எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சமூகநீதிக்கு எதிரான ‘நீட்' தேர்வை எதிர்த்து இந்தியாவிலே தமிழ்நாடு முன்னணிக் களத்தில் தோள் தட்டி நிற்கிறது. காரணம், இது தந்தை பெரியார் பிறந்த பூமி. இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்படுவதற்குக் காரண மாக இருந்த சமூகநீதி சிந்தனை ஊட்டம் மிகுந்த பூமி இது.

இன்றைக்கு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சட்டப்பூர்வ தகுதியையும் பெற்று, செம்மாந்து நிற்கிறது.

மத்திய அரசுத் துறைகளிலும் இட ஒதுக்கீடுபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்தவேண்டும் என்பதற்காக போர்க் கோலம் பூண்டதும் தமிழ்ப் பூமிதான். அதற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தவில்லையா?

மண்டல் குழுவின் தலைவர் பிந்தேஸ்வரி பிரகாஷ் மண்டல் அவர்கள் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்றுக் கலந்துகொண்ட கூட்டத்தில்,

‘‘நாங்கள் பரிந்துரைகளை அளிக்கத்தான் முடியும். ஆனால், அவற்றைச் செயல்படுத்த வைக்கும் ஆற்றல் பெரியார் பிறந்த தமிழ்நாட்டுக்குத்தான் உண்டு. குறிப்பாக திராவிடர் கழகத்தின் பங்கு இதில் முக்கியமானதாக இருக்கவேண்டும்'' என்று கூறியதுண்டே!

இப்படி வரிசையாகக் கூறிக்கொண்டே போக முடியும். அந்த வரிசையில் மருத்துவக் கல்வி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக அகில இந்திய ‘நீட்' தேர்வு என்பது - சமூகநீதியின் அடித்தளத்தையே அடித்து நொறுக்குவதாகும்.

இதனைத் தொடர்ந்து ஆரம்ப கட்டம்முதல் திராவிடர் கழகம் எதிர்த்து வருகிறது. அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்ற ஓர் அமைப்பு சென்னை பெரியார் திடலில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (27.1.2018) உருவாக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன.

அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை முக்கியமாக மாணவர்களின் எதிர்காலத்தைக் குறித்தது என்பதால், மாணவர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுப்பது பொருத்தமானதாக இருக்கும் என்ற தன்மையில், கடந்த சனியன்று (10.2.2018) சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் மாணவர் பிரதிநிதிகள் கூட்டத்தினை திராவிடர் கழகம் ஒழுங்கு செய்திருந்தது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

சமூகநீதிப் பாதுகாப்பிற்கான பேரவை ஒன்று உருவாக்கப்பட்டு அதில் அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்களாக இருந்து அடுத்த கட்டத்திற்குப் போராட்டத்தை நகர்த்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

‘நீட்' தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதே என்று சோர்ந்து போகவேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில்கூட 21 ஆண்டுகள் போராடித்தான் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டது என்பது நினைவிருக்கட்டும்.

நீதிமன்றத்தைவிட வீதிமன்றம் வலுவானது - பலமானது.

எத்தனையோ பிரச்சினைகளில் இதனை நிரூபித்துக் காட்டி யுள்ளோம். 2017-2018 ‘நீட்' தேர்வில் எத்தனை எத்தனைக் குறை பாடுகள் - குழப்பங்கள் - மோசடிகள்! நியாயமாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ‘நீட்' தேர்வை அடியோடு ரத்து செய்திருக்கவேண்டும்.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான இந்துத்துவா ஆட்சியில் எல்லாமே ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் மனுதர்ம ஆட்சிதானே!

தேர்வுத் தாள் தயாரிக்கப்பட்ட இடத்திலேயே ஊழல் நடைபெற்றதா இல்லையா?

மருத்துவ மேற்படிப்புக்கான ‘நீட்' தேர்வில் மிகப்பெரிய ஊழல், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் உரிய ஆதாரங்களுடன் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகவும் ஆர்.டி.அய். ஆர்வலர் ஆனந்த் ராய் தெரிவித்ததுண்டு.

500 மாணவர்களுக்குத் தொடர்புத் தேர்வை ஆன்லைனில் நடத்திய புரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம், 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சாப்ட்வேர் மூலம் வினாத்தாளை கசிய விட்டிருக்கிறது. குறிப்பாக டில்லி, நொய்டா, சண்டிகர், லக்னோ, புவனேசுவர், ராஞ்சி ஆகிய தேர்வு மய்யங்களில் இந்த முறைகேடு நடைபெற்று இருக்கிறது.

இது தொடர்பாக டில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி, புரோமெட்ரிக் நிறுவனத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர். ஆனால், யார்மீதும் எந்த நடவடிக்கையுமே மேற்கொள்ளப்படவில்லையே! (‘இந்துஸ்தான் டைம்ஸ்', 23.7.2017).

மாநிலத்திற்கு மாநிலம் வினாத்தாள்களில் வேறுபாடு; ஒரு மாநிலத்திற்குள்ளும் மாநில மொழி மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள்களில் வேறுபாடு; பி.ஜே.பி. ஆளும் மகாராட்டிரம், குஜராத் மாநிலங்களில் எளிமையான கேள்வித்தாள்கள்; தேர்வு முடிந்து முடிவு வெளிப்படுத்தப்பட்ட நிலையில், இரட்டைக் குடியுரிமை பெற்றோருக்கான வாய்ப்பு என்று இதற்குமேல் கோளாறுகள், மோசடிகள் நடைபெற முடியாது என்று சொல்லும் அளவுக்கு கடந்தாண்டு ‘நீட்' தேர்வில் ஏற்பட்டனவே!

இதற்கு மேலாக இன்னொரு உலக மகா மோசடி; ‘நீட்' தேர்வை வெளிநாடுகளில் வாழுவோரும் தேர்வு (குளோபல் எண்ட்ரன்ஸ்) எழுத அனுமதிக்கப்பட்டதாகும்.

நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? எந்த அடிப்ப டையில் வெளிநாட்டில் வாழ்வோர் இந்தத் தேர்வை எழுதினர் என்று திராவிடர் கழகத் தலைவர் திருப்பித் திருப்பிக் கேட்டுவரும் இந்தக் கேள்விக்கு இதுவரை விடையில்லையே, ஏன்?

மத்திய அரசும், நீதிமன்றங்களும் துணைபோனால் தீர்வுக்கு எந்தக் கதவைத்தான் தட்டுவதோ?

வெகுமக்களின் இதயக் கதவு திறந்தாலொழிய இந்த அநீதிகளுக்கு விடிவில்லை என்பதுதான் மிகப்பெரிய உண்மையாகும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner