எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘பல்வேறு சந்தேகங்கள், பிரச்சினை களுக்குத் தீர்வு காண முயலாமல், ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிடவும், சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்தவும், அகில இந்திய மாணவர் சேர்க்கையை முறைப்படுத் தவும், நாடு தழுவிய அளவில் ஒரு பொது நுழைவுத் தேர்வுக்குப் பரிந்துரைத்தது  நாடாளு மன்ற நிலைக் குழு (சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்: 92 ஆவது அறிக்கை). அதன்படிதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதேசமயம், இந்தத் தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கவும், அந்த நிலைக்குழுப் பரிந்துரைத்தது. ஆனால், இவற்றை உச்சநீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

மாடர்ன் பல் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கில், ‘‘மருத்துவ மாணவர் சேர்க்கை மத்திய அரசின் பட்டியலில் வரு வதல்ல. பொதுப் பட்டியலில் உள்ள விஷயம். எனவே, இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அவசியம். இத்தகைய சூழல் எழும்போது மத்திய அரசும், சம்மந்தப்பட்ட மாநில அரசும் இணக்கத்துடன், சுமூகமாகவும் தீர்த்துக் கொள்ள வேண்டும்‘’ என்று இதே உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.

‘நீட்’ தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாக்கள் மூன்று மாத காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்தும் எந்தவிதக் கேள்வியும் எழுப்பப்பட வில்லை. இந்நிலையில், மருத்துவக் கல்விச் சேர்க்கை பொதுப் பட்டியலில் வருமா வராதா, மாநில அரசுக்கு உரிமை உண்டா இல்லையா உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் முயல வேண்டும்.’’

- முனைவர் நா.மணி, அமைப்பாளர்,

கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு.

இந்தக் கடிதம் ‘தமிழ் இந்து’ (15.6.2017) ஏட்டில் வெளிவந்துள்ளது.

இந்தக் கடிதம் துல்லியமான தகவல்களை வெளி யிட்டதோடு அல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ‘நீட்’டை எதிர்க்கவேண் டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

நுழைவுத் தேர்வு குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டிருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பிரச்சினையில் மத்திய அரசு மாநில அரசின் கருத்தைக் கேட்டுப் பெறவில்லை.

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசும், மாநில அரசும் இணக்கத்துடன் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்தாண்டு கூறி யதே -அது என்னாயிற்று என்பதும் விழுமியமான வினாவாகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மத்திய பி.ஜே.பி. அரசு ‘நீட்’ பிரச்சினையில் தானடித்த கடும் மூப்பாகவே நடந்துகொண்டுள்ளது என்பதில் அய்யமில்லை.

இதில் உச்சநீதிமன்றமும் முன்னுக்குப்பின் முர ணாகவே நடந்துகொண்டுள்ளது என்பது கசப்பான உண்மையே!

இறுதியாக முத்தாய்ப்பான கருத்தை அந்தக் கடிதம் எடுத்து வைக்கிறது.

‘நீட்’ குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதா மூன்று மாத காலமாக மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளதே - இது அரசுக்கேற்ற நன்னடத்தை தானா?

மாநில அரசும் தன் கடமை முடிந்துவிட்டது என்று கடையைக் கட்டிக்கொண்டு விட்டது.

வெகுமக்கள் எழுச்சியே வெடிகுண்டைவிட பலமானது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner