எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘உ.பி.யில் பா.ஜ.க. பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று எழுந்த முழக்கம் இப்போது மறுபடியும் ஒலித்து உடனடியாக ஓய்ந்தும் போயிற்று.

சங் பரிவார் சேனையில் வி.எச்.பி., பஜ்ரங் தள், ஆர்.எஸ்.எஸ்., என்பன போன்று 36 அமைப்புகள் இருக்கின்றன! இந்த 36 அமைப்புகளில் எத்தனை தொண்டர்கள் இருப்பார்கள்? அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமையின் கட்டளைப்படி செயலாற்றுபவை. இவற்றை நிர்வகிக்க பண பலம், படை பலம், அதிகார பலம் என முப்பெரும் பலங்களும் பா.ஜ.க. கைவசம் இருக்கின்றன. ஆக, அசுர பலம் பொருந்தியதாக பா.ஜ.க. அரசு இருக்கிறது. போதாக் குறைக்கு மோடியின் காந்த சக்தி!

அபரிமித பலமும், நாடாளுமன்றப் பெரும்பான்மையும் ஒரே கட்சியிடம் குவிவது ஜனநாயகத்துக்கு உகந்த தல்ல. படிப்படியாக, ஒட்டுமொத்த இந்தியாவின் செயல் பாடுகளையும் மத்தியில் இருந்தே இயக்க நினைக்கிறார்கள். ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்... உறவுக்குக் கை கொடுப் போம்...’ என்ற நிலையிலுள்ள மாநிலங்களை நிலை குலைய வைக்கும் விதமாக மத்திய அரசே மொத்த அதிகாரம் செலுத்த நினைக்க ஆசைப்படுவது ஜனநாயகத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் ஆபத்தானது அல்லவா? இதனால் ஒவ்வொரு மாநிலத்திடமும் உள்ள தனித்தன்மை மறைந்து போய்விடாதா?

இது ஆரம்பக் கட்டம். மாநிலக் கட்சிகள் அனைத்தும் இப்போதே விழித்துக் கொண்டு, அதிகாரக் குவிப்பை மய்யப்படுத்தும் இந்தப் போக்கை எதிர்க்காமல் போனால்,  மதச்சார்பற்ற அரசு என்ற வார்த்தைகூட மறைந்து போய் மதச் சார்புள்ள அரசாக மத்திய அரசு மாறிவிடும் அபாயமும் இருக்கிறது. அப்படியொரு நிலை வந்தால், முன்காலத்தில் இருந்த சர்வாதிகார ஆட்சியாக மாறுவதற்கான சாவியை நாமே அவர்கள் கையில் தந்ததுபோல ஆகிவிடும்.

இப்போது இருக்கும் காலகட்டம் மிகச் சிக்கலானது. பதவி ஆசையைத் துறந்து, ஈகோவை விட்டொழித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும். பழைய தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கோரி, நேர்மையான ஆட்களை வேட்பாளராக நிறுத்தி வெற்றி களை ஈட்டவேண்டிய முக்கியமான காலகட்டம் இது. எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்தால்தான் இந்த மாற்றம் சாத்தியம். ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை மனதில் பதித்துக் கொண்டு செயல் புயலாக எதிர்கட்சிகள் மாறினாலன்றி அவர்களுக்கும் எதிர்காலமில்லை; நாட்டுக்கும் நல்லதில்லை.’’

- இவ்வாறு தலையங்கம் தீட்டியிருப்பது ‘கல்கி’ வார இதழ் (14.5.2017) என்றால், எளிதாக நம்ப முடியாதுதான்!

ஆனால், ‘கல்கி’தான் இவ்வாறு எழுதியிருக்கிறது. ‘கல்கி’யாலேயே தாங்க முடியாத அளவுக்கு, சீரணித்துக் கொள்ளமுடியாத அளவுக்கு நரேந்திர மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ.) சர்வாதிகாரத்தின் உச்சியை நோக்கி விரைந்து  கொண் டுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் அளவுக்கு எகிறிப் பாயவில்லையா? இப்படி ஒரு தீர்ப்பைக் கூற உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளை நோக்கி எடுத் தெறிந்து பேசியதும் இதற்குமுன் நடந்ததுண்டா? ஆக, நீதித்துறையையும் தம் கையடக்கத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் மோடி தலைமையிலான அரசு திளைத்திருப்பதை அறிய முடிகிறது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் விவசாயிகள் பிரச்சினைக்காக 41 நாள்கள் போராடுகிறார்கள் - பல வடிவங்களில் போராட்ட யுத்திகளை மாற்றினார்கள். பிச்சை எடுத்தார்கள் - கோவணம் கட்டினார்கள் - மொட்டையடித்துக் கொண்டார்கள் - சிறுநீர் குடித்தார்கள் - ஏன் நிர்வாணமாகவே போராடும் நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டனர்.

இவ்வளவு போராடியும் ஒரு பிரதமர் அந்த விவசாயி களை சந்திக்க மறுக்கிறார் என்றால், அதன் பொருள் என்ன? போராட்டம் நடத்துபவர்களைப் பிரதமர் சந்திப்பது இல்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் பிரதமருக்கு வக்காலத்து வாங்குகிறார் என்றால், இதன் நிலைமை என்ன?

ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இல்லை என்பதுதான் இதன்மூலம் அறியப்படும் நிகர உண்மையாகும்.

மத்திய நிர்வாக முறையில்கூட எல்லாத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் நேரிடையாகத் தன்னிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்கிற நடைமுறைகள் எதனைத் தெரிவிக்கின்றன?

பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி இந்த இருவரும்தான் இந்தியா என்ற நிலைக்கு நாடு அதிவேகத்தில் ஓடிக் கொண்டுள்ளது.

இந்த நிலையைத்தான் ‘கல்கி’ அதற்கென்றுள்ள அணுகுமுறையோடு சொற்களைக் கையாண்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த சர்வாதிகார வெள்ளத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்குக் கட்டாயமாகவே உள்ளது.

‘கல்கி’யாலேயே பொறுக்க முடியவில்லை - அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பது இந்தக் காலகட்டத்தில் மிக முக்கியமான வினாவாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner