எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மறக்க முடியாத ஒரு நாள் - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1956). இந்தச் சமூகப் புரட்சியாளரின் நினைவு நாளைத் தேர்வு செய்து இந்தியாவில் உள்ள பார்ப்பனீய சக்திகள் (ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, வி.எச்.பி., பஜ்ரங் தள், பி.ஜே.பி. என்று பல்வேறு நாமகரணங்களில் உலவுபவை) 450 ஆண்டு வரலாறு படைத்த முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் இடித்துத் தரைமட்டமாக்கின.

எந்த இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு, புத்த மார்க் கத்தை பல லட்ச மக்களுடன் அண்ணல் அம்பேத்கர் தழுவினாரோ, அந்தத் தலைவரின் நினைவு நாளைத் தேர்வு செய்தது எதேச்சையானது அல்ல.

அதன்மீது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்குத்தான் அந்த நாளைத் தேர்வு செய்தனர். ‘‘நான் இராமனை வணங்கமாட்டேன்; கிருஷ்ணனை வணங்கமாட்டேன்’’ என்று 21 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டார் அல்லவா - அதற்குப் பதிலடி கொடுக்கத்தான் பாபர் மசூதியை ராமஜென்மப் பூமி என்று பெயரிட்டு பார்ப்பனீயத்திற்கே உரித்தான ஹிந்து மதத்திற்கே உரித்தான அந்தத் தண்டத்தை (வன்முறையை)க் கையில் எடுத்துக்கொண்டனர். இராமனே ஒரு வன்முறையாளன்தானே!

தன்னந்தனியனாக, சாதுவாக ஒரு காட்டுக்குள் தவம் செய்து கொண்டிருந்தவன் சூத்திரன் என்பதற்காக, அந்தச் சம்பூகனை வாளால் வெட்டிக் கொன்ற கீழ்மகன்தானே இராமன்?

இந்து மதக் கடவுள்களின் கைகளில் எல்லாம் கொலைக் கருவிகள் இருப்பது எதைக் காட்டுகிறது? இந்து மதத்தின் காத்தல் கடவுளான மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் எல் லாம் சண்டை போட்டு அசுரர்களை (அதாவது திராவிடர் களை) அழித்த வேலையைத்தானே செய்தன. கொலை செய்யும் கடவுளுக்குப் பெயர் காத்தல் கடவுளாம் - முரண் பாட்டின் மொத்த வடிவத்திற்குப் பெயர்தான் ஹிந்து மதம்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் படுகொலை காந்தியார் படுகொலை என்றால், அதனையடுத்து உலகமே வெட்கித் தலைகுனிந்து காரி உமிழும் காரியம் என்பது பாபர் மசூதி இடிப்பே!

இடித்தவர்கள் பாமர மக்கள் மட்டுமல்ல - அவர்கள் தூண்டப்பட்டார்கள்; வெறியூட்டப்பட்ட அடியாட்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள்.

மற்றபடி அந்த இழிவான காரியத்தின் பின்புலமாக, பின்பலமாக இருந்தவர்கள் எல்லாம் சங் பரிவார்களின் பிரபலமான தலைவர்கள் - பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர்கள்தாம்.

அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமாபாரதி, வினய்கட்டியார், கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பரா என்று நீண்டதோர் பட்டியல் உண்டே!

இந்தக் குற்றவாளிகள்மீது எந்தப் பிரிவுகளின்கீழ் வழக்கு என்பதுதான் முக்கியம். இந்தியக் குற்றப்பிரிவு (அய்பிசி) 147, 153-ஏ, 153-பி மற்றும் 505. கலகம் விளைவித்தல், மக்களிடம் மதம், இனம், மொழி குரோத உணர்வைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமூகத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல், மக்களிடையே பீதியை உண் டாக்குதல் என்ற பிரிவுகளின்கீழ் குற்றம் சுமத்தப்பட்ட வர்கள்தான் அத்வானி உள்பட 49 பேர்களும்.

லிபரான் ஆணையம் வாஜ்பேயியையும் குற்றவாளிப் பட்டியலில் இணைத்ததும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு என்னும் கொடூரம் திட்டமிட்டபடி நடந்ததா என்றால், அதற்கு முதல் நாள் (5.12.1992) உ.பி. லக்னோவில் அந்தப் ‘பெரிய மனுஷன்’ என்ன பேசினார் தெரியுமா?

‘‘நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்களின்மீது அமர்ந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணை சமன்படுத்தி அமர் வதற்கு ஏற்றபடி சமன் செய்யவேண்டும்‘’ என்று பேசினாரே! அவரின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சு லிபரான் ஆணையத்தின்முன் அளிக்கப்பட்டதே!

இதில் என்ன வெட்கக்கேடு என்றால், இத்தகு மாபெரும் குற்றங்களைச் செய்தவர்கள் பிற்காலத்தில் இந்தியாவின் பிரதமராகவும், துணைப் பிரதமராகவும், மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சராகவும் (கல்வி) இருந்தனர் என்பது தான்.

நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை புயலாக வெடித்த போது அத்வானி போன்றவர்கள் பதவி விலக முன்வந்த போது அதனை ஏற்க மறுத்தவரும் அதே பெரிய மனுஷன் அடல் பிகாரி வாஜ்பேயிதான்.

என் வீட்டுப் பிள்ளைகளிலேயே அதோ கூரைமீது ஏறிக் கொள்ளி வைக்கிறானே - அவன்தான் யோக்கியன் என்று அப்பன் சொன்னானாம். அத்தகைய சிகாமணிதான் இந்த வாஜ்பேயி.

25 ஆண்டுகள் ஓடிவிட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை என்பது இந்தியாவின் நிர்வாகமும், நீதித் துறையும் எந்தளவு தரந்தாழ்ந்து கிடக்கிறது என்பதற்கு நிர்வாணமான எடுத்துக்காட்டாகும்.

குதிரை கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியும் பறித்த கதையாக, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோவில் கட்டப் போகிறார்களாம்.

இது நாடா - காடா? இந்திய சு-தந்திரத்தின் இலட்சணம் இதுதான். நாட்டு மக்கள் ஒருமுறை தலையைக் குனியுங்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner