எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இவ்வார "ஆனந்த விகடன்" (6.9.2017) தலையங்கத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் முக்கியமானவை.

"அமைதியின் பாதையே ஆன்மீகம் என்ற மரபான நம்பிக்கையை குலைத்திருக்கிறது வடமாநிலங்களில் ஆன்மீக ஆதரவு என்ற பெயரால் நடந்த கலவரங்கள்.

அரியானாவைச் சேர்ந்த குர்மீத் ராம் ரகீம் சிங் என்ற சாமியார், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளி என்று சிபிஅய் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினையொட்டி நிகழ்ந்த கலவரத்தீ காட்டுத்தீயாக மாறியது. சாமியாரின் ஆதரவாளர்கள் லட்சக்கணக்கில் வீதிகளில் திரண்டு, கலவரத்தில் ஈடுபட்டனர். நீதி மன்றம் அமைந்திருக்கும் பஞ்ச் குலா என்ற ஊரில் தொடங்கிய கலவரம் அரியானா மாநிலத்தைத் தாண்டி, பஞ்சாப், சண்டிகர், டில்லி, ராஜஸ்தான் ஆகிய பல மாநிலங்களுக்கும் பரவியதில் 36க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டவர்கள் படுகாய மடைந்திருக்கிறார்கள். சமீபத்தில் வடஇந்தியா சந்தித்த மிகப்பெரிய மோசமானகலவரம் இது.

தமிழகத்திலும் பல சாமியார்கள் சர்ச்சையிலும், வழக்குகளிலும் சிக்கியிருக்கிறார்கள். இலக்கியங் களிலும், திரைப்படங்களிலும் சாமியார்கள் கிண்டலடிக்கப் படுகிறார்கள். மதத்துக்கு எதிரான கூர்மையான விமர்ச னங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எப்பொழுதும் சாமியார்களுக்கு, சாமியாரிணிகளுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் வன்முறைகள் வெடித்ததில்லை என்பதை நாம் பெருமையுடன் சொல்ல வேண்டிய தருணம் இது. அதே போல், மதநம்பிக்கை என்பது தனிநபர் உரிமை என்பதைத் தாண்டி அரசியலில் சாமியார்கள் ஆதிக்கம் செய்யும் நிலை தமிழகத்தில் இல்லை. பகுத்தறிவு உரம் போட்டு வளர்ந்த மண் தமிழகம் என்பதுதான் நமது கர்வத்துக்குக் காரணம்".
"ஆனந்த விகடன்" ஒன்றும் நமது இயக்க ஏடல்ல - பல நேரங்களில் எதிரும் புதிருமாக இருந்து விவா தங்களை நடத்தியிருக்கிறோம். வடமாநிலங்களில் சாமியார்களின் ஆதிக்கம் - பக்தர் களின் வன்முறை பற்றி விரிவாக எழுதிய "ஆனந்த விகடன்" தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அந்நிலை ஏற்படாமைக்குக் காரணம் - "பகுத்தறிவு உரம் போட்டு வளர்ந்த மண் தமிழகம் என்பதுதான் நமது கர்வத்துக்குரிய காரணம்" என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

பெரியார் என்ன செய்தார் என்று கேட்பவர்கள் உண்டு ; திராவிடர் கழகத்தின் பணிகள் முன்பு போல் இல்லை என்று இரண்டு விதமாகச் சொல்பவர்களும் உண்டு.

இங்கே பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் தோல்வியடைந்து விட்டன - விநாயகர் ஊர்வலத்திற்கு எத்தனை ஆயிரம் மக்கள் கூடுகின்றனர் - எவ்வளவு குடமுழுக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று மார்புப் புடைக்க தோள் தட்டி எழுதுபவர்கள், பேசுபவர்கள் உண்டு. அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது "ஆனந்தவிகடன்".

பக்தி நம்பிக்கையில் உள்ளவர்கள் கூட, தந்தை பெரியார் அவர்களின் அளவிடற்கரிய பணிகளால் பலன் பெற்றிருக்கிறார்கள் - நன்றி காட்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பக்தியை மதத்தோடு தொடர்புபடுத்து பவர்களாக அவர்கள் இல்லை. சாமியார்களின் யோக்கிய தைகளை அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதுகூட, இந்தியா முழுவதும் கலவரங்கள் வெடித்த காலகட்டத்தில் அமைதித் தென்றல் தவழும் பூமியாக தமிழ்நாடு தான் கம்பீரமாகக் காட்சியளித்தது.

கொலை வழக்கில் லோகக் குரு என்று சொல்லப்படுகிற காஞ்சி சங்கராச்சாரியார்கள் கைது செய்யப்பட்ட போதும் தமிழ்நாட்டில் அமைதி, அமைதி, மயான அமைதிதான்! பார்ப்பனர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் தமிழ்நாடு தெளிவாக இருந்தது.

காஞ்சி சங்கராச்சாரியார் மட்டுமல்ல; பிரேமானந்தா, நித்தியானந்தா போன்றவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள். உண்மை என்னவென்றால் நித்தியானந்தாவின் ஆக்கிரமிப்பு களைத் தூக்கி எறிந்திருக்கின்றனர் பொதுமக்கள்.

"மதம் - மதத்தை சேர்ந்தவர்களிடம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது, பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொள்கிறது" என்று கூறினார் தந்தைபெரியார். ("விடுதலை" - 14.10.1971)

இந்தக் கருத்து எவ்வளவு முக்கியமானது, சிறந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தந்தைபெரியார் அவர்களின் முக்கால் நூற்றாண்டுக்கு மேலான பிரச்சாரம், தந்தைபெரியார் அவர்களின் மறைவுக்குப் பிறகும் அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் தலைமையில் தொய்வில்லாத இயக்கத்தின் செயல்பாடுகள்தான் தமிழ்நாட்டின் இந்தப் பக்குவத்திற்கு அடிப்படைக் காரணம்!

இந்தியா தமிழநாடாக மலர்ந்து மணம் வீச வேண்டுமானால் தந்தைபெரியார் அவர்களின் பகுத் தறிவு, சுயமரியாதைத் தத்துவங்கள் இந்தியா முழுவதும் பரவிடுதல் அவசியமாகும்.

மத்தியில் பிஜேபி அதிகாரத்திற்கு வந்த காலந்தொட்டு, மதத் திமிர்வாதம், காவித் தீவிரவாதம் தலைதூக்குவதற்குக் காரணம் சாமியார்களை ஆபத்பாந்தவனாகக் கருதி ஆலோசகர்களாகக் கொண்டிருப்பதுதான்!

Comments  

 
#2 pichaipillaibalakris 2017-10-01 15:03
முழுவதும் ஏற்றுக்கொள்ளக்க ூடிய கருத்து, இதை யாராலும் மறுக்க முடியாது
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 karnan 2017-08-31 17:00
ஆனந்த விகடன்" எழுதியதைப் படியுங்கள் Page 2, Aug 31: இதில் என்ன சந்தேகம்? பெரியார் ஒரு ம பெரும் சமூக சீர் திருத்தவாதி. அவர் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆமாம் போட்டிருந்தாள் முதல் அமைச்சர் அல்லது ஆளுநர் அல்லது ஜனாதிபதி பதவி கூட கிடைத்திருக்கும ், பதவியை விரும்பாத தலைவர். தமிழின பெண்களுக்கு அவர் தந்தைதான். ஆவது பொது அறிவும், ஆங்கில ஞானமும் வியப்பளிக்கிறது . அவரது சமஸ்க்ரித, வேத, குறிப்புகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.
GREAT ADORABLE PERSONALITY. அவரை தந்தை என்றும் பெரியார் என்பதும் சரியே.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner