எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மீண்டும் இராஜபக்சேவா?

1.2.2018 அன்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்சே யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.  சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யச் சென்றிருந்தார். அவர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பல பொய்களை அவிழ்த்துவிட்டார்.

(1) கடந்த மூன்று  ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருப்ப தாலும் இங்குள்ள மக்களுடன்  பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததாலும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். எங்களது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் காணப்பட்டது.

(2) எங்கள் ஆட்சியில் இருந்தபோது மின்சாரம், நீர், போக்குவரத்துக் கான வழிகள், புதிய பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, சாலைகள் எனப் பலதுறைகளிலும் அபிவிருத்தியைச் செய்திருந்தோம்.

(3) நான் ஆட்சியில் இருந்தபோது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகப் பேசுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருந்தேன். ஆனால் ஒத்துவரவில்லை.

(4)  இந்த அரசு பொய்களைக் கூறிக் கொண்டிருந்ததைத் தவிர வேறெதனைச்  செய்திருக்கிறது? எனவே, இவர்களுக்காக உங்களது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டாம்; நாங்கள் தற்போது புதிய கட்சியில் வித்தியாசமான சிந்தனையில் வந்துள்ளோம். எமது தாமரை மொட்டுச் சின்னத்தை மக்கள் வெற்றி பெறச் செய்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தவேண்டும்.

(5) நாங்கள் இனவாதிகள் அல்லர். எங்கள் உறவினர்கள்   தமிழர் களைத் திருமணம் செய்து இருக்கின்றனர். ஆகவே உங்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் செய்வோம் என்று வாக் குறுதிகளை அள்ளி வீசினார்.

சும்மா சொல்லக் கூடாது. இராஜபக்சேவின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொத்துக் குண்டுகளைப் போட்டுக் கொன்று குவித்து, சரணடைந்த நூற்றுக்கணக்கான விடுதலைப்புலித் தளபதிகளை சித்திரவதை செய்து படுகொலை செய்துவிட்டு தெற்கில் போர் வெற்றிவிழாகொண்டாடியஒருவர்யாழ்ப்பாணத்தில்நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு  பேசியிருக்கிறார் என்றால் ‘அசகாய துணிச்சல் தானே!'  போருக்குப் பின்னர் இராஜபக்சே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட்டோம், நாட்டைப்பயங்கரவாதிகளிடம்இருந்து மீட்டு விட்டோம் எனச் சொல்லி  கொழும்பில்  இராணுவ அணிவகுப்போடு வெற்றி விழா கொண்டாடியவர். வடக்கிலும், கிழக்கிலும் வெற்றித் தூண்களையும், போர் நினைவகங்களையும், புத்த  கோயில்களையும், புத்தர் சிலைகளையும் பவுத்தர்கள் வாழாத இடங்களில் இராணுவத்தைக் கொண்டு நிறுவியர்; அவரது பேச்சைச் செவிமடுப்பவர்கள் இந்தப் பூனையும் பால் குடிக்குமா? எனக் கேட்பார்கள்.

(1) அவரது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரமும் கிடைத்ததாம்.

இராஜபக்சே ஆட்சியில்தான்  34 ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டார்கள். இவர்களில்  31 பேர் தமிழர்கள். ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்கா, பிரதீப் ஏக்னெலிகொட, விளையாட்டு வீரர் வசிம் தாயுடீன் போன்றவர்களைக் கொன்றது யார்? குற்றவாளிகளை ஏன் பிடிக்கவில்லை? இவரது ஆட்சியில்தான் வெள்ளைவேனில் ஆட்கடத்தல், காணாமல் போதல், கொலைகள், ராணுவத்தினர் தமிழர் களை மிரட்டி வசூல் வாங்குதல் போன்ற அட்டூழியங்கள் நிர்வாணக் கூத்தாடின.  இவற்றை இராஜபக்சே மறந்தாலும்  தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.  உலக மனித குலமும் மறக்காது - மன்னிக்காது.

(2) நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மின்சாரம், நீர், போக்கு வரத்துக்கான வழிகள், புதிய பாடசாலைகள், பாடசாலைகளில் ஆய்வு கூட வசதிகள், வைத்திய சாலைகள் அபிவிருத்தியைச் செய்திருந்தோம் என்று புளுகியுள்ளார்.

பள்ளிக்கூடங்கள், பாடசாலை ஆய்வு கூடங்கள், வைத்திய சாலைகளை எப்போது  இராஜபக்சே வளர்ச்சியுறச்  செய்தார்? போரில் இடிந்து போன பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஒன்றைக்கூட இராஜபக்சே திருத்திக் கொடுக்கவில்லை. ஒரு புதிய வீட்டைக் கூடக் கட்டிக் கொடுக்கவில்லை. அன்றைய பொருளாதர அமைச்சர் பசில் இராஜபக்சே வீடுகள் திருத்துவதற்கோ புதிதாகக் கட்டிக் கொடுப்பதற்கோ அரசிடம் பணம் இல்லை என்று கைவிரித்தார் என்பதுதான் வரலாறு.

(3) நான் ஆட்சியில் இருந்தபோது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகப் பேசுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத் திருந்தேன். அதற்கு வருவதாகக் கூறிவிட்டு அவர்கள் சென்றிருந்தனர். ஆனால் ஏனோ தெரியாது அவர்கள் திரும்பி வரவேயில்லை என்கிறார்.

ஒரு பவுத்தரான இராஜபக்சே பொய் சொல்வது பவுத்தக் கொள்கைப்படி பஞ்மா பாதகங்களில் ஒன்று. இராஜபக்சேவின் பொய்க்குத் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இராஜபக்சேதான் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பிற்கு தண்ணீர் காட்டினார். இரண்டொரு முறை  சம்பந்தரை அலரிமாளிகைக்கு அழைத்த இராஜபக்சே தனது அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை மிரட்டியதாக அண்மையில் சம்பந்தன் கூறியிருந்தார். தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினர் உள்பட  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித நிதியுதவியும்  தரப்படவில்லை.

(5) நாங்கள் இனவாதிகள் அல்லர். எனது  உறவினர்களும்  தமிழர்களைத் திருமணம் செய்து இருக்கின்றனர். ஆகவே உங்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் நாம் எமது காலத்தில் வழங்கியிருந்தோம். இருந்தபோதிலும் நாங்கள் தேவையற்ற காரணத்தினால் தோல்வியைத் தழுவவேண்டியிருந்தது. தனக்கும் வட கிழக்குத் தமிழ்மக்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டார்கள் என்றார்.

ஆனால் உண்மை என்ன? ராஜபக்சே 2011 ஆம் ஆண்டு தமிழர் பகுதியில் வலுக்கட்டாயமாக  குடியேற்றப்பட்ட 3,000 சிங்களக் குடும் பங்களுக்கு நில உரிமைப் பத்திரங்களை வழங்கினார். பின்னர் நடந்த கூட்டத்தில் பேசும் போது "நான் சிங்களவன், இந்த நாடு சிங்கள நாடு. பெரும்பான்மை சிங்களவர்களாகிய நாங்கள் சொல்வதை சிறுபான்மை தமிழர்கள் கேட்டு நடக்க வேண்டும்" என்று திமிரோடு பேசவில்லையா?

இத்தகைய கொடுங்கோலன் ராஜபக்சேயின் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சிக்குரியது. இந்தத் தேர்தலில் அதிபர் சிறீசேனா தலைமையில் உள்ள இலங்கை சுதந்திராக் கட்சியும், ரனில்விக்ரமசிங்கே தலைமையிலான அய்க்கிய தேசிய கட்சியும் கூட்டணியிலிருந்து விலகித் தனித்தனியே போட்டியிட்டன. தமிழ்த் தேசிய கட்சியும் தனியே போட்டியிட்டது. அதன் விளைவுதான் ராஜபக் சேவின் சிறீலங்கா பொதுஜன பெரமுனா 45 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இனப்படுகொலை மீதான வழக்கு செத்துப் போய்விட்டது. மீண்டும் ராஜபக்சே உயிர்ப்பெற்று அதிகார நாற்காலியில் அமர்ந்தால், தமிழினம் என்பது இறந்தகால யெபராகிவிடும், எச்சரிக்கை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner