எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘நீட்’ என்னும் கொடுவாள் சமூகநீதி சம்பூகனை வெட்டிச் சாய்த்துவிட்டு அட்டகாசமாகச் சிரித்துக் கோரத் தாண்டவம் ஆடுகிறது.

‘சமூகநீதி சமூகநீதி’ என்று ஆட்டம் போட்டீர்களே - பஞ்சைப் பராரிகள் பட்டம் பெற்றீர்களே, டாக்டர்கள் ஆனீர்களே, நீதிபதிகள் ஆனீர்களே, நூற்றுக்கு நூறு சுளையாக விழுங்கி ஏப்பம் விட்டுத் தொந்தியில் சந்தனத்தைத் தடவிக் கொண்டு ஓகோ என்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஆரியர்களாகிய எங்களிடமிருந்து வகுப்புரிமை, இட ஒதுக்கீடு என்று கூறி கல்வியையும், உத்தியோகத்தையும் பறித்தீர்களே - எங்களுக்கும் ஒரு காலம் வராதா என்று காத்திருந்தோம் - அந்தக் காலம் இதோ எங்கள் பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா ஆட்சி அதிகாரப்பீடத்திலே வந்துவிட்டதே - இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் நழுவவிட்டுவிடுவோமா? அந்த முறையில் நாங்கள் கொண்டு வந்து திணித்ததுதான் - ‘நீட்’ என்னும் அன்று ராமன் கையில் இருந்த வரு ணாசிரமம் என்னும் கைவாள் - சம்பூகனின் கழுத்தைக் கொய்த ஆரிய வாள்!'

‘என்னென்னமோ செய்து பார்த்தீர்களே - ஆர்ப் பாட்டம், போர்ப்பாட்டுப் பாடினீர்களே, மனித சங்கிலியை அரங்கேற்றினீர்களே, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற் றோர்கள் என்று கூறி முத்தரப்பினரையும் கையிணைத்துக் கருத்தரங்குகளை நடத்துனீர்களே - மாநாடுகளைப் போட்டு தீப்பொறி பறக்கும் தீர்மானங்களை நிறைவேற்றினீர்களே, சமூகநீதிக் கட்சிகள், அமைப்புகள் என்று கூறி, தனி அமைப்பு ஒன்றையே (ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு) உங்கள் தலைவர் வீரமணி ஒருங்கிணைப்பாக இருந்து அணி திரட்டினீர்களே - உங்களால் என்ன செய்ய முடிந்தது? தமிழ்நாடு மட்டும் தனித்தீவாக இருக்கப் போகிறதா?’

‘உங்கள் தமிழ்நாட்டில்கூட எங்களுக்கு எட்டப்பர்கள் கிடைத்துவிட்டார்களே - உங்கள் கைக்கொண்டே உங்கள் கண்களைக் குத்தும் கலை எங்களுக்குக் கைவந்த ஒன்றாயிற்றே! பரத கண்டம் முழுவதும் சமூகநீதி என்றால் என்னவென்று தெரியாத அப்பாவித்தனத்தை எப்படி இலாவகமாகப் பயன்படுத்தி - திராவிடச் சிந்தனை வேர் பிடித்த தமிழ்நாட்டிலேயே நீட்டைக் கொண்டு வந்து திணித்து இதுவரை நீங்கள் அனுபவித்து வந்ததை ஒரு நொடியில் கபளீகரம் செய்துவிட்டோம் பார்த்தீர்களா?’

‘உங்கள் மாநில சட்டமன்றம் ஒருமனதாக சட்டங்கள் இயற்றி என்ன பயன்? அவசர சட்டம் கொண்டு வந்து என்ன கிழித்தீர்கள்? நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டோம் பார்த்தீர்களா? அந்த ஆரியக் கலைக்கு ஈடு இணை இந்த வையகத்தில் உண்டா?’

‘அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் கொண்ட ஆளும் கட்சியையே அடிபணிய வைத்து விட்டோமே! உங்களால் என்ன செய்ய முடிந்தது?

இந்த ‘நீட்’ தேர்வை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது - வந்தது வந்ததுதான்’ என்கிற முறையில் கோரத் தாண்டவம் ஆடுகிறது ஆரியப் பார்ப்பனியக் கூட்டம்.

தொலைக்காட்சிகளில் பி.ஜே.பி. சார்பில் தோன்றும் பேர்வழிகள் பேசும் தொனியும், அங்க அசைவும் (Body Language) ஆணவத்தின் உச்சிக் கிளையில் தொங்கு வதைப் பட்டாங்கமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஆடட்டம்! ஆடட்டும்! இவ்வளவுக்கும் எதிர்வினை ஏற்படத்தான் செய்யும். ஒன்றுக்கும் பலவாக சுமக்கும் நிலையை தமிழ்நாடு ஏற்படுத்தத்தான் போகிறது.

1928 ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாட்டில் நடைமுறை யில் இருந்துவந்த இட ஒதுக்கீட்டை மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பமே போடாத செண்பகம் - துரையரசன் என்ற பார்ப்பன மாணவி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு, 22 ஆண்டுகாலம் சென்னை மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை செல்லாது என்று ஒரு வரியில் எழுதித் தள்ளவில்லையா? அப்பொழுது அக்ரகாரம் ஆடாத போடாத குதியாட்டமா?

அந்த வெற்றி நிரந்தரமாகவில்லையே! தமிழ்நாடே தந்தை பெரியார் தலைமையில் ஒன்று திரண்டு போராடி வெற்றி பெறவில்லையா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் என்ற சாதனையைத் தமிழ்நாடு நிகழ்த்திக் காட்டவில்லையா?

இப்பொழுதும் அதே நிலைதான்! நீதிமன்றத்தில் வெல்ல முடியாததை வீதிமன்றத்தில் - மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி, கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் பதாகையைத் தூக்கிப் பிடித்து, கொடுக்க வேண்டிய விலையைக் கொடுத்து சமூகநீதி வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயத்தை எழுதி முடிப்போம்!

அடுத்த கட்டப் போராட்டமாக வரும் 13 ஆம் தேதி ஜனநாயக நெறிமுறையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் ஆர்த் தெழுந்து அலைகடலாய்ப் பொங்கி எழட்டும்! எழட்டும்!!

கட்சியில்லை, மதமில்லை - ஒரே பார்வை - ஒரே முழக்கம் சமூகநீதி! சமூகநீதி!! இது ஜனநாயக உரிமைப் போராட்டம் - பெரும்பான்மை மக்களுக்கானது. எனவே, இதில் போராடவும், வெற்றி பெறவும் தார்மீகப் பலம் இருக்கிறது! கூடுவீர் - கூடுவீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner