எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசின் மாட்டு இறைச்சி தடை உத்தரவுக்குப் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வகையில் கோவாவில் இஸ்லாமியர்களும், கிறிஸ்த வர்களும் இணைந்து போராடத் தொடங்கியுள்ளனர்.  இப்போராட்டத்திற்குப் பாஜகவின் கூட்டணியான கோவா முஸ்லிம்களும், ஆர்சி கிறிஸ்தவ தேவாலயமும் இணைந்து  ‘‘மாட்டு இறைச்சிக்காக கோவா - கோவா வுக்காக மாட்டு இறைச்சி’’ என்ற புதிய பொது சமுதாய அமைப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக தேவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பட்டது. கோவாவில் உள்ள குவரெஷி இறைச்சி வர்த்தக சங்கம் சார்பில் மும்பை உயர்நீதிமன்ற கோவா அமர்வு முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கால்நடை விற்பனை தொடர்பாக கடந்த மாதம்

26 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட புதிய அறி விப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவில் மத்திய - மாநில அரசுகள் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப் பட்டுள்ளனர்.

மத்திய அரசின் இந்த உத்தரவால் கோவா மாநில இறைச்சித் தொழில் மற்றும் சுற்றுலா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மனோகர் பாரிக்கர் அமைதியாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இறைச்சி வர்த்தகர் சங்கப் பிரதிநிதியான அவ்னர் பெபாரி கூறுகையில், ‘‘இந்த அறிவிப்பு எங்களுக்கு மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மத அடிப் படையிலான நம்பிக்கைக்கு இது எதிரானதாகும். இன்னும் சில நாள்களில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகள் வரவுள்ளன. இந்தப் புதிய அறிவிப்பால் பிரச்சினைகள் எழ ஆரம்பித்துள்ளன’’ என்றார்.

கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் கோவா - கர்நாடகா எல்லையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த அமைப்பு கோவாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் இஸ்லாமிய சமுதாய பிரதிநிதி அப்துல் மதின் என்பவர் கூறுகையில், ‘‘மாட்டு இறைச்சி தொடர்பாக மாநில அரசு எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை. அதன் பிறகு தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதர மாநில அரசுகள், முதல்வர்கள் மாட்டு இறைச்சி தடைக்கு எதிராக கடிதங்கள் எழுதி வரும் நிலையில்,  கோவா அரசின் செயல்பாடு எங் களுக்குக் கவலையை ஏற்படுத்தியது’’ என்றார்.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சேவியோ பெர்னாண்டஸ் கூறுகையில், ‘‘இதன் பின்ன ரும் நாங்கள் அமைதியாக இருந்தால், அது எங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். தேவாலய நிர்வாகம்தான் இந்த அமைப்புக்கான அலுவலகமாகும். இதில் இஸ்லாமிய பிரதிநிதிகள், கோவா இறைச்சி வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

நாட்டின் மதசார்பின்மையைத் தாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்துப் போராட நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். எங்களது தேவைக்கு ஏற்ப நாங்கள் போராட உரிய நேரம் வந்துள்ளது. இது தொடர்பாக இரு பிரிவினரும் நிறைய பேச வேண்டி யுள்ளது. மாட்டு இறைச்சி விலை குறைந்த உணவாக கோவாவில் உள்ளது. வார இறுதி நாள்களில் பெரும் பாலான வீடுகளில் பிரத்தியேக உணவாக மாட்டு இறைச்சி விளங்குகிறது’’ என்றார்.

ஆப்பதனை அசைத்துவிட்ட கதையாகி விட்டது - பி.ஜே.பி. தலைமையிலான அரசுக்கும் - சங் பரிவார்க் கூட்டத்துக்கும்!

மதப் போதை தலைக்கேறினால் மட்டரகமான புத்திதானே ஆட்கொள்ளும்! அடுத்தவர் உரிமைகளை மதிக்கும் மாண்பு இந்து மதத்தின் எந்த மூலையில் தேடி னாலும் காணக் கிடைக்காத அரும்பொருள் அல்லவா!

இந்து மதம் என்றாலே சமத்துவ நோக்குக்கு எதிரானது. பிறப்பிலேயே ஒருவன் பிராமணனாகவும், இன்னொருவன் சூத்திரனாகவும், பஞ்சமனாகவும் பிறக்கிறான் என்று சொல்லுவதிலிருந்தே - அது சமத் துவத்துக்கு முற்றிலும் எதிரான மூர்க்க - மூடக் கொள்கையைக் கொண்டது என்பது விளங்கிட வில்லையா?

மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்க வழி செய்யட்டும் மோடி அரசு. மற்றபடி எந்த உணவை எவர் சாப்பிட்டால் இவர்களுக்கு வந்த கேடு என்ன - இழவுதான் என்ன?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner