எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்  சதீஷ் சர்மா என்னும் வழக்குரைஞர், இவர் மாநில பாஜகவின் முக்கிய பிரமுகராகவும் உள்ளார்.  இவர் தலித் வகுப்பைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர் ஒருவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதைப் படமாக எடுத்துள்ளார். இதைக் காட்டி பலமுறை அந்த பெண் வழக்குரைஞரை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளார்.  இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கச் சென்ற போது காவல்துறையினர் அந்தப் பெண் வழக்குரைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் குறித்து பல்வேறு தவறான தகவல்களையும் சமூகவலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் பெரும் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி அப்பெண் வழக்குரைஞர் சாலை நடுவே அமர்ந்து தன்னுடைய தலையை மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இவ்விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.  மொட்டை அடித்துக் கொண்ட அந்த பெண் வழக்குரைஞர் ஊடகவிய லாளர்களிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து பேட்டியளித்தார்.   ஊடகவியளாலர் சந்திப்பின் போதும் காவல் துறையினர் அங்குவந்து அவ்வழக்குரைஞரை மிரட்டி அவ்விடத்தில் இருந்து வெளியேற்றினர்.   கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி 17 வயது சிறுமி ஒருவர் "பாஜக உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்  செங்கார் என்பவரும், அவரது சகோதரர் மற்றும் உதவியாளர்கள் உதவிகேட்டுச்சென்ற என்னை பாலியல்வன்கொடுமை செய்துவிட்டனர்" என்று கூறி காவல்துறையில் புகார் அளித்தார்.காவல்துறையினர் புகாரைப் பெறாமல் பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது தந்தையையும் காவல்நிலையத்திற்கு இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.  இதில் சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உ.பி. முதல்வர் சாமியார் வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய ஊடகவியலாளர்கள் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை குறித்து செய்தி வெளியாக்கிய பிறகு, நீதிமன்றம் தானாகவே இந்த வழக்கை எடுத்துக்கொண்டு அரசைக் கண்டித்ததன் விளைவாக பாலியல் குற்றவாளியும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான குல்தீப் சிங்க் செங்கார் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் பாஜக பிரமுகர் மீது இளம்பெண் வழக்குரைஞர் புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வக்கிரப் போக்கு நாளும் வளர்ந்து வருவது அன்றாடச் செய்தியாகி விட்டது.

அதிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களிலும், அதிலும் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் வன்புணர்ச்சி என்பது தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கிறது.

கணியூரில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானத்தை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாகும்.

தீர்மானம் 7: பாலியல் கல்வி, தற்காப்பு, துப்பாக்கிப் பயிற்சிகள் தேவை!

பாலியல் வன்கொடுமை என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் கூட இந்தப் பாதிப்புக்கு ஆளாகி வருவது வெட்கப் படத்தக்க ஒன்றாகும்.

இது தொடர்பாக தூக்குத் தண்டனை உட்பட தண்டனை அளிக்கும் (போக்ஸோ) சட்டம் வரவேற்கத் தக்கதே!

அதேநேரத்தில், இத்தகு சட்டத்தின்மூலம் மட்டுமே பாலியல் வன்கொடுமையைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. பாலியல் கல்வி இரு பாலருக்கும் அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சி, கராத்தே பயிற்சி, துப்பாக்கிப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. மத்திய, மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்த வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. போக்ஸோ சட்டத்தில் சிறுவர்களையும் பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றும் வகை யில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இந்தத் தீர்மானம் இந்தக் கால கட்டத்திற்கு அவசியமானது - அவசரமானதும்கூட.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner