எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டில்லியிலே வழக்குரைஞர் அய்யாக்கண்ணு தலைமை யிலே தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 5 வார காலமாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நதிநீர் இணைப்பு, காவிரிப் பிரச்சினை, காவிரி நீர்த் தடைபட்டதால் தமிழக விவசாயத்துக்கும், விவசாயி களுக்கும் ஏற்பட்ட இழப்பு - நெருக்கடிகள் - தற்கொலைகள் - மத்திய, மாநில அரசுகள் செய்யவேண்டிய உதவிகள் இவற்றையெல்லாம் முன்னிறுத்தி விதவிதமான வடி வங்களில் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் போராட் டங்களை நடத்தி வருகிறார்கள். மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகைகளில் எல்லாம் நடத்தி வருகிறார்கள். நிர்வாணப் போராட்டம் நடத்தவேண்டிய அளவுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பெண்கள் கூட போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.

அவர்களுக்கான கோரிக்கைகள் பல உண்டு. எனினும் போராடுகின்ற எங்களை அழைத்துப் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்பதுதான் கோரிக்கைப் பட்டியலில் முதல் இடத்தை இப்பொழுது பிடித்து விட்டது.

ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் என்று சொல்லிக் கொள்பவர் பல வாரங்களாக தலைநகரில் போராடும் விவசாயிகளை சந்திக்க மறுப்பது என்பது அசல் அராஜகம் - எதேச்சதிகார மனப்பான்மை கொண்டதாகும்.

கேவலம் விவசாயிகளை 56 அங்குல அகன்ற மார்பள வுள்ள, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர் ஆடை அணிந்து குதூகலிக்கக் கூடிய ஒரு பிரதமர் சந்திப்பது அவரது தகுதிக்கு இழுக்கு என்று முடிவு எடுத்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் சொன்ன பதில், பிரதமரைப்பற்றி கடுமையாக விமர்சிக்கும் இடத்திற்கு உந்தித் தள்ளியுள்ளது.

போராளிகளைச் சந்திக்கும் பழக்கம் பிரதமர் மோடி யிடம் எப்பொழுதுமே கிடையாது என்பதுதான் அந்தப் பதில்! இதைவிட ஒரு பிரதமரை மக்கள் மத்தியில் தோலு ரிக்கும் கருத்து வேறு ஒன்று இருக்க முடியாது.

நான் தேநீர் விற்றவன், டீக்கடைக்காரன் என்று கித்தாப் பாகச் சொல்லிக் கொண்டு, ஏழை மக்களின் பங்காளன் என்ற சித்திரத்தை மக்கள் மத்தியில் பதிய வைத்து, அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தின் உச்சியில் அட்டாணிக்கால் போட்டு அமர்ந்திருக்கக்கூடிய நரேந்திர தாமோதர தாஸ் மோடி இப்பொழுது தன் உண்மை முகத்தைப் பளிச்சென்று காட்டி விட்டார்.

இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்லுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால், கடைந்தெடுத்த முறையில் கழிசடையாக உதாசீனப்படுத்தப்படும் தொழில் விவசாயமே!

பார்ப்பன இந்து மதத்தின் பார்வையில் விவசாயம் ஒரு பாவத் தொழில். அந்தத் தொழிலைப் பெரும்பாலும் செய்யக்கூடியவர்களே - இந்து சமூக அமைப்பில் தாழ்த் தப்பட்டவர்கள் - ஒதுக்கப்பட்டவர்கள் - பஞ்சமர்கள் தீண்டத்தகாதவர்கள்.

இந்து ராஜ்ஜியம்பற்றி கனவு காண்பவர்கள், தங்களுக் குக் கிடைத்திருக்கும் அதிகாரத்திற்குட்பட்டு விவசாயத்தை வெறுத்து ஒதுக்குவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?

மாநில அரசை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, மத்திய அரசை எதிர்த்து டில்லிக்கு வந்து போராட வேண்டுமா என்று ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்‘ எழுதுகிறது (14.4.2017).

மாநில அரசையும் எதிர்த்து அவர்கள் போராடவில் லையா? தொடர்ந்து போராடிக் கொண்டுதான் வந்தார்கள். ஆனால், வறட்சி நிவாரண நிதியைக் கொடுக்க வேண்டியது யார்? வெள்ளப் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு அது கேட்ட நிதியைக் கொடுக்கத் தவறியது யார்?

அதிலும்கூட மாநிலத்திற்கு மாநிலம் பாரபட்சம் காட்டுபவர்கள் யார்? கருநாடக மாநிலத்திற்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது என்றால், அங்கே கொடுக்கப்படும் நிதியின் அளவு என்ன? அதேநேரத்தில், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்குக் கொடுத்திருக்கும் தொகை என்ன?

இவற்றையெல்லாம் அறிந்து வைத்துள்ளவர்கள்தான் இந்தியாவின் தலைநகரத்தை தங்கள் போராட்டத்திற்கு மய்யப் புள்ளியாக தேர்வு செய்தனர் என்பதை ‘விஜய பாரதங்கள்’ புரிந்துகொள்ளவேண்டும்.

உத்தரப்பிரதேச தேர்தலின்போது, பி.ஜே.பி. வெற்றி பெற்றால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி கொடுத்தவர் பிரதமர் மோடிதானே!

அதன் பொருள் என்ன? மோடி பிரதமர் என்றால், இந்தியா முழுமைக்கும்தானே! விவசாயப் பிரச்சினை தமிழ்நாட்டில் இல்லையா? பிரதமர் மோடியின் வாக்குறுதி தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தக் கூடியதுதானே!

இதில் என்ன கொடுமை என்றால், நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று சொல்லுவார்கள் அல்லவா! பி.ஜே.பி. நரியோ விவசாயப் போராளிகளை விழுந்து பிடுங்கிக் குதறுகிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்‘ - விவசா யப் போராளிக் குழுவின் தலைவராக இருக்கக்கூடிய அய்யாக்கண்ணு அவர்களைப்பற்றித் தாறுமாறாக கொச்சைப்படுத்தி எழுதுகிறது.

முழுநேரக் கட்டப் பஞ்சாயத்து ஆசாமி, சிவாஜி கணேசனை விஞ்சும் நடிகர், கோமாளி, மாஃபியாவின் தலைவர் என்றெல்லாம் வசைபாடுகிறது இந்துத்துவாவின் வார ஏடான ‘விஜயபாரதம்'.

‘நல்லது!’ தமிழ்நாட்டு மக்கள் இந்த உயர்ஜாதி மேல் தட்டு மனுதர்மக் கூட்டத்தைப்பற்றி - கோடானு கோடி விவசாயிகள் ஒரு திட்டவட்டமான - தெளிவான முடிவுக்கு வர அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டனர்.

பி.ஜே.பி.க்கு ‘வாய்க்கரிசி’ போடக் காத்துக் கொண்டிருக் கிறார்கள் விவசாயிகள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner