எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கீழடி அகழாய்வு ஆராய்ச்சி,  செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 'மூத்தகுடி தமிழ்குடி' என்பதற்கான வரலாற்று ஆவணம் கீழடியில் கிடைத்திருப்பது உலகத் தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை,  மிகவும் தொன்மையான கீழடி ஆய்வு, இன்றைக்குப் பாதியோடு நிறுத்தப்பட்டிருக்கிறது. இங்கே மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம் என்கிற ரீதியில் மழுப்பலான அறிக்கை கொடுத்து, மண்ணைப் போட்டு மூடுவிழா நடத்தியிருக்கிறார், இதன் கண்காணிப்பாளரான சிறீராமன்.

தமிழர்களின் நாகரிகத்தை, தொன்மையை இருட்டடிப்பு செய்வதாக  தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இன்று ஏற்கெனவே தோண்டப்பட்ட குழிகளையும் மூடும் பணி நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில், கடந்த 2015-2016-ஆம் ஆண்டு வரை தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சியில், 2500 ஆண்டுகள் பழைமையான தமிழர்களின் நாகரிகம், 5000-த்துக்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் என முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியைக் கீழடி அகழாய்வுக் குழுவின் தலைவராக இருந்த அமர்நாத் ராம கிருஷ்ணன் மிகுந்த ஆர்வத்துடன் முழுமையாக   நடத்தி வந்தார் .

மூன்றாம் கட்ட ஆய்வுப் பணி முடிவடைந் துள்ளது. நீதிமன்றம் நான்காம் கட்ட ஆய்வுக்கு, தமிழக  மற்றும் மத்திய அரசின் தொல்லியல் துறை தொடர்ந்து ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆய்வுப் பணிகள் நடந்த குழிகள் இன்னும் மூடப்படாமல் அப்படியே கிடக்கின்றன. அதிகாரிகள் யாரும் அங்கு இல்லாததாலும், கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களைப் பார்க்க முடியாமலும்  சுற்றுலாப் பயணிகள் கீழடிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். நான்காம் கட்ட ஆய்வு நடக்குமா... நடக்காதா என்கிற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.110 ஏக்கரிலும் ஆய்வுசெய்யப்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்கும் அதிகாரி வர வேண்டும். அப்போதுதான் நாங்கள் நிலம் கொடுப்போம் என்று விவசாயிகள் ஒரு பக்கம் கோரிக்கை வைத்துவருகிறார்கள். இந்நிலையில் தான் குழிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதோடு நின்றுவிடுமா கீழடி அகழாய்வுப் பணி? இந்தக் கேள்வி, ஒவ்வொரு தமிழனின் கேள்வியாக இன்று எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.

ஏனிந்த சதி? அதுதான் தந்தை பெரியார் நீண்ட காலத்திற்கு முன்பே கூறிய அந்த ஆரியர்  - திராவிடர் போராட்டத்தின் விளைவு.

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று அறுதியிட்டுக் கண்டுபிடித்த பிறகு, அதனைத் தலை கீழாக மாற்றி ஆரிய நாகரிகம் என்று காட்ட பிஜேபி அரசு சதி வலை பின்னவில்லையா? மோசடியான செயலில் இறங்கவில்லையா?

வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி என்ன செய்தார்? திராவிடர்களின் கலாச்சார சின்ன மான காளையை ஆரியர்களின் கலாச்சார அடையாளமான குதிரையாக மாற்றி (கிராபிக்ஸ் செய்து) வரலாற்றின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவிட முயற்சிக்கவில்லையா? ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வு முடிவுகள் இன்னும் இரும்புப் பெட்டியில் தானே தூங்க வைக்கப்பட்டுள்ளன!

கீழடி ஆய்வுகள் வந்தால் ஆரியர்கள் தொல் குடிகள் என்ற பித்தலாட்டம் மண் மூடிப் போகும் ஆதலால்தான் கீழடியை மூடி மறைக்க, திறந்த பள்ளத்தினை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்குப் பின்னும் ஆரியராவது - திராவிடராவது என்று எவரும் பேசினால் அது கடைந்தெடுத்த பித்தலாட்டமே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner