எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேரளாவைச்சேர்ந்த முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரியும், கேரள பாஜகவின் முக்கிய தலைவருமான கே.ஜே.அல்போன்ஸ்  மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். பதவியில் அமர்ந்த முதல் நாள் புவனேசுவரில் சுற்றுலா செயல்பாடுகள் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா மிகப்பழமையான நாகரீகம் வளர்ந்த நாடு. உலகில் உள்ள அனைவரும் இங்கு வந்து நம் நாட்டை பார்த்துவிட்டுச் செல்கின்றனர். நாம் நமது நாடு மற்றும் வரலாற்றை எண்ணி பெருமைப்பட வேண்டும், சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் அழகான நாடு என்பதைப் புரிய வைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாட்டிறைச்சி தடையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் அல்போன்ஸ், “வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவிற்கு மாட்டிறைச்சி சாப்பிடும் நோக்கத்தோடு வரவேண்டாம்; சுற்றுலா வரும் முன்னர் அவர்கள் தங்கள் நாட்டிலேயே மாட்டிறைச்சியை உண்டுவிட்டு வரலாம்” என்று கூறினார்.

சுற்றுலாத் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்பதற்கு முன்னர் கேரள மக்கள் தொடர்ந்து மாட்டிறைச்சியை உண்பவர்கள் என்று கூறி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாட்டிறைச்சி தடை விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில் இறைச்சி என்பது எதுவாக இருந்தால் என்ன? சாப்பிடுவது அவரவர் உரிமை, என்று கூறியிருந்தார்.

மேலும் இது குறித்து தான் முடிவு செய்ய முடியாது எனவும், தான் உணவுத்துறை அமைச்சரல்ல, சுற்றுலாத்துறை அமைச்சர் எனவும் அல்போன்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் மூன்றே நாட்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மாட்டிறைச்சி தேவையெனில் இந்தியா வருவதற்கு முன்னர் அவர்கள் நாட்டிலேயே சாப்பிட்டு விட்டு வரலாம் என்று அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தனது நிலைப்பாட்டில் அமைச்சர் மாறியிருக்கிறார் என்று ஊடகங்கள் அல்போன்சை விமர்சித்து வருகின்றனர்.

பிஜேபி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருப்பவர்கள் எந்தத் தரத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இவர் ஒருவர் போதாதா?

இவ்வளவிற்கும் இவர் ஒரு முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி. மத்திய அமைச்சரவையில் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் குவிக்கப்பட்டு வருகின்றனர். நிருவாகத்திறன் உள்ளவர்கள் என்ற அர்த்தத்தில் பிரதமர் நரேந்திரமோடி இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.

அதிகாரிகள், அமைச்சர்கள் ஆனவுடன் அரசியல்வாதிகளாக மாறித்தானே ஆக வேண்டும். ஆனால் பிஜேபி அமைச்சரவையில் இடம் பிடிக்க வேண்டுமானால் கோமாதா, மாட்டுக்கறி என்பதில் தீவிரம் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டுமே! ‘புத்திசாலியான’ அய்.ஏ.எஸ். அதிகாரி அதனை நுட்பமாக அறிந்து கொண்டு இரண்டொருநாளில் அந்தர் பல்டியடித்து, இவ்வளவு அநாகரிகமாக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சினையில் சிக்கலை உண்டாக்கும் விசயத்தில் அசிங்கமாக வாயைத் திறந்துள்ளார்.

அதுவும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கக் கூடியவர் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கக் கூடிய வகையில் இனிதாகப் பேசக் கற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும். இவரோ அதற்கு நேர்மாறாக - சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில், இந்தியாவிற்கு வரத் தயக்கம் காட்டும் வகையில் பேசலாமா?

உலகில் இரண்டாவது பெரிய நாடான இந்தியா பிஜேபி ஆட்சியில் தரை தட்டிய கப்பலாக தரம் குறையப் போவது வெட்கப்பட வேண்டிய ஒன்றே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner