எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சாமியார் முதல்வர் ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அங்கு பெண்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ரோமியா ஸ்குவாட்(ரோமியோ படை) என்ற பெயரில் காவல்துறை மற்றும் இந்துத்துவ அமைப்பினர்கள் கொண்ட ஒரு படையை நியமித்தார் முதல் அமைச்சர். இதன் பணி ஆண்களுடன் பெண்கள் சென்றால் அவர்களைப் பிடித்து அடிப்பதுதான்,    இந்தப் படையில் ஆதித்யநாத்தின் யுவவாகினி என்ற படையும் சேர்ந்து செய்த கொடுமைகள் ஏராளம், பள்ளித்தோழனுடன் சென்ற பெண்ணின் ஆடையைக் கிழித்து அவமானப்படுத்தியது, இஸ்லாமியர் ஒருவர் தனது வீட்டிற்கருகில் உள்ள இந்துப் பெண்ணுடன் கடைவீதிக்கு சென்றதால் சாலை நடுவில் வைத்து அந்த இஸ்லாமியருக்கு மொட்டை அடித்து அவமானப்படுத்தியது போன்றவை சாமியார் ஆட்சியில் நடந்தது.  அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்றாகி விட்டது.  இந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்த தாயை சந்திக்கச் சென்று கொண்டு இருந்த 15 வயது சிறுமி பாஜகவின் உன்னாவ் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் குல்தீப் சிங் சென்கார் மற்றும் அவரது அடியாட்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் அந்தச் சிறுமியைத் தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து அவரை மிரட்டி சாலையில் விட்டு விட்டுச் சென்றுவிட்டார்.    இது தொடர்பாக அச்சிறுமி தனது தந்தையுடன் சென்று உன்னாவ் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அந்தப்புகாரை ஏற்காமல் அவர் மீது அரசுப் பணியாளரை பணிசெய்யவிடாமல் இடையூறு செய்தல் மற்றும் மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பிறகு அவர் நீதிமன்றம் மூலம் பிணையில் விடுதலையானார்.   தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி நீதிபதிகளிடம் நேரிடையாகவே கூறினார். ஆனால் நீதிபதி புகாராக காவல்துறையினரிடம் கொடுக்கும்படிக் கூறிவிட்டார். மாவட்டக் காவல்துறை ஆணையர் உட்பட அனைவரிடம் புகார்கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் காவல்துறையின் மீது நம்பிக்கை இழந்து தலைநகர் லக்னோ வந்து முதல்வரைச் சந்திக்கத் திட்டமிட்டார். அவர் முதல்வரிடம் புகார் கொடுக்கச் சென்றுள்ளார் என்றதும், பாலியல் வன்கொடுமை செய்த சட்டப் பேரவை உறுப்பினர் குல்தீப் சிங்கின் சகோதரர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் அடித்து உதைத்தார். இதில் படுகாயமடைந்த பெண்ணின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சாமியார் முதல்வர் வீட்டின் முன்பு அவர் தற்கொலை செய்ய முயன்றார்.   அந்தப் பெண்ணின் தந்தை மருத்துவமனையில் மரணமடைந்தார் என்பதுதான் எத்தகைய கொடுமை!  விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி இதில் சம்பந்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் சென்காரின் சகோதரர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.   உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஒராண்டில் மட்டும் 3000த் திற்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இதில் பெரும்பான்மை பதிவாகவில்லை என்றும் இப்பாதகச்செயலில் ஈடுபட்டவர்கள் பெரும் பாலானோர் பாஜக பிரமுகர்கள் என்று சமாஜிக் ஏக்தா மன்ச் என்ற அமைப்பு கூறியுள்ளது.   இந்த அமைப்பு அரசின் பெயரை மக்களிடையே கெடுக்க இது போன்ற போலியான புகார்களைக் கொடுத்து வருகிறது என்று உபி சாமியார் முதல்வர் ஆதித்யநாத்  நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் போது பேசினார். இவர் பேசி முடித்த ஒரு வாரத்திற்குள் சிறுமி பாஜக சட்டப் பேரவை உறுப்பினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் அவரின் தந்தை கொலையும்  நடந்துள்ளது.   இதே போல் ராஜஸ்தானிலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாஜக பிரமுகர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரமும் திசை திருப்பப்பட்டு அந்தப்பெண்ணின் உறவினர்கள் மீதே கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது.   காஷ்மீர் மாநிலம், கட்டுவா பகுதியில் பல நாடோடிப் பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். அந்த நாடோடி வகுப்பை சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த இந்து அமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கூறும் போது அந்த நாடோடிகள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை எங்கள் பகுதியில் இருந்து விரட்ட இதைச் செய்தோம் என்றும் ஒப்புக் கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கூடிய பாஜக வழக்குரைஞர்கள்  கொலைவழக்கில்  கைதானவர்கள் குற்ற மற்றவர்கள் என்று கூறி நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்திற்கு இந்து அமைப்பான இந்து ஏக்தா மன்ச் மற்றும் காஷ்மீர் அமைச்சரவையில் உள்ள சில பாஜக அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இந்துத்துவாவில் பெண்கள் என்றால் படுக்கையறைப் பொருள் தானே! படுக்கை, ஆசனம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 9 சுலோகம் 17).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner