எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடக தலைநகர் பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக கருநாடக சமூக அரசியல் அரங்கில் ஆளுமை செலுத்திய எம்.எம்.கல்புர்கியையும், கவுரி லங்கேஷையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பறிகொடுத்துவிட்டு, வெறித்துக் கிடக்கிறது கன்னட இலக்கிய உலகம்.

20.08.2013 அன்று புனேவில் நரேந்திர தபோல்கர் (68), 16.02.2015 அன்று கோலாப்பூரில் கோவிந்த் பன்சாரே (82), 30.08.2015 அன்று ஹூப்ளியில் எம்.எம்.கல்புர்கி (77), 05.09.2017 அன்று பெங்களூருவில் கவுரி லங்கேஷ் (55) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை வழக்கம்போல அடையாளம் அறியாத  நபர்களை எங்கோ வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறது! ஆனால், அந்த அடையாளம் தெரியாத நபர்கள், மிகச் சரியாக அடையாளம் அறிந்து நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரைச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.

இந்த நால்வரும் இந்து மத சனாதனத்தையும் ஜாதி அமைப்பையும் இந்துத்துவ அரசியலையும்,   சாமியார்களையும் மூடச் சடங்குகளையும் விமர்சித்து எழுதியவர்கள். ஊர் ஊராகச் சென்று மேடைகளில் பேசியவர்கள். மாற்றத்துக்காகக் களத்தில் நின்றவர்கள். சமூகத்துக்காகத் தங்கள் வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் பறிகொடுத்தவர்கள்.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் நாட்குறிப்பில் இந்தியாவின் மேற்குப் பகுதி மிகவும் ஆபத்து நிறைந்தது. மகாராஷ்டிரத்தில் தொடங்கி குஜராத் வரை நீள்வது இந்த ஆபத்தான மேற்குப் பகுதி.  புலேவும், புரட்சியாளர் அம்பேத்கரும் பிறந்த மகாராஷ்டிர மண்ணில் நெடுங்காலமாகவே சங் பரிவாரங்கள் ஆழமாகக் காலூன்றியிருக்கின்றன. சிவாஜியை இந்துத்துவ அரசியலின் பேராண்மை மிக்க முகமாக மாற்றி சிவசேனாவும், பஜ்ரங் தளமும் மதவெறியை மக்களிடையே ஏற்றுகின்றன. காந்தியைக் கொன்ற கோட்சேவுக்குச் சிலை வைக்க வேண்டும். கோயில் கட்ட வேண்டும் என்ற முழக்கமெல்லாம் இங்கே சர்வசாதாரணம்.

இத்தகைய சூழலில் நரேந்திர தபோல்கர் இந்து மதச் சடங்குகளுக்கு எதிராகவும், சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார்.  சாமியார்களுக்கு எதிராகவும், மதத்தின் பெயரால் சமூகத்தைக் கூறுபோடும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகவும் போராடினார். சாதனா என்ற பத்திரிகையைத் தொடங்கி, முற்போக்குக் கருத்துக்களை எழுதினார். இவரது கடும் உழைப்பு, மகாராஷ்டிரத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்துக்கு விதையாக அமைந்தது. அதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் அவரைக் கொல்லத் துடித்தார்கள். நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப் பட்டதும் மதவாதிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

இதே போல இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே கோலாப்பூரில் முற்போக்கு அரசியலை முன்னெடுத்தார். சிவசேனா, பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் அரசியலை எதிர்த்து எழுத்திலும் களத்திலும் செயல்பட்டார். கோட்சேவுக்கு சிவசேனா சிலை வைக்க முயன்றதைத் தடுத்து நிறுத்தினார். சிவாஜி யார்? என்ற நூலில், சிவாஜி எப்படி இந்துத்துவ அரசியலுக்குத் தோதான ஆளாக மாற்றப்பட்டிருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் எழுதினார். சிவாஜியை வைத்து அரசியல் செய்யும் ஆர்எஸ்எஸ், சிவசேனாவினாவின் வேடத்தைத் தோலுரித்துக் காட்டினார்.

மராத்திய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்த கோவிந்த் பன்சாரேவையும்  கொன்றார்கள். லோஹியாவின் சோஷலிசக் கருத்து களும், குவெம்புவின் உலகம் தழுவிய மானுடப் பார்வை யும் நவ இலக்கியமாக கர்நாடகத்தில் உருவெடுத்தது. லோஹியாவின் பட்டறையில் உருவான முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ், தற்போதைய முதல்வர் சித்தராமையா, எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, கொல்லப்பட்ட கவுரி லங்கேஷின் தந்தை பி.லங்கேஷ் ஆகியோரும், பசவண்ணரின் வசனங்களின் மூலம் கிளம்பிய எம்.எம்.கல்புர்கி போன்றோரும் இந்துத்துவத்தை எதிர்க்கத் தொடங்கினர். இதனால் கொலை மிரட்டல்களுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளானார்கள்.

இந்த வெறுப்பரசியல் சமூகத்திலும் சமூக ஊடகங்களிலும் விஷம்போல் பரவியது. தங்களுக்குப் பிடிக்காதவர்களை எவ்வித விளக்கமும் கோராமல் தாக்கவும் அழிக்கவும் இந்த வெறுப்பரசியல் துணிவைத் தந்தது. இந்த வெறுப்புதான் தீய நபர்களின் கையில் துப்பாக்கியைக் கொடுத்தது. அந்தத் துப்பாக்கி மகாராஷ்டிரம், கோவா வழியாக கர்நாடகத்துக்குள் நுழைந்தது. அதே துப்பாக்கி நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி யைக் கொன்றொழித்தது. முதலில் கொந்தளித்த பொதுச் சமூகம், வழக்கம் போல இயல்புக்குத் திரும்பியதும் இப்போது அந்தத் துப்பாக்கி கவுரி லங்கேஷைக் கொன்றொழித்திருக்கிறது.

இப்பொழுது ஆந்திராவைச் சேர்ந்த முற்போக்காளர் காஞ்சா இளையாவுக்கு அச்சுறுத்தல் கிளம்பியிருக்கிறது. காவிகள் ஆட்சியில் பகுத்தறிவாளர்களுக்கு வாழ்வுரிமை கிடையாதா? தனிப்பட்டவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டுமா? காவி ஆட்சியில் நாடு காடாகி கொண்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner