எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இன்று காந்தியார் அவர்களின் நினைவு நாள் (30.1.1948) காந்தியார் அவர்கள்மீது எத்தனை எத்தனையோ விமர் சனங்கள் வைக்கப்படுவதுண்டு; ஆனாலும் அவற்றை எல்லாம் கடந்து நாட்டு  மக்களால் தேசத் தந்தை என்று அழைக்கப்பட்டவர் அவர் என்பதை மறுக்கவும் முடியாது.

காந்தியார் அவர்களின் வரலாற்றை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்; கடவுள், மதம், வருணாசிரமம், ஆன்மிகம் போன்றவற்றில் அவருக்கென்று உள்ள கருத்துகள் இன்னொரு பக்கம் அவர்தம் தியாகம். இந்து - முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு - கடைசிப் பருவத்தில் அவர் வலியுறுத்திய மதச் சார்பின்மை என்று இரு பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது சரியானதாக இருக்கும்.

காந்தியாரைக் கடுமையாக விமர்சனம் செய்த தந்தை பெரியார், அவர் படுகொலை செய்யப்பட்டபோது 'இந்த நாட்டுக்குக் காந்திதேசம்!' என்று பெயர் சூட்ட வேண்டும் என்றார். 'காந்தி மதம்' என்று அழைக்க வேண்டும் என்று கூடச் சொன்னதுண்டு.

காரணம் - காந்தியார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி, அருவருக்கத்தக்க அதன் மதவாதம் மக்களுக்கு என்றென்றைக்கும் எச்சரிக்கை - அபாய சிவப்பு விளக்காக இருக்க வேண்டும் என்பதே அதன் உட்பொருள்.

ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொன்ன அதே காந்தியார் அவர்கள் 'நான் சொன்ன ராமன் வேறு; இராமாயண கால ராமன் வேறு?' என்று இன்னொரு கட்டத்தில் - பிற்காலத்தில் அழுத்தமாகவே சொல்ல ஆரம் பித்தார்.

இந்து முசுலிம் பிரச்சினையில் பெரும்பான்மை மக்கள் பக்கம் நிற்காமல், பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் பக்கம் நின்றார். அரசு பணம் மதக் காரியங்களுக்குப் பயன் படுத்தப்படக் கூடாது என்று கூற ஆரம்பித்தார்.

1947ஆம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி பங்க் காலனியில் ஒரு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் காந்தியார் தெரிவித்த கருத்து - காலக்  கண்ணாடியாகும் - கருத்தூன்றத்தக்க தூண்டா விளக்காகும்.

"ஆர்.எஸ்.எஸ். உண்மையில் பயனுள்ளதாக இருப்பதற்கு தன்னலத் தியாக நோக்கத்தில் தூய்மையும், உண்மையான அறிவும் கலந்திருக்க வேண்டியது அவசியமாகும். இவ் விரண்டும் - இல்லாத தியாகம் சமூகத்தின் நாசமாகவே முடியும். தீண்டாமை உயிருடன் இருக்குமேயானால், இந்து சமயம் செத்துத்தான் ஆக வேண்டும். இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று இந்துக்கள் நினைப்பதாக இருந்தால் தங்களின் அடிமைகளாகத்தான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்று இந்துக்கள் நினைத்தால், இந்துக்கள் இந்து மதத்தையே கொன்று விடுவார்கள்" என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மத்தியிலேயே அறிவு நாயணத்தோடு பேசிய நாயகர் காந்தியார் ஆவார்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ஒரு வினாவை எழுப்பினார். "தீமை செய்பவரை கொன்றுவிட இந்து மதம் அனுமதிக்கிறதா?" என்பதுதான் அந்த வினாவாகும் காந்தியார் அமைதியாகப் பதில் அளித்தார்.

"அனுமதிக்கவில்லை. தீமை செய்யும் ஒருவர் இன்னொரு வரைத் தண்டிக்க முடியாது. தண்டிப்பது அரசாங்கத்தின் வேலையேயன்றி, மக்களின் வேலை அல்ல" என்ற அரிய கருத்தை அருளினார் காந்தியார்.

காந்தியார்  இந்த அரும் கருத்துக் கூறிய நான்கு மாதங்கள் கழித்து மத வெறியர்களின் கூட்டுத் தீட்டத்தின்படி படு கொலை செய்யப்பட்டார்.

ஏதோ முதல் முயற்சியிலேயே காந்தியார் படுகொலை நடந்துவிடவில்லை தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு, ஒரு கட்டத்தில் பார்ப்பனிய இந்துத்துவ சக்திகளின் வெறி வெற்றி பெற்றது.

இன்றுவரை கூட காந்தியார்பற்றி அந்த சக்திகள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டு தானிருக்கின்றன. வாஜ்பேயி பிரதமராக இருந்த கால கட்டத்தில் சங்பரிவார்க் கூட்டம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றியது. 'மே நாதுராம் கோட்சே போல்தே! என்பது அந்த நாடகத்தில் பெயர்.

"நான்தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்' என்பதுதான் அந்த இந்த நாடகம். காந்தியார் மகாத்மா அல்ல; ஓர் அரக்கன் காந்தியார் கொன்ற நாதுராம் கோட்சே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதுதான் அந்த நாடகத்தின் கருப்பொருள்.

காந்தியார் படுகொலை செய்யப்பட்டநிலையில் அக்ரகாரத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டன. நான்தான் காந்தியாரைக் கொன்றேன் என்று நாதுராம் கோட்சே நீதிமன்றத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகு இப்பொழுது ஒரு புதுக் கரடியை அவிழ்த்து விடுகிறார்கள். காந்தியாரைக் கொன்றது நான்காவது குண்டுதான் அந்தக் குண்டு யாருடையது என்று கேட்டு நீதிமன்றம் வரை சென்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட போது தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை முக்கியமானது.

"இக்கூட்டமானது உலக மக்களால் போற்றப்பட்டவரும், இந்திய காங்கிரஸ் நடப்புக்கு மூல காரணமாயிருந்து அதை நடத்தி வந்த முக்கிய தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை முதலிய உயர் குணங்களை சதா சர்வகாலம் மக்களுக்குப் போதித்து வந்த உத்தமரும் ஆன ஒப்பற்ற பெம்மான் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரணம் அடைந்தது குறித்து தனது ஆழ்ந்த துயரத்தையும், துக்கத்தையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இம்மரணத்துக் காரணமாக இருந்த கொலை பாதகனையும், அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும், மக்களையும் வெறுப்புக் காட்டிக் கண்டிக்கிறது. இந்தப் பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவைப் படிப்பினையாகக் கொண்டு,  இந்நாட்டு மக்கள் யாவரும் ஜாதி, மத இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்வோமாக" என்று கையொப்பமிட்டு தந்தை பெரியார் அறிக்கை ஒன்றை வெளி யிட்டார். காந்தியாரைப் படுகொலை செய்த அதே சக்திகள் இன்னும் உயிர்த் துடிப்போடு அதிகார பீடத்தில் அமர்ந்து, காந்தியாரைக் கொன்ற தத்துவமான  ஹிந்து ராஜ்ஜியத்தை உருவாக்க துடித்துக் கிளம்புகிறார்கள். காந்தியாரின் நினைவு நாளில் இதற்கொரு முடிவைக்கான மக்கள் சக்தியைத் திரட்டிட உறுதி ஏற்போம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner