எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வரும் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய ஆயுஷ் துறை (ஆயுர் வேதத் துறை) அமைச்சர் சிறீபத் நாயக் தாய் சேய் நலம் குறித்த ஒரு கையேட்டை வெளியிட்டுள்ளார். நாட்டில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றன.

இந்த நிலையில் அந்த கையேட்டில் கர்ப்பிணிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், கர்ப்பிணிகள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கருத்தரிப்புக்குப் பின் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. ஆன்மீக சிந்தனைகளைக் கொண்டி ருந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துக்கான மத்திய ஆராய்ச்சிக் குழு இந்த கையேட்டை தொகுத்து வழங்கியுள்ளது. மேலும், அந்த கையேட்டில் படுக்கை அறையில் கடவுள் படங்கள் மற்றும் அழகிய படங்களைத் தொங்கவிடவேண்டும். அதே நேரத்தில் பெண்கள் எப்போதும் ஆன்மீக நினைவில் மூழ்கி இருக்கவேண்டும், இறைவெறுப்பு வேறுபட்ட கருத்துகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துகளை மறுத்துள்ள அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தை சேர்ந்த மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் மருத்துவர் மாலவிகா சபர்வால் கூறுகையில், ‘‘இது அறிவியல் பூர்வமற்ற ஆலோசனை யாகும். இரும்பு மற்றும் புரத சத்து கர்ப்பிணிகளுக்கு அவசியமான ஒன்று. இறைச்சியில் தான் இது அதிகளவில் உள்ளது. தாவரங்களில் இருந்து இது கிடைப்பதை விட இறைச்சியில் இருந்து கிடைப்பதே சிறந்ததாகும்.

கர்ப்பிணிகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குடும்பத்தினர் அவருக்கு உதவிகரமாக இருக்கிறார்கள் என்பதை கர்ப்பிணிகளை நம்ப வைக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய தாம்பத்திய உறவுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பம் நல்ல முறையில் உறுதியான பிறகு தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

கருவைச் சுமக்கும் பெண்கள் சாப்பிடவேண்டியது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

டெலி மீட் எனப்படும் சிறிதாக வெட்டப்பட்ட, நன்கு சமைத்த, அதிக அளவு மசாலாப் பொருள் கலக்காத, கோழி, ஆடு மற்றும் மாட்டிறைச்சி வகை உணவுகளை மதிய உணவாக சாப்பிடலாம் என்று கூறுகிறது. மேலும் மீன் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

இதனால் கருவில் வளரும் குழந்தைக்கு எளிதில் புரதம் கிடைக்கும், அதே நேரத்தில் கருவுற்ற காலத்தில் பெண் களுக்கு எளிதில் உடலுக்குத் தேவையான ஆற்றலை இறைச்சி உணவுகள் உடனடியாகத் தரும்.

கருவுற்ற காலத்தில் மாவுச்சத்துள்ள பொருட்களை குறைவாகப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் தேவையற்ற உடல் எடையை மாவுச் சத்துள்ள உணவுகள் ஏற்படுத்தும். ஆகவேதான், மாவுச்சத்துள்ள பொருட் களைக் குறைத்து புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் போன்ற ஊட்டச் சத்துக்களை தரும் கீரை, மீன், சிறுதானிய உணவுகளுடன் இறைச்சியும் சேர்த்து உண்ணவேண்டும். இந்த உணவு முறைப்படித்தான் காலம் காலமாக நடுத்தர ஏழை மக்கள் பேறுகாலத்தில் சாப்பிட்டு வருகின்றனர். இந்த உணவு முறையானது தாய்க்கு மட்டுமல்ல, சேயின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். சைவ உணவுக்காரர்களும் பேறு காலத்தில் புரதம்  பெற விலை உயர்ந்த இதர உலர் பழங்கள், பாதாம் பருப்பு, முந்திரி போன்ற கொட்டைகளை சமபங்காக சாப்பிடுகின்றனர்.

ஏற்கெனவே அரியானா, ம.பி. போன்ற மாநிலங்களில் முட்டைகளை குழந்தைக்குத் தர தடை விதித்துள்ளதால் ஊட்டச்சத்து கிடைக்காமல் 10:3 குழந்தைகள் பார்வை கோளாறு, முடி உதிர்தல். இரத்தசோகை, எலும்பு வலுவின்மை, ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பாதிப்பு களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இறைச்சி உண்ணாமல் பிறக்கும் ஏழை மக்களின் குழந்தைகள் மூளைவளர்ச்சி பாதிக்கப்படும் என்று தெரிந்தும் இவ்வாறு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு வருவது கண்டிக்கத் தக்கதாகும்.

பி.ஜே.பி. என்பது பிற்போக்குக் கொள்கையைக் கொண்ட ஒரு மதவெறி அமைப்பு. அறிவியலுக்கு அங்கு இடமில்லை. பிரதமரே புராணப் பல்லவி பாடிக் கொண் டிருந்தால், அவர்தம் அமைச்சரவையில் உள்ளவர்கள் பஜனையைத்தானே பாடுவார்கள்.

மாட்டு மூத்திரத்தை கிருமி நாசினியாக மருத்துவமனை களில் பயன்படுத்தவேண்டும் என்று சொல்வதெல்லாம் எவ்வளவுப் பெரிய விபரீதம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51-ஏ(எச்) என்ன கூறுகிறது?

மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்கிறது. ஆனால், அமைச்சர்களோ, அதன் அடிவேரை வெட்டு கிறார்களே - வெட்கக்கேடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner