எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிரமாண்ட படங்களை தயாரிக்கும் சஞ்சய்லீலா பன்சாலி பத்மாவதி என்ற வரலாற்றுப் படத்தை எடுத்தார். பத்மாவதி என்பது அலாவுதின் கில்ஜியின் காலத்தில் வாழ்ந்த ஒரு இஸ்லாமிய கவிஞரின் உருதுக்கவிதை, இதை 1973-ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரசே  இந்திப் பதிப்பாக வெளியிட்டது,

மராட்டிய வரலாற்றுப் படமான பாஜிராவ் மஸ்தான் என்ற படத்தை முடித்த பிறகு தயாரிப்பாளரும், பன்சாலியின் நண்பருமான ஜி.என் பர்மார் என்பவர் ராஜஸ்தான் அரசு வெளியிட்ட பத்மாவதி என்ற கவிதை நூலைத் திரைப் படமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, எப்போதும் போல் பெரும் பொருட்செலவில் படத்தை ஆரம்பித்தனர்.

ராஜபுத்திர மேவாட் கோட்டையின் ராஜபுத்திர அரசர் ரத்தன் சிம்ஹாவின் இரண்டாவது மனைவி ராணி பத்மாவதி யின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு  இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்த முகலாய மன்னர் அலாவுதின் கில்ஜி,  அவரைக் கவர்ந்து செல்ல முயன்றதாகவும், ஆனால் போரில் தன் கணவன் இறந்துவிட்டதை அடுத்து பத்மாவதி அந்தக் காலத்தில் நிலவிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒட்டி தீயில் இறங்கி இறந்துவிட்டதாகவும் அந்த கவிதை நூல் தெரிவிக்கிறது.

முழுக்க முழுக்க ராணிபத்மாவதியின் அழகை கவிதை வடிவில் வரிணித்துள்ளார். அதில் அப்போது இருந்த ஆடை அணிகலன்கள், பழக்க வழக்கங்கள், போர்முறை, முகலாய மன்னரின் படைபலன், உணவு முறை, போன்றவற்றையும் சேர்த்துள்ளார். இந்த நூல் வெளியாகும் போது எந்த ஒரு அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இந்த நூல் இன்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் பல நூலகங்களில் உள்ளது.

ரத்தன் சிம்காவிற்கும், அலாவுதின் கில்ஜிக்கும் இடையில் நடந்த போர் குறித்து சில குறிப்புகள் ஆதாரங் களாக உள்ளன. ஆனால் பத்மாவதி பற்றியோ அல்லது அவர் உடன்கட்டை ஏறியது பற்றியோ எந்த ஒரு ஆதார மும் இல்லை. எனவே கதைகள், கவிதைகளில் காணக் கிடைக்கும் அவரைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் தொன்மங்களாகவே நிலைத்து விட்டன. திடீரென்று  ராஜபுத்திர இனம் என்று கூறிக்கொள்ளும் ஒரு வன்முறைக் கும்பல் பத்மாவதிதங்கள் குலப்பெண் என்றும்,  பத்மாவதி திரைப்படத்தின் மூலம்தங்கள் குல அரசி பத்மாவதிக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, இந்தப் படத்தைப் படப்பிடிப்பு நிலையிலிருந்தே எதிர்த்து வருகிறார்கள்.

படப்பிடிப்பின் போது கர்ணி சேனா என்ற அமைப்பினர் இரண்டு முறை பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு அரங்குகளைச் சேதப்படுத்தி தீவைத்தனர் இயக்குநர் பன்சாலியையும் தாக்கியிருந்தனர். வெளியாகியுள்ள இந்தப் படத்தில் எந்த ஒரு சிக்கலும் இல்லை, மாறாக ராஜபுத்திரர் மற்றும் ராணிபத்மாவதி பற்றி மிகவும் பெருமைப்படவே இப்படம் கூறுகிறது. பத்மாவதி, அலாவுதின் கில்ஜி பாத்திரங்கள் ஒரு இடத்தில் கூட ஒன்றாகத் தோன்றவில்லை.

அப்படி இருந்தும் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகா படுகோனே ஆகியோரின் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் தலையை வெட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளையும், வெட்டுபவர்களுக்குப் பரிசு வழங்கப் படும் என்ற அறிவிப்புகளையும் வெளியிடுபவர்கள் சாதி, மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல.அரியானாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சூரஜ் பால் அமு,  பத்மாவதியாக நடித்த தீபிகாவின் தலைக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகையை அறிவித்திருந்தார். குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.

பா.ஜ.க. முதல்வர்களான ம.பி. முதல்வர் சிவராஜ் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கர்ணிசேனாவினரின் வன்முறையைத் தடுக்காமல் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

வியாழன் அன்று மத்தியப் பிரதேசம் இந்தூரில் தமிழகத்தைச் சேர்ந்த சரக்குவாகனம் ஒன்றை கர்ணிசேனா அமைப்பினர் தீவைத்துக் கொளுத்தினர். அதில் சுமார் 75 லட்சம் மதிப்பிலான வேதிப் பொருட்கள் எரிந்து சாம்ப லாயின. இதைக் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் ஈடுகட்டிக் கொள்வார்கள்.

டில்லிக்கு அருகில் உள்ள குருகிராமில் நடந்தது மிகவும் கொடுமையானது அய்ந்தாம் வகுப்பு குழந்தை கள் பள்ளிக்குச் சென்றுகொண்டு இருக்கும் போது அந்தப் பேருந்தை குறிவைத்து கற்களை வீசி தாக்கி, டயர்களில் தீவைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அந்த பேருந்து ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை வேகமாக இயக்கியதால் கண்ணாடிகள் உடைந்த தோடு குழந்தைகளும், ஆசிரியர்களும் எந்த ஒரு காயமுமில்லா மல் தப்பித்தார்கள்.

யார் இந்த கர்ணி சேனா? இதுவும் ஒரு இந்து ராஷ்டிர அமைப்பின் கிளை அமைப்புதான், இவர்களின் வேலை இந்து கலாச்சாரத்தை இழிவுபடுத்துபவர்களைப் பிடித்து சித்திரவதை செய்வதுதான், சமீபத்தில் இவர்களைப் சமூகவலை தளத்தில் எழுதிய அஜித் மோரே என்ற அகமதாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சித்திரவதை செய்து கையை உடைத்து அவரை மன்னிப்பு கேட்க வைத்து அதைப் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கிறது, இந்த தேர் தலில் இரண்டு மாநிலங்களிலுமே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவாய்ப்புகள் முற்றிலும் இல்லை என்று கருத்துக் கணிப்புகள் கூறப்பட்டுவரும் நிலையில், மதரீதியாக மக்களைப் பிரித்து வாக்குகளை அறுவடை செய்ய மீண்டும் சில்லரை அமைப்புகளைத்தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயலுகின்றனர்.  முதலில் ராமர் கோவில், பிறகு பசுமாடு, அதன் பிறகு லவ்ஜிகாத் வரிசையில் ஆட்சியைப் பிடிக்க தற்போது அமித்ஷாவும், மோடியும் பத்மாவதி எதிர்ப்பு வேடம் பூண்டு வருகிறார்கள். இந்த விஷமங்களை நாட்டு மக்கள் அடையாளம் காண வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner