எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான  ‘நீட்’ தேர்வு, நாடு முழுவதும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்வு, இந்தி, ஆங்கிலம், தமிழ், வங்காளம், மராத்தி உள்பட, 10 மொழிகளில்  நடந்தது. இதில், இந்தி வினாத்தாளைத் தவிர, மற்ற மொழி வினாத்தாள்கள் வேறுபட்டு இருந்தன. மேலும் வங்காள மொழி வினாத்தாள் மிகக் கடினமாக இருந்ததாகவும், எழுத்துப் பிழை, சரியான சொல்லாடல்கள் இல்லாத வகையில் கேள்விகள், குழப்பமாக இருந்தாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த  ஒரு விழாவில், மத்திய மனிதவள மேம் பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கலந்துகெண்டார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘ஏற்கெனவே நடந்த ‘நீட்’ தேர்வுகளில் முறை கேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சமீபத்தில் நடந்த தேர்வுக்கு, உடைப் பிரச்சினையில், கடினமான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.  இதில், ஒரு சில மாணவ, மாணவியருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது; கேரளாவில் ஒரு மாணவிக்கு நடந்த கெடுபிடி குறித்து, சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்கள்,  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தி, ஆங்கில வினாத் தாள்களைவிட, மற்ற மாநில மொழி வினாத்தாள்கள் மாறுபட்டு இருந்த தாகவும் புகார் கூறப்பட்டிருக்கிறது.  இந்தப் பிரச்சினைக்கு என்ன காரணம் என, விளக்கம் அளிக்கும்படி, சி.பி.எஸ்.இ.,யிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. விளக்கம் அளிக்கப்பட்டதும், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும்'' என்று பேசியுள்ளார்.

இதற்கிடையே மேற்கு வங்க மாநில அரசு இது குறித்து கருத்து தெரிவித்தபோது, ‘‘‘நீட்’ தேர்வை நாங்கள் ஆரம்பம் முதலே ஆதரிக்கவில்லை. இந்நிலையில், வங்கமொழியில் வழங்கப்பட்ட கேள்வித்தாள்கள் மிகவும் கடினமாகவும், குழப்ப மாகவும் இருந்தது தெரியவந்தது. இதன் எதிரொலி கட்டாயமாக மாநிலத்தில் இருந்து மருத்துவத்திற்குத் தேர்வாகும் வங்க மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இது குறித்து மேற்கு வங்க அரசு மிகவும் அக்கறையுடன் அணுக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக நாங்கள் மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ வாரியத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்‘’ என்று மேற்கு வங்க அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட தமிழ் வினாத்தாளுக்கும், ஆங்கில வினாத்தாளுக்குமிடையே வேறுபாடு இருந்துள்ளது.

‘நீட்’ தொடக்க முதலே கடும் சர்ச்சைக்குரிய தாகவே இருந்து வருகிறது. தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகி விட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை - சமூகநீதிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. ஆனால், சமூகநீதி என்றாலே ஒவ்வாமை உணர்வு கொண்ட பார்ப்பனீய மத்திய பி.ஜே.பி. அரசு மத்தியில் வந்த நாள் முதலாய் சமூகநீதியின் வேரில் வெந்நீரை ஊற்றும் ஒரு வேலையில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. அதில் ஒரு திட்டமிட்ட முயற்சிதான் ‘நீட்’ தேர்வு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொடக்க முதல் திராவிடர் கழகம் இதனை எதிர்த்து வந்துள்ளது. மற்ற கட்சிகளும் எதிர்த்துள்ளன. மாநில அரசு சட்டம் ஒன்றையே நிறைவேற்றியது.

‘நீட்’ தேர்வு முடிவு - அதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் யார் யாருக்கெல்லாம் இடம் கிடைத்தது; யார் யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை என்ற முடிவு தெரிந்த பிறகுதான் ஒரு பிரளயம் நடக்க உள்ளது என்பது மட்டும் உண்மை.

இந்தக் குளறுபடிகளுக்கு நீதிமன்றமும் தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவே முடியாது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner