப் போராட்டத்தினால்  அவர்கள் அனைவரும் சோர்வுற்று படுத்த படுக்கையாக இருந்தனர்.  அவர்களால் பேசக்கூட முடியவில்லை.  அவ்வளவு சோர்விலும் பகத்சிங்கின் முகம் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைதியான தோற்றத்துடன் இருந்தது.  அவர் முகத்தில் எந்த ஒரு கோபமும் இன்றி சாந்தம் தெரிந்தது" என தனது சுய சரிதையில் நேரு குறிப்பிட்டுள்ளார்.

அந்த பட்டினிப் போராட்டத்தில் தாஸ் மரணம் அடைந்ததும் அது குறித்து நேரு, "இந்த இளைஞர்களின் தியாகம் என்னை மிகவும் துயருக்குள்ளாக்கி விட்டது.  தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களைப் பொருட்படுத்தாது நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகம் போற்றத்தக்கது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் சுகதேவ் மற்றும் ராஜ்குரு தூக்கிலிடப்பட்டதும் காங்கிரஸ் சார்பில் இரங்கல் செய்தி ஒன்றையும் நேரு அளித்துள்ளார்.    அதில்  "எந்த வகையில் வன்முறை நிகழ்ந்தாலும் அதை காங்கிரசு ஒப்புக் கொள்ளாது.  ஆனால் அதே நேரத்தில் பகத்சிங், மற்றும் அவரது கூட்டாளிகளான சுகதேவ் மற்றும் ராஜ்குருவின் மரணத்துக்கும், தியாகத்துக்கும் தனது வருத்தத்தை அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் மோடி பொய்யான தகவல்களைக் கூறுவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டத்தைக் காங்கிரசு கொடுக்கவில்லை, வாஜ்பேயி பிரதமராக இருந்த கால கட்டத்தில்தான் அளிக்கப்பட்டது என்றும் அபாண்டப் பொய்யினை அவிழ்த்துக் கொட்டியுள்ளார் மோடி
அண்ணல் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா பட்டம் 1990 ஏப்ரல் 14ஆம் தேதி சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது காங்கிரசு ஆதரவோடு அளிக்கப் பட்டது என்பதுதான் சரியானதாகும்.

ஒரு பிரதமராக இருக்கக் கூடியவர் வாய்ப் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற போக்கில் பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததுதானா என்ற கேள்வி எழுகிறது; என்ன செய்வது, பொருத்தமற்றவரை அந்த ஆசனத்தில் அமர வைத்தால் இதுதானே நடக்கும்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner