எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘விளையாட்டாக’த்தான் வாழ்வியல் சிந்தனையை எழுத ஆரம்பித்தார் திராவிடர் கழகத் தலைவர். அது இந்த அளவு மக்களைச் சென்றடையும், மக்களை ஈர்க்கும் என்று ஆசிரியர் அவர்களே எதிர்ப்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

பெரியார் என்றால் கடவுள் ஒழிக! பார்ப்பான் ஒழிக! மதம் ஒழிக! ஜாதி ஒழிக! என்று எதை எடுத்தாலும் ஒழிக, அழிக! என்று குரல் கொடுக்கும் ஓர் அழிவு வேலைக்காரர் என்ற பிரச்சாரம் திட்டமிட்டே பரப்பப்பட்டது.

உண்மைதான் - ஒழிக, அழிக! என்று அந்தப் பகுத்தறிவுப் பகலவன் சொன்னது உண்மைதான். அந்த ஒழிகவில்தானே ஆக்கம் இருந்தது - இருக்கிறது. அது அறிவுப்பூர்வமானது என்பதுதானே உண்மை - உண்மையிலும் உண்மை.

கடவுள் ஒழிக என்றால், அதனால் மனிதனின் அறிவு விரிந்தது, தன்னம்பிக்கை விழித்தது. காலம், பொருள் விரயம் தகர்ந்தது.

மதம் ஒழிக என்றால், அதனால் மனிதம் மலர்ந்தது - மனிதப் பகைமையொழிந்தது - ‘மதி மயக்கம்‘ அகன்றது.

ஜாதி ஒழிக என்றார் - அதன் விளைவாக பேதமற்ற பேருலுகம் பிறக்கிறது - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ வாசல் திறக்கிறது.

ஆம்! தந்தை பெரியார் அவர்களின் அழிவுப் பணி ஆக்கத்திற்கான ஆகாயம் அளவு உயர்ந்த மனிதத்தின் பெரும் பாய்ச்சல்.

இந்த நிலைகளை வாழ்வியலோடு பொருத்திப் பார்க்க வேண்டாமா? கல்வியும், வேலை வாய்ப்பும், கைநிறைய பணப் புழக்கமும் ஏற்பட்டு விட்டால் போதுமா?

இவற்றை இருபுறமும் கரையமைத்து வாழ்வினைச் செம்மைப்படுத்திக் கொள்ளவேண்டாமா? பொருளாதாரம் வளர்ந்தது என்பதற்காக அதிதீ நுகர்வுக் கலாச்சாரப் பெரும் பள்ளத்தில் வீழலாமா? விரைவு உணவு (பாஸ்ட் புட்) என்ற பெயரால் வியாதியை விலை கொடுத்து வாங்கலாமா?

அறிவியல் அன்றாடம் அள்ளி அள்ளித் தருகிறதே - அதனை எப்படி நாம் பயன்படுத்தி வாழ்வது என்ற பார்வை வேண்டாமா?

பிள்ளைகள் வளர்ப்பு என்பது எதிர்காலத்தின் பாது காப்பு அல்லவா! அதைப்பற்றிய அரிய தகவல்களை நாம் எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம்?

கழிவறை சென்று வந்தால் கையை சோப்பால் நன்கு கழுவவேண்டும் என்று சொல்லுவது படிக்கும்போது சாதாரணமானதாகத் தோன்றலாம்.

ஆனால், அதனை எத்தனைப் பேர் கடைபிடிக்கிறோம் - எத்தனை வீட்டில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப்படுத்துகிறோம்?

சாப்பிடுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுவதா? சாப்பாட் டுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதா? என்பது முதல் பல தகவல்களை படித்தவர்கள்கூட சரியாகத் தெரிந்து வைத் துள்ளார்களா?

பொழுதையும், பொருளையும் எப்படி திட்டமிடுவது? நாம் விரும்பும் இலக்கை எட்டுவது எப்படி? இவை போன்ற அன்றாட மற்றும் தொலைநோக்குச் சிந்தனைகள் குறித்து உலகில் ஏராளமான நூல்கள் வெளிவந்து கொண்டுள்ளன. அவற்றை எல்லாம் அறிமுகப்படுத்தியுள்ளார் தமிழர் தலைவர்.

இவற்றையெல்லாம் ஏராளம் படித்துத் தேக்கி, அவற்றின் சாரத்தைப் பிழிந்தெடுத்து, சக மனிதர்களுக்காகக் கொடுப் பது மிகப்பெரிய மனிதத் தொண்டு.

அதற்காக செலவழிக்கும் பணம், செலவழிக்கும் நேரம் - அதில் செலவழிக்கப்படும் உழைப்பு - அசாதாரணமான வையல்லவா!

மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்ற தந்தை பெரியார் அவர்களின் வாழ்வின் இலக்கணத்தை வளமாக அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் படிக்கிறார், அன்றாடம் படிக்கிறார் - அன்றாடம் பேசுகிறார் - அன்றாடம் எழுதுகிறார்.

தந்தை பெரியார்பற்றியும், திராவிடர் கழகம்பற்றியும் வேறுவிதமாகக் கணக்குப் போட்டவர்கள் மத்தியில் ஆசிரியர் அவர்களால் எழுதப்படும் வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம்மீது புதிய பார்வையைப் பாய்ச்சுகின்றன.

இந்தக் கட்டுரைகள்மூலம் ஆயிரக்கணக்கான புதியவர் கள் பெரியார் கொள்கையின் தோப்புப் பக்கம் நெருங்கி வந்து கொண்டுள்ளனர். அத்தகையவர்களை வெகுவாகப் பட்டியலிட முடியும் - படித்தவர் மனந்திறந்து பாராட்டி எழுதவும் செய்கிறார்கள்.

திருமணங்களுக்கு இந்நூலைப் பரிசளிப்புக்குரிய முதன்மை நூலாகக் கருதுகிறார்கள். பல்கலைக் கழகங்களில் ஆசிரியரின் ‘‘வாழ்வியல் சிந்தனைக்‘’ கட்டுரைகள் பாடத் திட்டங்களாக இடம்பெற்றுள்ளன என்பது அவர்தம் அயராப் பணிக்கான அங்கீகாரமே!

ஏப்ரல் 2003 இல் அவர் எழுதத் தொடங்கிய வாழ்வியல் சிந்தனை ஏப்ரல் 2017 இல் ஆயிரமாவது கட்டுரையாக வளர்ந்தோங்கி இத்திசையில் புதிய சாதனையைத் தொட்டிருக்கிறது.

வாங்கிப் படியுங்கள் -

வாழ்வின் ருசியை நுகருங்கள்!

நமக்காக ஒருவர் படிக்கிறார் - படித்துக் கொண்டே இருக்கிறார் - எழுதுகிறார் - எழுதிக் கொண்டே இருக்கிறார் என்பது மட்டும் எல்லோருக்கும் நினைவில் இருக்கட்டும்!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner