எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பொது மேடைகளில் நகைச்சுவையாக பேசுவது முதலில் திராவிட இயக்கமேடைகளில் தான் ஆரம்பித்தது. ஆனால் அந்த நகைச்சுவையில் சிரித்துக்கொண்டே சிந்திக்கத் தூண்டும் கருத்துகள் அடங்கியிருக்கும். ஆனால் மோடி தற்போது பேசியுள்ள நகைச்சுவை மிகவும் வித்தியாசமானது. குஜராத் தேர்தலை ஒட்டி பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற இரு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய மோடி, நாட்டு மக்களை ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுப்படுத்த காங்கிரசு கட்சி முயன்று வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

‘‘காங்கிரசு கட்சியின் நோக்கம் என்ன என்பது குஜராத் மக்களுக்குத் தெரியாதா? சகோதரர்களுக்கு மத்தியில் சுவரை உருவாக்கும் வேலையில் அவ்வப்போது தனது நிறத்தை மாற்றி வருகிறது. ஒரு ஜாதியினரை எதிர்த்து மற்றொரு ஜாதியினரும், ஒரு மதத்தை எதிர்த்து மற்ற மதத்தினரும் தீவிரமாக சண்டையிடும் பணியில் உங்களை காங்கிரசு ஏவுகிறது. நீங்கள் உங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்கும் போது காங்கிரசு  ஆதாயம் தேடிவிடும்‘’ என்பதைவிட வேறு ஒரு நகைச்  சுவைதான் இருக்க முடியுமா?

மோடியின் முந்தைய செயல்பாடுகளைப் பார்த்த பின்பும் இப்படி அவர் கூறுவதை மக்கள் ஏற்பார்களா? இது மோடியின் அதிரடி நகைச்சுவைகளில் முக்கியமான தாகும். உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் என்ன பேசினார்? ‘‘இங்கே இசுலாமியர்களுக்கு ஊருக்கு ஒரு சுடுகாடு இருக்கிறது. ஆனால், இந்துக்கள் பிணத்தை ஊர் ஊராக தூக்கிக்கொண்டு செல்லவேண்டும். எங்கள் ஆட்சி வந்தால் இந்துக்களுக்கு அவர்கள் ஊரிலேயே தனி சுடுகாடு கட்டுவோம்‘’ என்று கூறினாரே, ‘‘கோத்ரா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்றால் கடுமையான மதக்கலவரம் ஏற்படும்; இதனால் இசுலாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார் கள்’’ என்று உள்துறை அறிக்கை விடுத்தும், அப்பிணங் களை அகமதாபாத்தில் ஊர்வலமாகக் கொண்டு செல்ல அனுமதியளித்தது யார்? குஜராத் முதலமைச்சரான தாமோதரதாஸ் நரேந்திர மோடிதானே! இதனால்தானே இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பிறகு மிகமோசமான மதக்கலவரம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப்படவில்லையா?

கலவரம் நடந்த போது அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவும், முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியும் கலவரத்தைத் தடுத்து நிறுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல், குஜராத் காவல்துறைக்கு மேலிடத்தில் இருந்து (தங்களிடமிருந்து) உத்தரவு வந்தால் மட்டுமே கலவரத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும், அதுவரை காவல்நிலையத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிட்டதும் மோடி தானே!

48 மணிநேரம் தருகிறோம்; அதற்குள் வன்முறையைக் கையில் எடுங்கள் என்று உத்தரவு போட்டது யார்?

இதனால், நிலைமை மோசமானதால் ராணுவம் வர நேர்ந்தது.  என்.டி.டி.வி. ஊடகவியலாளர் மோடியை பேட்டி எடுக்கச்சென்ற போது அவரது வீட்டின் முன் பாகவே பஜ்ரங் தள் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் திரிசூலம் மற்றும் கத்தி போன்ற ஆயு தங்களால் பலரை கொலை செய்ததையும், இவர்களின் காரை மறித்து அனைவரது பெயரையும் கேட்டு இசுலாமியர்கள் உங்களிடையே உள்ளனரா என்று கேட்டு மிரட்டியதையும், ஓட்டுநர் ஒருவர் இசுலாமியராக இருந்த போது அவரது கையில் அனுமார் துதிப்பாடல் இருக்கும் கையடக்க நூலை  கொடுத்து அவர் அதைக் காட்டி ‘‘நான் இந்து தான்’’ என்று கூறிய பிறகே உயிரோடு விட்டனரே - இது அனைத்தும் மோடியின் வீட்டிற்கு அருகேதானே நிகழ்ந்தன!

உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் சரி, அதே வேளையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் பாஜக வேட் பாளர்கள் இசுலாமிய, கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தனர். அதே நேரத்தில் வாக்குப்பதிவின் போது எப்போதுமில்லாமல் இசுலாமிய பெண்கள் தங்களின் முகத்தை மூடியுள்ள புர்கா என்னும் முக்காடை அகற்றவேண்டும்  என்று அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்களா, இல்லையா?

அதைவிட சகரன்பூரில் உள்ளாட்சித் தேர்தல் பிரச் சாரத்தில் அம்மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் பேசிக்கொண்டு இருக்கும் போது மேடையின் அருகில் இருந்த பாஜகவைச் சேர்ந்த இசுலாமியப்பெண்ணின் புர்கா-வை பொது இடத்தில் வைத்தே மகளிர் காவலர்கள் அகற்றினர். அப்போது மேடையில் சாமியார் ஆதித்யநாத் பேசிக்கொண்டு இருந்தார்.

இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, இந்தக் காவி இந்துத்துவ அரசியல் - ஆட்சி நீடித்தால், நிலைமை விபரீதம் ஆகும் - உள்நாட்டுப் புரட்சி வெடித்தே தீரும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

மதவாதத்தை காங்கிரசு வளர்ப்பதாக பிரதமர் மோடி சொல்லுவது கொக்கு ஒட்டகத்தைப் பழிக்கும் கதைதான்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner