எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘தினமலர்’ ஏடு முகமூடி அணிந்த சங் பரிவாரின் அதி காரப்பூர்வமற்ற ஏடு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே! ‘‘இது உங்கள் இடம்‘’ - என்ற ஒரு பகுதி இதில் உண்டு. இதில் கடிதங்கள் வெளியிடப்படும். அதே கடிதம் அட்சரம் பிறழாமல் அந்த நிறுவனம் நடத்தும் ‘காலைக்கதிரில்‘ வேறொருவர் பெயரில் வெளிவரும். இதனை ஆதாரப்பூர்வமாக ‘விடுதலை’ வெளியிட்டு அம் பலப்படுத்தியதுண்டு.

பார்ப்பனர்களுக்கு இருக்கும் இனவுணர்வு நம் மக்களுக்கு இல்லையே என் செய்வது!

‘தும்பை விட்டு வாலை பிடிக்கக்கூடாது’ எனும் தலைப் பில் ஒரு கடிதம் நேற்று வெளிவந்துள்ளது (30.1.2018).

பிள்ளையார் சிலையை உடைத்தார், ராமர் படத்தை செருப்பால் அடித்தார் ஈ.வெ.ரா. - இது பகுத்தறிவா என்று கேட்கிறது ‘தினமலர்’. இவற்றையெல்லாம் மறுவாசிப்பாக மக்கள் மன்றத்தில் ஏற்றியதற்கு ‘நன்றி'.

பிள்ளையார் சிலையை ஏன் உடைத்தார் பெரியார்? சிவன் மனைவி பார்வதி தேவியாரின் உடல் அழுக்கிலிருந்து அந்தப் பிள்ளை உண்டாயிற்று என்று எழுதுவதும், அதனை நம்புவதும், அந்த ஆபாச, அருவருப்பான அறிவின் எள் மூக்கு முனைக்கும் ஒவ்வாத ஒன்றைக் கடவுள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

ஏற்றுக்கொள்ளாதே - அதற்கு எவ்வித சக்தியும் இல்லை, இல்லவே இல்லை - இதோ பார் போட்டு உடைக்கிறேன் - பிள்ளையாருக்குச் சக்தி இருந்தால், அது தன்னை நிரூபித்துக் கொள்ளட்டும் என்று கேட்டது பகுத்தறிவு இல்லாமல் வேறு என்னவாம்?

புத்தர் ஜெயந்திபற்றி தந்தை பெரியார் உரையைப் பதிவு செய்த வானொலி அதனை ஒலிபரப்ப மறுத்தபோது, தந்தை பெரியார் அறிவித்ததுதான் விநாயகர் சிலை உடைப்பு - ஆம் ஒரு எதிர்வினைதான்.

இன்னும் சொல்லப்போனால், புத்தருக்குப் பெயர் விநாயகர். அந்தப் பெயரை உருட்டல், புரட்டல் செய்துதான் சிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தான் என்று கதை கட்டி விநாயகன் எனும் பெயர் சூட்டி புத்தரை வரலாற்றில் இருட் டடிப்பு செய்ய ஆரியம் செய்த சூழ்ச்சிதான் இது.

விநாயகர் அல்லது பிள்ளையார் பிறப்பு என்பதுகூட இந்து மதத்தில் ஒரே மாதிரியாக இல்லையே! பார்வதியின் அழுக்கிலிருந்து பிறந்தவன் என்றும், காட்டுக்குச் சென்ற சிவனும் - பார்வதியும் அங்கு ஓர் ஆண் யானையும், பெண் யானையும் கலவி செய்ததைக் கண்டு உணர்ச்சிவயப்பட்டு, சிவன் ஆண் யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும் உருமாறி கலவி செய்து பிறந்தவன்தான் யானை முக னான இந்த விநாயகன் என்ற பிள்ளையார் என்றும் காட்டு விலங்காண்டித்தனமாக எழுதி வைத்து நம்ப வைக்கும் காட்டுமிராண்டிகள் செய்கை ஏதோ நாகரிகமானது போலவும், இதனை எதிர்த்த தலைவர் பெரியார் ஏதோ நாகரிகமற்றவர் போலவும் சித்தரிப்பது அசல் போக்கிரித்தனம் அல்லவா!

பகுத்தறிவுள்ள மனிதன் பெரியார் பக்கம் நிற்பான். பக்திச் சேற்றில் பகுத்தறிவைப் பறிகொடுத்தவன் எதிர்த்திசையில் தான் நிற்பான் - ‘தினமலர்’ அந்த இடத்தில்தான் நிற்கிறது.

இராமனை செருப்பாலடித்து விட்டாராம். சேலத்தில் 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் சென்ற தந்தை பெரியாரை நோக்கி செருப்பை வீசியவர்கள் யார்? ‘தினமலர்’ கூட்டத்தின் அன்றைய ஜனசங்கத்தினர் தானே! பெரியாரை நோக்கி வந்த செருப்பை மடக்கிப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ராமன் படத்தினை அதே செருப்பினைக் கொண்டு சாத்துப்படி செய்தனர் என்ற வரலாறு ‘தினமலருக்குத்’ தெரியாவிட்டால் இப்பொழுதாவது தெரிந்துகொள்ளட்டும்.

தேர்தல் நேரம் என்பதால் ராமனை செருப்பாலடித்த பெரியார் ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா உங்கள் ஓட்டு? என்று பிரச்சாரம் செய்ததே ‘தினமலர்’, ‘தினமணி’ கூட்டம் - முடிவு என்னாயிற்று? இராமனை செருப்பாலடிக்கும்முன் 1967 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்குக் கிடைத்த இடங்கள் 138; செருப்பாலடித்த பின் 1971 இல் தி.மு.க.வுக்குக் கிடைத்த சட்டமன்ற இடங்கள் 184 என்ற வரலாற்றை ‘தினமலர்களே‘ தெரிந்துகொள்க!

சம்பூகன் என்ற சூத்திரன் தவமிருந்தான் என்ற காரணத் தால், பார்ப்பன வீட்டுப் பிள்ளை செத்துப் போய்விட்டதாம். இராமனிடம் குழந்தையின் தந்தையான அந்தப் பார்ப்பான் முறையிட்டதால், காட்டில் தவம் செய்துகொண்டிருந்த சூத்திரன் சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்றான் அரச னான ராமன்; உடனே செத்துப்போன பார்ப்பனக் குழந்தை உயிர்ப் பிழைத்து எழுந்தது என்று எழுதி வைத்திருப்பதை நாங்கள் நம்பவேண்டுமா?

பார்ப்பனர்களுக்காக செயல்பட்டவன் என்கிற முறையில் ராமன் வேண்டுமானால் பார்ப்பனர்களுக்குப் பகவானாக இருக்கலாம்; சூத்திர சம்பூகனின் பரம்பரையைச் சேர்ந்த நாங்கள் எதற்காக ராமனை ஏற்கவேண்டும் - நம்பவேண்டும்?

இந்த வரலாற்றை எல்லாம் தெரிந்திருந்தும், அவற்றை எல்லாம் மறைத்துவிட்டு இந்த 2018-லும் புது முகமூடி அணிந்து அதே உணர்வை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்தும் பார்ப்பனர்களைத் தோலுரித்துக்காட்டும் கடமை திராவிடப் பரம்பரையினருக்கு  உண்டு.

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று சொன்னது, இந்துத்துவாவாதிகள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்தானே, மறுக்க முடியுமா?

‘தினமலர்’ கூட்டம் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்து வதும், திராவிடர் இயக்கம் தினமலர்க் கும்பலை அம்பலப் படுத்துவதும் அந்த ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் தொடர்ச்சியே என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்வார்களாக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner