எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பயிர்களை நாசம் செய்யும் அநாதைப் பசுக்களை பராமரிக்கத் திட்டம் தீட்டாத உ.பி. முதல்வர் சாமியார் ஆதித்யநாத்தையும், அவரை முதல்வராக்கிய மோடியையும் விமர்சனம் செய்த தலித் இளைஞருக்கு தேசிய இறையாண்மைக்கு எதிராகப் பேசுதல் (தேசத் துரோக பிரிவை போன்றது), கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள இட்டாவா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்துவருபவர் குஷிராஜ். இவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தலித்துக்கள்; இக்கிராமத்தவர்கள் அருகில் உள்ள மாநிலங்களுக்குச்சென்று கூலி வேலை பார்த்து பிழைப்பை நடத்துகின்றனர். இந்த நிலையில் குஷிராஜ் தன்னுடைய சொந்த உழைப்பில் வயல் ஒன்றை நீண்ட கால குத்தகைக்கு வாங்கிப் பயிர் செய்தார்.

இவரது இந்த செயல் அருகில் உள்ள உயர் ஜாதியினருக்குப் பிடிக்கவில்லை. அவரது நிலத்தில் அடிக்கடி அநாதைகளாகத் திரியும் மாடுகளை விரட்டிவிட்டு அவரது வயலில் விளைந்திருக்கும் பயிரை நாசம் செய்துவந்தனர். இந்த நிலையில் உயர்ஜாதியினரின் செயலைக் கண்டிக்க முடியாமல் அவர்  தவித்து வந்தார். வயலில் நாசம் செய்த மாடுகள் யாருடைய சொந்த மாடாக இருந்திருந்தால் அவரிடம் நியாயம் கேட்கலாம், ஆனால் அந்த மாடுகள் அனைத்தும் அநாதைகளாக சுற்றித் திரிபவை.

மாடுகளின் செயலால் அவரது  பயிர்கள் அனைத்தும்  பாழாகிப் போயின. இந்த கோபத்தில் அவர் கோசாலைகள் அமைக்காத சாமியார் ஆதித்ய நாத்தையும், மோடியையும் தனது நண்பர்களிடம் விமர்சனம் செய்துள்ளார். அதை யாரோ ஒருவர் மொபைல் காமிராவில் பதிவுசெய்து ஊராரிடம் கொடுத்துவிட்டார். இதனை அடுத்து உயர்ஜாதியினர் பஞ்சாயத்தைக் கூட்டி குஷிராஜூவிற்குத் தண்டனை கொடுக்க முன்வந்தனர்; இதனை அடுத்து நான் இனிமேல் இப்படி பேசமாட்டேன் என்று கூறி எழுத்து மூலம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இருப்பினும் ஊர் பஞ்சாயத்தில் அவர் சில மாதங்களுக்கு ஊரில் எந்த ஒரு வேலையும் பார்க்கக் கூடாது என்று தண்டனை விதித்தனர்.

இந்த நிலையில் உள்ளூர் பாஜக பிரமுகர் ராஜீவ் தோமர் இவர் மீது மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்து இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட இட்டாவா காவல் துறையினர் குஷிராஜ் மீது தேசத்துரோகம் (தலைவர் களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டுவது), கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுவது, உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து இட் டாவா சிறையில் அடைத்தனர். இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்பது போன்ற வழக்குகளை எதிர்கொள்ள இவரிடம் வசதியில்லாத காரணத்தால் இவர் நீண்ட காலம் சிறையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவருடைய குடும்பத்தினர் கூறும் போது, "பயிர்கள் இந்தக் கால்நடைகளால் பாழாவது வழக்கமாகி விட்டது.  குஷிராஜுவின் நிலத்தில் இது போல பலமுறை நடந்துள்ளது. பிறரிடம் கடன் வாங்கி சொந்தக்காலில் நின்று பயிர்செய்து வாழ முயலும் அவரின் வயல் கால்நடைகளால் நாசமாகிவிட்டது, இந்த கோபத்தில் முறையான கோசாலைகளை அரசு அமைத்திருந்தால் இப்படி பயிர்கள் பாழாகி இருக்காது என விமர்சனம் எழுப்பி இருக்கிறார்.

அவருக்கு இந்த தண்டனை என்பது மிகவும் அநியாயமானது - அயோக்கியத்தனமானதும்கூட! ஊராரிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்புக் கேட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கவலை தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் சகரன்பூரில் மகாரனா பிரதாப் பிறந்த நாள் விழாவை ஒட்டி உயர்ஜாதியினருக்கும், தலித்து களுக்கும் நடந்த மோதலுக்குப் பிறகு  தலித்துகளின் வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதையும், தலித் நிறுவனங்களுக்கு விற்பனைக்குப் பொருட்கள் கொடுப்பதையும் நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தலித்துகள் சொந்தமாக நிலத்தில் பயிர் செய்வதைக்கூட விரும்பாத உயர்ஜாதியினர் கைது என்ற பெயரில் தலித்துகளை மிரட்டி வருகின்றனர்.

பாசிச ஆட்சிதான் நடக்கிறது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. நேரிடையான பாதிப்புக்கு ஆளானவர் தன் துயரத்தைக்கூட வெளிப்படுத்தக் கூடாதா? அதுவும் தாழ்த்தப்பட்ட தோழர் என்றால் அவருக்கு எந்த உரிமையும் கிடையாதா? இது நாடா, கடும்புலி வாழும் காடா? நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் - செயல்படவும் முன் வர வேண்டும். ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கண்டிக்கவும் வேண்டும்! செய்வார்களா? எங்கே பார்க்கலாம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner